யார் குரு? யார் சீடர்?

“ந குரோரதிகம் தத்வம் ந குரோரதிகம் தப:
ந குரோரதிகம் ஜ்ஞானம் தஸ்மை ஸ்ரீ குரவே நம:’’
இதன் பொருள்;

“குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை.
குருவைக் காட்டிலும் அதிகமான ஞானமும் இல்லை.
அந்த குருவிற்கு நமஸ்காரம்.’’

நிச்ரேயஸ், ச்ரேயஸ் (அதாவது நல்லது, மிகச் சிறந்தது) என்பவை ஆன்மிக நல்வாழ்வில் மிகமிக உயரிய சாதனையை பொதுவாகக் குறிப்பிடும் சொற்கள். அதிலிருந்து வித்தியாசப்படுத்தப்பட்ட மற்றொரு லட்சியம் ப்ரேயஸ் (இன்பமயமானது). இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு மிக முக்கியமானது.

“அன்யச்ச்ரேயோ (அ)ன்யதுதைவ ப்ரேய
ஸ்தே உபே நானார்தே புருஷம் ஸினீத
தயோ ச்ரேய ஆததானஸ்ய ஸாது
பவதி ஹீயதே (அ)ர்தாத்ய உ ப்ரேயோ வ்ருணீதே’’

“மேலானது வேறு, சுகம் தருவது வேறு. அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அவற்றின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக் கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான்.’’ என்று கட உபநிடதம் (1.2.1) கூறுகிறது.ஒரு பணக்காரர் பாபாவிடம் வந்து தனக்கு எப்படியும் பிரம்ம ஞானம் அளிக்க வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அவருடைய நண்பர், `பிரம்ம ஞானம் என்பது அவ்வளவு எளிதல்ல’ என்று சொன்ன பிறகும், அவர் பாபாவைப் பார்க்க ஒரு குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு வந்தார். பாபா கொஞ்சம் தாமதப்படுத்தினார்.

பொறுமை இழந்த அவர், உடனே எனக்கு ‘பிரம்மத்தைக் காட்டுங்கள்’ என்றார். சீக்கிரம் பிரம்மத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று நினைத்தார். தாமதமானால் குதிரை வண்டிக்கு வாடகை அதிகம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையிலும் இருந்தார். அதற்கு பாபா அவருக்குக் கொடுத்த போதனை முறை மிக வித்தியாசமாக அமைந்தது. (இந்தக் கதை ஒரு முழு அத்தியாயமாக ஆன்மிகத்தில் பின்னர் விவரிக்கப்படும்) அதில் ஒரு போதனைதான் ப்ரேயஸ்ஸை விலக்கி ச்ரேயஸ்ஸை நாடுதல். அதாவது இன்பம் கொடுப்பதை தேர்ந்தெடுக்காமல் எது நன்மையுடையதோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது.

செனோபோன் எழுதிய சாக்ரடீஸின் மெமோரப்லியாவில் (Xenophon’s Memorablia of Socrates) என்ற புத்தகத்தில் சாக்ரடீஸ் எழுதிய `The Choice of Hercules’ (ஹெர்குலஸின் தேர்வு) என்னும் கதை இடம் பெறுகிறது. பண்டைய கிரேக்கப் புராணங்களில் காஸ்மோஸின் ஆளும் தெய்வங்களான ஒலிம்பியன் கடவுள்களின் தலைவர் ஜீயஸ் ஆவார். அவருடைய மகனான ஹெர்குலஸ் உண்மையான தத்துவ ஞானிக்குரிய தேவையான சுய ஒழுக்கம் (Self – Discipline) மற்றும் சகிப்புத்தன்மைக்கு (Endurance) உதாரணமாகத் திகழ்கிறார். ஒரு சமயம் ஹெர்குலஸ் சாலையோரத்தில் முட்செடியின் பக்கத்தில் அமர்ந்து தனது எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையில் எந்தப் பாதையில் செல்வது என்று தீர்மானிக்க இயலாமல் இருந்த வேளையில், இரு பெண் தெய்வங்கள் அவர் முன்தோன்றின. ஒன்று அழகான மற்றும் கவர்ச்சியான காக்கியா (Kakia). அது மகிழ்ச்சி (Happiness)யைக் குறிக்கும் ‘Eudaimonia’ என்றழைக்கப்படுகிறது. அவளுடைய பாதை ‘எளிதானது மற்றும் இனிமையானது’ (easiest and pleasantiest) ஆகும். அது மகிழ்ச்சிக்கு குறுக்கு வழியை வழங்கும் என்பது உறுதியளிக்கப்படுகிறது.

இரண்டாவது பெண் தெய்வம் Arete (ஆர்ட்டி) சாதாரண உடையணிந்த அடக்கமான பெண் (plain-dressed and Humble woman) இயற்கை அழகுடன் இருந்தது. ஆனால், அதன் பாதையில் செல்ல கடின உழைப்பு தேவைப்படும். மேலும், அது நீளமான மற்றும் கடினமானதாகும். அப்பாதையைத் தேர்ந்தெடுப்பவர் பல கஷ்டங்களால் சோதிக்கப்படலாம். ஆனால், நீதியையும் ஞானத்தையும் பெறுவதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியைப் பெறுவர்.

ஹெர்குலஸ் நல்லொழுக்கத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். காக்கியா மூலம் அவர் மயக்கப்படவில்லை. ஹெரா தெய்வத்தினால் துன்புறுத்தப்பட்ட போதும், தன்னுடைய ஆன்மாவின் மகத்துவத்தால் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டார். வாழ்க்கையில் நாம் யாராக இருக்க விரும்புகிறோம், எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் என்பதை இந்தக் கதை அடையாளப்படுத்துகிறது.

கட உபநிடதம் சொல்லும் ச்ரேயஸ் (சிறந்தது), ப்ரேயஸ் (இன்பம் கொடுப்பது) என்பது கிரேக்க தத்துவ புராணத்தில் ஹெர்குலஸ் கதை மூலம் Arete (சிறந்தது) காக்கியா (இன்பமானது) என்று உருவகப்படுத்தப்படுகிறது. ஆன்மிக வாழ்வில், இன்பத்தைத் (ப்ரேயஸ்) தரும் வழிகளை நாடாமல், உயர்ந்த தெய்வீக இயல்பை அடையும் லட்சியத்திற்கு நாம் சிறந்ததை (ச்ரேயஸ்) தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்கு, “மதபிக்ஞம் குரும் சாந்தம் உபாஸீத மதாத்மகம்’’ எனும் ஸ்ரீ மத் பாகவதத்தின் வாக்கிற்கேற்ப, மங்கள வாழ்வு கொண்ட இறைவனிடம் பக்தியில் ஆழ்ந்துவிட்ட (மத்-அபிக்ஞ), இறைவனை தனது ஆத்மாகவே உணர்ந்துவிட்ட (மத்-ஆத்மகம்) குரு ஒருவரை சீடன் அணுக வேண்டும். கடவுள் அருவமான பரம்பொருள்; குரு உருவமான பரம்பொருள் என்பதை உணர வேண்டும். பிரம்மனை உணர்ந்து கொள்ளாத குருவை, நாம் நாடக்கூடாது. தானே உணர்ந்து கொள்ளாத நிலையில் மற்றவர்களுக்கு எப்படி போதிக்க முடியும்? கடல் மீது தானே மிதக்கத் தெரியாத பாறாங்கல் மற்ற கற்களை கடலின் மறு கரைக்கு கொண்டு சேர்த்து விடுமா? `ஸ்வயம் தர்த்தும் ந ஜானாதி பரம் நிஸ்தாரயேத் கதம்’ – தானே கடக்கத் தெரியாத ஒன்று பிறரை எப்படி கடத்துவிக்கும்.

வேதமார்க்கத்திற்குப் புறம்பானவர்களும், பாவத்தில் பற்றுள்ளவர்களும், நாஸ்திகர்களும், பேத புத்தியுள்ளவர்களும், நன்றி கெட்டவர்களும், உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு போன்றவர்களும் (பாஷாண்டின:), ஒரு கடவுளைக் கொண்டு மற்றொரு கடவுளை எதிர்த்துப் பேசுபவர்களும், அனுபவம், அறிவு இல்லாதவர்களும் ஆகிய இவர்கள் எல்லோரும் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

‘‘ஏப்யோ பின்னோ குரு: ஸேவ்ய
ஏக-பக்த்யா விசார்ய ச’’

என்னும் குரு கீதை மந்திரம், “மேலே சொல்லப்பட்டவர்களிலிருந்து வேறான நன்மையான குருவைக் கண்டடைந்து ஒருமுகப்பட்ட பக்தியுடன் சேவிக்க வேண்டும்’’ என்று கூறுகிறது. தானா கிராமத்து அதிகாரியான பி.வி.தேவின் கீழ் பணிபுரியும் காவ்லே படேல் என்பவருக்கு குருவல்லாத குரு ஒருவர் அமைந்துவிட்டார். காவ்லே படேலின் பாரம்பர்ய ஆலயத்தில் இருந்த வாணிதேவியின் பழைய சிலையை அகற்றி விட்டு புதுச்சிலை ஒன்றை வைக்க வேண்டுமென்று அந்த குரு படேலிடம் கூறினார். புதுச்சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தால், அதன் மூலம், தான் பிரபலமாகி இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்பது அவருடைய நோக்கம். எப்பொழுதும் குருவானவர் தன்னுடைய சீடனின் நலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமே தவிர, தன்னுடைய சுயலாபங்களை எப்பொழுதும் தன் சீடனின் மேல் புகுத்தக் கூடாது.

காவ்லே படேல் இதைப் பற்றி நிறைய யோசித்து, சில சந்தேகங்கள் ஏற்படவே, பி.வி.தேவ் மூலமாகவும் பின்னர் பாபாவின் அணுக்கத் தொண்டரான சியாமா மூலமாகவும் பாபாவின் கருத்தைப் பெற வேண்டும் என்று எண்ணினார். அவர்கள் இருவரும் பாபாவிடம் இதைப் பற்றி கலந்து ஆலோசனை செய்த போது பரமகுருவான பாபா `புதுச் சிலை வேண்டாம். பழைய சிலைக்கே கும்பாபிஷேகம் மற்ற வைபவங்களை நடத்தலாம்’ என்று கூறிவிட்டார்.

காவ்லே படேல், `புதிய சிலையை பிரதிஷ்டை செய்வதால் என்ன கேடுகள் வரும்’ என்று மீண்டும் பாபாவிடம் கேட்கச் சொன்னார். முன்பு ஒருமுறை ஒருவர் பாபாவிடம் பசுதானம் செய்ய வேண்டும் என்று கூற, பாபா அதை மறுத்தார். ஆனால், அவர் பாபாவின் அறிவுரையை மீறி செய்தார். அதனால் தொற்று நோய் பரவியது என்ற நிகழ்ச்சியை பாபா ஞாபகப்படுத்திக் கூறினார். ஆனால், காவ்லே படேல் தன்னுடைய குருவல்லாத குருவையே அதிகமாக நம்பினார். பாபாவின் அறிவுரை அவருடைய அறிவுக்கு எட்டவில்லை. எனவே, புது சிலையைச் செய்து அதற்கு கும்பாபிஷேகம் நடத்தி முடித்தார். அந்தோ பரிதாபம்! அக்கிராமத்தை தொற்று நோய் பிடித்தது. அத்தொற்றுநோயால் முதலில் பாதிக்கப்பட்டது படேலின் மனைவியே என்பதுதான் மிக முக்கியமானது.

எனவே, அதற்குப் பரிகாரம் தேடி தனது குருவல்லாத குருவிடம் மீண்டும் சென்றார். அதற்கு அந்த குரு, படேலின் நிலங்கள் அடங்கிய சொத்தில் சரி பாதியைத் தம் பெயரில் தானமாக எழுதித் தருவதுதான் சிறந்த பரிகாரம் என்று கூறினார். அப்பொழுதுதான் படேலுக்கு உறைத்தது. தன் குரு பேராசை பிடித்தவர் (காமின:), நன்றி கெட்டவர் (க்ருதக்ன:), மஹாபாபி (மஹாபாப:) என்று புரிந்து கொண்டார். சீரடி வந்து பாபாவிடம் சரணடைந்தார். மீண்டும் பழைய விக்ரகத்தையே பிரதிஷ்டை செய்வது என்ற பாபாவின் அறிவுரையைப் பின்பற்றினார்.

குரு தீயவராக இல்லாத போது, அவரையே குருவாகக் கொண்டு அவர் வாக்கை கடைபிடிக்க வேண்டும். மற்றொரு குருவுடன் ஒப்பிட்டுப் பார்த்து தம் குருவை விடுதல் கூடாது என்று பாபா அடிக்கடி அறிவுரை கூறுவார். குரு சிஷ்ய உறவு என்பது தாம்பத்ய உறவைவிட அதிக நெருக்கமானது என்பார், பி.வி.நரசிம்ம சுவாமிஜி. குரு சிஷ்ய உறவு என்பது ஒரு விளக்கின் சுடரிலிருந்து மற்றொரு விளக்கு ஏற்றப்படுவது போல, அக்னியும் பிரகாசமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இறுதியாக நமக்குக் கைகூடுவது, ஒளி வழி ஒளி – ஒளிக்குள் ஒளி.

ஜவ்ஹர் அலி தனது சீடர்களுடன் சீரடி பக்கத்தில் உள்ள ராஹதாவிற்கு வந்து அங்குள்ள வீரபத்ர சுவாமி கோயிலுக்கு அருகில் தங்கினர். நிறைய படித்தவர். குரான் முழுவதையும் ஒப்பிக்கும் ஆற்றல் கொண்டவர். அங்கு இவருடைய இனிமையான போதனைகளைக் கேட்ட மக்கள், அவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர். கோயிலுக்கு அருகில் ஈத்கா கட்ட முயற்சி செய்தார். அதனால் உண்டான சர்ச்சைகளால் அவர் ராஹதாவிலிருந்து சீரடி வந்தார்.

அங்கு பாபாவுடன் தங்கி தன்னுடைய இனிமையான நாக்கின் மூலமாக மக்களைக் கவர்ந்தார். பாபாவை தன்னுடைய சீடர் என்று கூறத் தொடங்கினார். பாபாவும் அதை மறுக்கவில்லை. ஒரு நாள் பாபாவை ராஹதாவிற்கே கூட்டிச் சென்றார். பாபாவின் மதிப்பை அவர் முழுதும் அறிந்திருக்கவே இல்லை. பாபாவை சீடராகவே நினைத்து தமக்கு பணிவிடைகள் செய்யப் பணித்தார்.

பாபா அவர் சொன்னபடி எல்லாம் செய்யலானார். பணிவிடை செய்தாலும், பாபா, ஜவ்ஹர் அலியின் குற்றங்களை முழுதும் அறிந்திருந்தார். சீரடியிலுள்ள அன்புச் சீடர்கள் பாபா ராஹதாவில் இருப்பதை விரும்பவில்லை. ஒருநாள் அவர்கள் அனைவரும் கூட்டமாக ராஹதாவிற்குச் சென்றனர். அதற்கு பாபா `அலி ஒரு குணங்கெட்ட மனிதர், தான் அவரை விடுத்து வர முடியாது, அவர் வருவதற்குள் நீங்கள் போய்விடுங்கள்’ என்று கூறினார். அப்பொழுது ஜவ்ஹர் அலி வரவே, பாபாவின் சீடர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

பின்னர் இருவரும் சீரடிக்கு திரும்பி வந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு, குரு தேவிதாசரால் ஜவ்ஹர் அலி சோதிக்கப்பட்டார். அதில் அவர் முழுமைக்குத் தேவையுள்ளவர் என்று கண்டு பிடிக்கப்பட்டார். அதாவது கோராகும்பர் நாமதேவரின் தலையைச் சோதித்து இது வேகாத தலை என்று சொன்னது போல, அதனால் ஜவ்ஹர் அலி சீரடியை விட்டுச் சென்றார். பல ஆண்டுகளுக்குப் பின் சீரடிக்குத் திரும்பி வந்து, பாபாவின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். யார் குரு? யார் சீடர்? என்பது தெளிவாக்கப்பட்டது. பாபாவிடம் தன் குற்றத்திற்காக, தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார். எனினும் பாபா அவரை மிக மரியாதையுடனே நடத்தினார்.

பாபா உண்மையான ஒழுக்கத்தால் தன்னுடைய செயல்களின் மூலம் அகங்காரம் கொண்ட ஒருவரை எங்ஙனம் மாற்றிக் காட்டினார் என்பது இதன் மூலம் விளங்கும். இந்நிகழ்வை ஸ்ரீ சாயி ஸஹஸ்ரநாமம் “ஜவாராலீதி மௌலானா சேவனே அக்லிஷ்ட மானஸாய நம:’’ என்ற நாமத்தால் நமக்கு விளக்கும்.

‘‘கபாலம் வ்ருக்ஷ மூலம் ச குசேலம் அஸஹாயத சம த்ருஷ்டி:
ஏதத் முக்தஸ்ய லக்ஷணம்’’
எனவரும் ஸ்லோகம், பிச்சையெடுத்தல், மரத்தடியில் இருத்தல், கந்தை அணிதல், யாருடனும் பேசாமல் இருத்தல், எல்லோரையும் சமநோக்கு நோக்குதல் போன்றவற்றை குருவினுடைய இலக்கணங்களாகக் கூறுகிறது.

பரமகுரு என அழைக்கப்படுபவர்கள் மௌனி, வாக்மி என்னும் இரு வகையினர். மௌனி, பூரண இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். வாக்மி தன் பேரானந்த அனுபவத்தை மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களும் அதை அனுபவிக்க வழிகளைக் காட்டுபவர். ஆனால், பாபா மௌனியாகவும், வாக்மியாகவும் இருந்து தன்னை நாடுபவர்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டத்தக்கது அறிந்து வேண்டியபடி கொடுத்தருள்பவர். எங்கே சற்குரு வழிகாட்டியாக இருக்கிறாரோ, அங்கே சென்றால் அவர் நம்மை இவ்வுலகப் பெருங்கடலுக்கு அப்பால் பத்திரமாகவும், எளிதாகவும் நிச்சயம் அழைத்துச் செல்வார். சற்குரு என்னும் சொல்லானது அதற்கு மிகவும் பொருத்தமான பகவான் பாபாவையே நம் மனதிற்கு நினைவூட்டுகிறது. (The word Sathguru brings to mind Sai Baba, the Perfect Master).

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post யார் குரு? யார் சீடர்? appeared first on Dinakaran.

Related Stories: