தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி

பகுதி – 1

முன்னுரை:

தமிழ்மொழிக்கு ‘கதி’ என விளங்குவோர் கம்பரும் திருவள்ளுவரும் என்று பெரியோர் குறிப்பிடுவர் ‘கதி’ என்ற சொல்லில் ‘க’ என்ற எழுத்து கம்பரையும் ‘தி’ என்ற எழுத்து திருவள்ளுவரையும் குறிக்கிறது. இவ்வண்ணம், முதலிடம் பெறுபவர் ‘கம்பர்’, இவர் இயற்றிய ‘இராமாவதாரம்’ என்னும் கம்பராமாயணத்தில் ‘தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தியாக விளங்கும் ராமனைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. ‘தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி’ என்ற அடியில் ‘தனி நின்ற’ என்ற சொல் அனைவரிடமிருந்தும் பிரிந்து தனித்து நிற்பதன்று; மாறாக, நடையில் தனித்து உயர்ந்து நிற்பதாகும். அவ்வாறு ராமனைத் தனிநின்ற மூர்த்தியாக்கிய தத்துவங்களைப் பின்வருமாறு காணலாம்.

ஒன்று பரம்பொருள்

திருமாலின் அவதாரங்களில் மனித வடிவம் கொண்ட அவதாரங்கள் சில, அவற்றுள் ராமவாதாரம் மட்டுமே மனிதநிலையிலிருந்து உயர்ந்து தெ்யவநிலை எய்தி வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்ற அவதாரமாகும். கட்டுரையின் தலைப்பாக உள்ள அடி கம்பராமாயணத்தில் விராதன் வதைப்படலத்தில் விராதனின் துதியாக அமைந்துள்ளது. விராதன்

‘‘பனிநின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் புணை பற்றி,
நனிநின்ற சமயத்தோர் எல்லோரும் ‘நன்று’ என்ன
தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீ ஆகின்

இனிநின்ற முதல் தேவர் என்கொண்டு, என் செய்வாரே?’’ (கம்ப.பா.2567)என்று ராமனைத் துதிப்பதன் மூலம், ராமனை விஷ்ணுவின் ஓர் அவதாரமாகக் கருதாமல் ‘பரம்பொருள்’ எனக் கருதிப் போற்றுகிறான். இப்பாடல் உள்ளிட்ட விராதன் துதிப் பாடல்கள் யாவும், ராமனைப் பரம்பொருளாகப் போற்றுவதாகும். கம்பர், தம் பரம்பொருளைப் போற்ற விராதன் என்ற பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டார். இதன்மூலம் ராமன் ‘பரம்பொருள்’ என்பது உணர்த்தப்படுகிறது. மேலும்,

‘‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார்-அவர்
தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே’’ (கம்ப.பா.1)

என்ற கடவுள் வாழ்த்தில், கம்பர், ‘தனியொரு கடவுளை முன்னிலைப்படுத்தாமல் அலகிலா விளையாட்டாகிய படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முப்பெருந்தொழில்களை முறையே செய்யும் பரம்பொருளையே வணங்குகிறார். இக்கருத்தை திருவாசகத்தின்;

‘‘ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்’’
(திருவாசகம், சிவபுராணம், அடி.42)
என்ற அடியுடன் பொருத்திப் பொருட்சுவை உணரலாம். மேலும், ராமனைப் பரம்பொருள் என்று நிறுவகவந்தன் துதியில்,
‘‘……. ……. ………
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்!

ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ?’’ (கம்ப.பா.3684)
என்றுகூறி ‘ராமன், உயர்திணைப் பால்களாகிய ஆண்பால், பெண்பால் என்று உட்படாமல் பால்களைக் கடந்து அப்பால் நிற்கிறான்’ என்று ராமனை கவந்தன் மூலமாக பரம்பொருளாகக் காட்டுகிறார் கம்பர். நான்கு வேதங்களும்கூட ‘பரம்பொருள்’ இதுதான் என்று சுட்டிக்காட்டவில்லை. அவ்வாறு காட்டும்போது வேதங்கள் மௌனமாக இருக்கும் என்பதை,‘‘தன்பதி அல்லாப் போக, தமையனோடு அல்லள் அல்லள் என்றாள் அன்பனைக் கேட்ட போது, அவள்வெட்கி மௌனமானாள்,

என்பது போல நீக்கி, இதன்றி இதன்றிச் சேடித்த
பின் பரப்பிரம்மம் தன்னைப் பேசாமல் பேசும் வேதம்’’ (கைவல்ய நவநீதம்)
– என்று கைவல்ய நவநீதம் குறிப்பிடுகிறது.

ஆனால் கம்பர், ராமபிரானை ‘பரம்பொருளாகக் காட்டி, தம் படைப்பை வேதத்தினும் உயர்த்திக் காட்டுகிறார். ராமன் ‘பரம்பொருளாக இருப்பது’ தனிநின்றதின் ஒரு தத்துவம் ஆகும்.
சமயங்களைக் கடந்து நிற்றல்
விராதன் ராமனைத் துதிக்கும்போது;
‘‘நனிநின்ற சமயத்தோர் எல்லோரும், ‘நன்று’ என்ன’’ (கம்ப.பா.2567.2)
– என்று துதிக்கிறான்.

இதன் மூலம் ‘ராமன்’ என்பவன் ஒரு சமயத்தாருக்கு மட்டுமே கடவுள் அல்லன். அனைத்துச் சமயத்தாராலும் ‘நன்று’ என்று ஏற்றுக் கொள்ளப்படும் பரம்பொருள் என்பதை உணர்த்துகிறான். ராமன் மேற்கண்ட வகையில் சமயங்களைக் கடந்து நிற்கிறான். மேலும், ராமனின் திருமேனியழகைக் கண்டு வியந்த மிதிலையாரின் ஏரார்ந்த கண்களின் நிலையைக் கம்பர் கூறுமிடத்து,

‘‘தோள் கண்டார், தோளே கண்டார், தொடுகழல் கமலமன்ன
தாள்கண்டார், தாளே கண்டார், தடக்கை கண்டாரும் அஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்!
ஊழ் கொண்ட சமயத்தன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’’
(கம்ப.பா.1080)

என்ற பாடலில், ராமனின் முழு உருவையும் காணாதாரைக் கூறும்போது, ‘சமயப்பூசல்களால் பரம்பொருளின் உருவத்தைக் காணாதார்’ என்று குறிப்பிடுகிறார். இவ்வண்ணம் ராமன் சமயம் என்ற கட்டுப் பாடுகளைக் கடந்து தனி நின்கிறான்.

சாப விமோசனம்

ராமன் தன் கால் வண்ணத்தால் அகலிகை என்னும் பெண்ணின் சாபத்தை மட்டும் போக்கவில்லை அத்துடன், கௌதமன் மற்றும் இந்திரன் ஆகிய ஆணினத்தாரின் பாவத்தையும் போக்கியுள்ளான். ‘கல்யா’ என்றால் ‘குற்றமுடைய உறுப்புகளை உடையவள்’ என்று பொருள்; ‘அகல்யா’ என்றால் ‘குற்றமற்ற சிறந்த உறுப்புகளை உடையவள்’ என்று பொருள்; இந்த சிறந்த அகலிகை கௌதமனிடம் பெற்ற சாபத்தைப் பற்றி, கவிக்கோ அப்துல் ரகுமான் கூறும்போது,
‘‘இந்திரனாகிக் கெடுப்பவர்களும் நாம்தான்;
கௌதமனாகிச் சபிப்பவர்களும் நாம்தான்;’’
(ஆலாபனை: ஒப்புதல் வாக்குமூலம்)

என்று கூறி, அகலிகைக்கு ஆணினம் செய்த பிழையை ‘ஒப்புதல் வாக்குமூலமாக ஆணினத்தின் சார்பாக அறிவிக்கிறார் கவிஞர். ‘இந்திரன் செய்த தவறுக்காக, கௌதமனால் அகலிகை சாபம் பெறுகிறாள்; இவ்விருவரும் அகலிகைக்கு செய்த தீங்கை ராமன் திருத்தியமைத்து, ஆணினத்தின் பாவத்தைப் போக்குகிறான். மேலும், தன்னால் சாபவிமோசனம் ெபற்ற ‘அகலிகை தன்னை வணங்கவேண்டும்’ என்று எண்ணாமல், தான் உயிர்பித்த அகலிகையை போது நீ அன்னை (கம்ப.பா.476). என்றுகூறி வணங்கி, அவளுக்கு தன் தாயின் இடமளித்து தனிநின்று அம்பின் தத்துவத்தை அறிவுறுத்து கிறான் ராமன்.

(தொடரும்)

சிவ.சதீஸ்குமார்

The post தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி appeared first on Dinakaran.

Related Stories: