சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் இருமுடி கட்டுடன் தேங்காய் கொண்டு செல்லலாம்: விமான போக்குவரத்து துறை தற்காலிக அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டலகால பூஜைகளுக்காக அடுத்த மாதம் (நவம்பர்) 15ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 26ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடிக் கட்டில் நெய் தேங்காயும் வைத்து கொண்டு செல்வது வழக்கம். ஆனால் விமானங்களில் தேங்காய் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில வருடங்களாக மண்டல, மகரவிளக்கு காலங்களில் மட்டும் விமானங்களில் இருமுடிக் கட்டுடன் தேங்காய் கொண்டு செல்ல தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல இவ்வருடமும் இருமுடிக் கட்டில் தேங்காய் கொண்டு செல்ல சிவில் விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை கோயில் நடை சாத்தப்படும் ஜனவரி 20ம் தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைகளுக்குப் பின்னரே பக்தர்கள் இருமுடிக் கட்டுடன் விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் இருமுடி கட்டுடன் தேங்காய் கொண்டு செல்லலாம்: விமான போக்குவரத்து துறை தற்காலிக அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: