×
Saravana Stores

திருமலை விஐபி தரிசன டிக்கெட் விவகாரம் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் திருப்பதி போலீசார் விசாரணை

புதுச்சேரி, அக். 24: புதுச்சேரி முதல்வரின் பரிந்துரை கடிதத்தை பயன்படுத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்த நபரை திருப்பதி போலீசார் புதுச்சேரிக்கு அழைத்து வந்து, முதல்வர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் இருந்து விஐபி தரிசனத்திற்கு தனி கோட்டா உள்ளது. இதற்கான பரிந்துரை கடிதத்தை புதுச்சேரி தாகூர் நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் பெற்றுள்ளார். அதை வைத்து 6 நபர்களுக்கு தலா ₹300 என விஐபி தரிசன டிக்கெட் வாங்கியுள்ளார்.

இந்த 6 டிக்கெட்டையும் நெல்லூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரது குடும்பத்திற்கு 23 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதற்கான தொகையை ஜிபி மூலம் அவர் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் தரிசனத்திற்கு அவர் ஏற்பாடு செய்யவில்லையாம். இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட மருத்துவர் தரப்பில் புகார் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை தீவிர மேற்கொண்டனர். அப்போது விஐபி தரிசன டிக்கெட் போலி சந்தையில் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பதி காம்ப்ளக்ஸ் போலீசார் ெதாடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதுச்சேரி தாகூர் நகரைச் சேர்ந்த பத்மநாபனை நேற்று பிடித்து விசாரித்ததோடு, அவரை புதுச்சேரி சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கும் கூடுதல் விசாரணைக்காக அழைத்து வந்தனர். முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு விஐபி கடிதம் கொடுத்தது தொடர்பாக திருப்பதி காவல்துறை தரப்பில் கேட்டதற்கு, விஐபி தரிசனத்திற்கு பத்மநாபன் பேரில் கடிதம் கொடுத்தது தெரியவந்தது. ஆனால் அந்த கடிதத்தை முறைகேடாக, அவர் நெல்லூரை சேர்ந்த 6 பேரின் பெயர்களை பயன்படுத்தி விஐபி டிக்கெட் வாங்கி கூடுதல் விலைக்கு விற்றிருப்பது தெரியவந்தது. பின்னர் பத்பநாபனை கூடுதல் விசாரணைக்காக போலீசார் திருப்பதிக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருமலை விஐபி தரிசன டிக்கெட் விவகாரம் புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் திருப்பதி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thirumala ,Tirupati police ,Puducherry ,Chief Minister ,Minister ,Tirupati Tirumala Venkatesa… ,Puducherry Chief Minister's ,
× RELATED கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி...