×

30 வயது இளைஞர்களுடன் போட்டி போடும் மூளை திறனுடன் 80 வயது சூப்பர் ஏஜர்கள்: சர்வதேச ஆய்வுகளில் ருசிகர தகவல்

சிறப்புச்செய்தி
முதுமை என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு நமது அன்றாட வாழ்வில் பல்ேவறு சம்பவங்கள் நடந்து வருகிறது. உழைக்கும் திறன் இழந்து, உடல்தளர்ந்தாலும் தன்னை உயர்த்தி பிடிக்கும் குடும்பம் இருந்தால் முதுமை என்பது வரம். ஓடாய் இழைத்து மாடாய் உழைத்து குடும்பத்தை காப்பாற்றிய நிலையில், உறவுகள் நம்மை புறக்கணித்தால் முதுமை என்பது சாபம். இப்படிப்பட்ட சூழலில் உலகளவிலும், இந்தியாவிலும் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகளின் இந்திய மக்கள் தொகை நிதியம், சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து முதியோர் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் முதியோர் பராமரிப்பு சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த விவரங்களை அளித்துள்ளது. அதோடு இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10ஆண்டுகளில் 41சதவீதம் வரை இந்த உயர்வு உள்ளது. வரும் 2050ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 20சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பார்கள்.

2046ல் இந்தியாவில் 15வயது வரையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட, முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி இந்திய முதியவர்களில் 40சதவீதம் ேபர், ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். 18.7சதவீதம் பேர் எந்தவித வருமானமும் இல்லாமல் இருக்கிறார்கள். இது முதியவர்களின் வாழ்க்கை தரத்திலும் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு 2022 மற்றும் 2050க்கும் இடையே 80வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 279சதவீதம் உயரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க இன்றைய இளைஞர்களை விட தற்ேபாது 80வயதை நெருங்கும் முதியவர்கள் பெரும்பாலானோர் புத்திக்கூர்மை, நினைவாற்றல் உள்ளவர்களாக உள்ளனர். குறிப்பாக நோய் பாதிப்புகள் கூட அவர்களுக்கு பெரிய அளவில் இல்லை என்று சர்வேதேச நிறுவனங்கள் நடத்திய சூப்பர்ஏஜர் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 69வயது முதல் 86வயது வரையுள்ள முதியவர்களிடம் சர்வதேச அளவில் இந்த ஆய்வுகள் நடந்துள்ளது. இதில் அவர்களில் 70சதவீதம் பேருக்கு மனநலக்கோளாறுகள் இல்லை. நரம்பியல் சார்ந்த பிரச்னைகளும் இல்லை. 30வயதுக்கு உட்பட்டவர்களுடன் போட்டியிடும் நினைவாற்றல் மற்றும் செயல் திறனுடன் அவர்களின் மூளை இருந்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர்களின் மரபியல் மற்றும் சீரான வாழ்க்கை முறையே முக்கிய காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து முதியோர் நலன்சார்ந்த உளவியல் மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:
69வயது முதல் 80வயதுக்கு உட்பட்ட நிலையில் நம்மிடையே வாழும் முதியவர்களை ‘சூப்பர் ஏஜர்கள்’ என்ற வகையில் குறிப்பிட்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் முதியவர்களுக்கும் பொருந்தும். நமது நாட்டிலும் இதற்கு உதாரணமாக ஏராளமானோர் உள்ளனர். தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், சராசரி மனிதர்கள் என்று பலர் இதற்கு உதாரணமாக உள்ளனர். உண்மையில் இந்த வயதுக்கு உட்பட்டவர்களின் பால்யகால வாழ்க்கை என்பது மிகவும் கட்டுப்பாடுகளுடன் இருந்துள்ளது.

குறிப்பாக இவர்கள் கூட்டுக்குடும்பத்தில் தனது இளமைக்காலத்தையும், இல்லற வாழ்க்கையையும் கழித்தவர்கள். அலுவலக பணிகளுக்கு சென்றாலும் விவசாயம் போன்ற உடல்உழைப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதிகாலையில் கண்விழிப்பது, தோட்ட வேலைகளை செய்வது, மாசுபடாத காற்றை சுவாசிப்பது, வாகனங்கள் இல்லாமல் கால்நடையாகவோ அல்லது சைக்கிளிலோ தொலை தூரங்களுக்கு செல்வது என்று அவர்களது அன்றாட நிகழ்வுகள் நடந்துள்ளது. அதேபோல் குடும்பத்தில் பெரும் பிரச்னைகள் என்பதும் இல்லாமல் இருந்துள்ளது. அப்படியே இருந்தாலும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் சுலபமாக அதை எதிர்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற சீரான வாழ்க்கை முறையானது தற்போது 80வயதை நெருங்கும் நிலையிலும் அவர்களுக்கு மனம் மற்றும் மூளைக்கு உறுதியை தந்துள்ளது. இதனால் அவர்களின் உடல் சற்று தளர்ந்தாலும் மனதும், மூளையும் 30வயது இளைஞர்களுடன் போட்டியிடும் நிலையில் உள்ளது. ஏன்ட, அதற்கும் மேலான திறனுடன் விளங்குகிறது. இப்படி சூப்பர் ஏஜர்கள் என்று நாம் கொண்டாடும் முதியவர்களுக்கு அந்தக்காலத்தில் கிடைத்த அரிய வாழ்க்கை முறையே இந்த அபூர்வ திறனுக்கு அஸ்திவாரம் அமைத்துள்ளது என்பதும் இங்கே நாம் முக்கியமாக குறிப்பிட்டு காட்ட வேண்டிய ஒன்றாகும். இவ்வாறு உளவியல் மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

வாழ்க்கையின் வழிகாட்டிகள்
‘‘இந்த சூப்பர் ஏஜர்கள் பெரும்பாலும் தனித்திறன் கொண்டவர்களாகவே உள்ளனர். பலர் அரிய சாதனையாளர்களாகவும் உள்ளனர். அதுமட்டுமன்றி அடித்தட்டு நிலையில் இருந்து தனது கடின உழைப்பால் முன்னேறியவர்களாகவும் உள்ளனர். அதேபோல் ஒரு கட்டத்தில் கடுமையான சோதனைகளை சந்தித்து, அதை துணிச்சலுடன் எதிர்கொண்டு முன்னேற்றம் கண்டவர்களாகவும் இவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக நேர்மறையாகவே அவர்களின் சிந்தனை இருந்துள்ளது. எந்தநிலையிலும் அதனை அவர்கள் மாற்றிக் கொள்ள முயற்சிகளை மட்டும் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இளைஞர்களை விஞ்சிய மூளைத்திறன் கொண்ட இவர்கள், அவர்களின் வாழ்க்கையின் வழிகாட்டிகளாகவும் திகழ்ந்து வருகின்றனர்,’’ என்பது குறிப்பிடத்தக்கது.

நடுத்தர வயதில் அதிக சுறுசுறுப்பு
வழக்கமான வயதானவர்களை விட சூப்பர் ஏஜர்களுக்கு மூளையில் அதிக சாம்பல் நிறம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சாம்பல் நிறமானது மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கான முக்கிய திசுக்களை கொண்டுள்ளது. இதில் நினைவகம் மற்றும் இயக்கத்திற்கான சமிக்ஞைகள் உள்ளது. வழக்கமான வயதானவர்களை விட சூப்பர் ஏஜர்களின் சாம்பல் நிறத்தின் சிதைவும் குறைவாகவே உள்ளது. அதேபோல் மனஆரோக்கியம், வேகமான இயக்கம் போன்றவையும் சூப்பர் ஏஜர்களுக்கு அதிகம் உள்ளது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்றவர்கள் நடுவயதில் அதிக சுறுசுறுப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர். தூக்கத்தில் திருப்தி அடைந்துள்ளனர். இசை போன்றவற்றில் ஆர்வம் கொண்டு சுதந்திரமாகவும் அவர்களின் வாழ்க்கை இருந்துள்ளது என்பதும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

The post 30 வயது இளைஞர்களுடன் போட்டி போடும் மூளை திறனுடன் 80 வயது சூப்பர் ஏஜர்கள்: சர்வதேச ஆய்வுகளில் ருசிகர தகவல் appeared first on Dinakaran.

Tags : Odai Meeduthu… ,Dinakaran ,
× RELATED ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர...