×

1730 பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஆய்வு 93 சதவீத மாணவர்கள் பயன்பெறுவதாக தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, அக். 26: திருவண்ணாமலை மாவட்டத்தில், கலெக்டர் உத்தரவின் பேரில் 1730 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை ஒரே நாளில் அரசு அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். முதலமைச்சரின் முதன்மை திட்டமான திட்டங்களில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முக்கியமானது. இத்திட்டத்தை, கலெக்டர் தலைமையில் நேரடியாக அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தை திடீர் ஆய்வு நடத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதையொட்டி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த 1730 அலுவலர்கள், காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று 1730 பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் நேரத்தில், சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதன்படி, 1730 பள்ளிகளில் நேற்று 79,935 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகைதந்து காலை உணவை சாப்பிட்டது உறுதி செய்யப்பட்டது. இது, 93 சதவீத வருகை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆய்வினை தொடர்ந்து நடத்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், காலை உணவு தரமாகவும், சுவையாகவும் சமைத்து வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவும் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு, பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 1730 பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஆய்வு 93 சதவீத மாணவர்கள் பயன்பெறுவதாக தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Tiruvannamalai ,Chief Minister ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான...