இந்த்ராணி என்கிற ஐந்த்ரீ

இவள் இந்திரனின் சக்தி. ராஜ்ய லாபங்களைத் தருபவள். ஐராவத யானையே இவளின் வாகனம். தேவலோக ராஜ்ய பாரத்தைத் தாங்கும் தேவதை இவள். அம்பிகைக்கு ஸாம்ராஜ்யதாயினீ என்று ஒரு திருநாமம் உண்டு. ராஜசூய யாகம் செய்த மண்டலேஸ்வரனை அல்லது ராஜாதிராஜனை சாம்ராட் என்பர். அப்பேர்ப்பட்ட பதவிக்கு சாம்ராஜ்யம் என்றும் பெயர். இங்கு பக்தர்களுக்கு ராஜ்யம் அளிப்பது என்பது வைகுண்டம் கைலாசம் இவை களைக் குறிக்கும். அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படும் என்கிறது லகு ஸ்துதி எனும் ஸ்லோகம்.

இந்திரப் பதவியை அடைய வேண்டும் எனில் ஒருவன் ஆயிரம் அஸ்வமேத யாகங் களைப் புரியவேண்டும். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், அஷ்டதிக் பாலகர்களுக்கும் தலைவன் தேவேந்திரன். அவனது சக்தியே ஐந்த்ரீ.நான்கு தந்தங்களை உடைய ஐராவதம் எனும் வெண்ணிற யானையைத் தன் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டவள் இவள். அங்குசம், பாசம், வஜ்ராயுதம், தாமரை மலர், வரத, அபயம் தரித்தவள். இந்திரநீலக் கல்லைப் போன்ற திருமேனியின் நிறத்தை உடையவள். சகலவிதமான செல்வச் செழிப்போடும், பூரண ஐஸ்வர்யங்களோடும் பொலிபவள். பச்சைநிறப் பட்டாடை அணிந்து பயிர்கள் நன்கு செழிக்க மழை பெய்விக்க வருணனுக்கு ஆணையிடுபவள்.

ஆயிரம் தூண்கள் கொண்ட கற்பக விருட்சங்கள் நிறைந்த தேவலோக வனத்தில் உள்ள மணிமண்டபத்தில் சிம்மாசனத்தின் மீதுள்ள தாமரைமலரில் அமர்ந்த திருக்கோலம் இந்திரனைப் போன்றே ஆயிரம் கண்களை உடையவள். இந்திரன் தீவஷ்டாவின் புத்திரர்களான விச்வரூபன், விருத்திரன் போன்றோரை ஒருமுறை நடந்த போரில் கொன்றான். அதனால் ப்ரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பெற்று பலம், வீரம், தேஜஸை இழந்தான். மேலும் பீடைகள் பிடிக்காமல் இருக்க மானஸ ஸரஸ் என்ற இடத்தை அடைந்த இந்திரன் அங்கு தாமரைத் தண்டில் மறைந்து இருந்தான்.

இந்திரன் தலைமறைவானதால் வெற்றி டமான தேவேந்திர பதவிக்கு நஹூஷனை தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து ஆலோசனை செய்து அதிபதியாக்கினார்கள். தற்காலிக இந்திரப்பதவியை அடைந்த இந்திரன் நிரந்தர இந்திராணியின் அழகில் மயங்கி அவளை அடைய எண்ணினான். இந்த்ராணி குரு பகவானைச் சரண் அடைந்து தனக்கு நேர்ந்த துன்பத்திலிருந்து மீள உதவும்படி கேட்டாள். நஹூஷனை அழைத்து தத்குருபகவான் இந்திரன் இருக்கும்போது நீ அவன் மனைவியை அடைய நினைப்பது பாதகமான பாவச்செயல் என அறிவுரை கூறியும் அவன் அதனை அலட்சியம் செய்தான்.

குரு பகவான் இந்த்ராணியிடம் நீ பராசக்தியைத் துதித்து வணங்கு. அவள் திருவருளால் உனக்கு இந்திரனும் கிடைப்பான். நஹூஷனும் அழிவான் என்று கூற இந்த்ராணியும் தேவியைத் துதிக்க, தேவியும் அகமகிழ்ந்தாள். இந்திரனின் மனைவியே! நீ உடனடியாக மானஸ ஸரஸ்ஸூக்குச் செல்வாயாக. அங்கு உபஸ்ருதி எனும் வித்யையை உபாஸிப்பாயாக. உன் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறினாள். அதன்படியே இந்த்ராணியும் செய்ய அங்கு தாமரைத் தண்டில் மறைந்திருந்த இந்திரனும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்று பழையபடி பலம், வீரம், வீர்யத்துடன் இந்த ராணி தேவியுடன் சேர்ந்தான்.

பராசக்தியின் தனிப்பெரும் கருணையால் மங்களகரமான வாழ்வு கிடைக்கப் பெற்றார், தம்மைத் துதிக்கும் பக்தர்களுக்கும் அவ்வாறே மங்களம் உண்டாக அருள்பவள் இத்தேவி. வியாசர், பாரதத்தில் திரௌபதி, இந்த்ராணியின் அம்சம் எனவும், எனவும், பாண்டவர்கள் இந்திரனின் அம்சம் என குறிப்பிட்டுள்ளார். சவுந்தர்ய ரூபம் சிரஞ்சிவித்வம், எந்நேரமும் சிவ பூஜையில் ஈடுபடுதல் போன்ற பல வரங்களைப் பெற்றுத் திகழும் இந்த்ராணி, தன்னை வழிபடும் மங்கையருக்கு அவர்கள் விரும்பிய வரனுக்கு மாலையிட அருள்வாள். சதையின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டால் அம்மை நோய் ஏற்படும். வேப்பிலையால் விசிறி, சந்தனம் பீசி பலாச்சுளை நிவேதித்து தானம் அளித்தால் நலம் உண்டாகும்.

நாகலட்சுமி

 

The post இந்த்ராணி என்கிற ஐந்த்ரீ appeared first on Dinakaran.

Related Stories: