×

வாலிபர் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை கீழ்பென்னாத்தூர் அருகே பரபரப்பு சாவில் சந்தேகம் என தாய் புகார்

கீழ்பென்னாத்தூர், அக். 26: கீழ்பென்னாத்தூர் அருகே சாவில் சந்தேகம் என தாய் கொடுத்த புகாரின்பேரில், வாலிபர் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு(75), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(65). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள். இதில் இளைய மகன் சரவணன்(36), சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சரவணனை கடந்த 5ம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுந்தரமூர்த்தி என்பவர் நிலத்தில் சொந்த வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். நிலத்திற்கு சென்ற அரை மணிநேரத்தில் சரவணன் மயக்கமடைந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் கீழ்பென்னாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் ஏற்கனவே சரவணன் இறந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அன்று மாலை சரவணன் உடல் சுடுகாடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சரவணனின் தாயார் லட்சுமி கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 21ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று வட்டாட்சியர் சரளா, காவல் ஆய்வாளர் லட்சுமி, மருத்துவர் சுகன்சந்திரன் முன்னிலையில் மருத்துவ குழுவினர் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சரவணனின் உடலை அதே இடத்தில் புதைத்தனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த உள்ளனர். இறந்த வாலிபரின் சடலத்தை 20 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வாலிபர் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை கீழ்பென்னாத்தூர் அருகே பரபரப்பு சாவில் சந்தேகம் என தாய் புகார் appeared first on Dinakaran.

Tags : Kilpennathur ,KILIPENNATHUR, ,Thangavelu ,Keekalur ,Kilipennathur ,Thiruvannamalai ,
× RELATED கீழ்பென்னாத்தூர் அடுத்த...