நாகர்கோவில் அருகே பயங்கர மோதல்; 2 தொழிலாளிகள் கவலைக்கிடம் : 2 பேர் கைது: 8 பேருக்கு வலை

சுசீந்திரம்: நாகர்கோவில் அருகே வல்லன் குமாரவிளை சிதம்பரநார் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். ஆட்டோ டிரைவர். அவரது மகன் பிரவீன் (24). பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் எல்எல்பி படித்து வருகிறார். மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரவீன் மது அருந்தியதை மணிக்கட்டிபொட்டல் காமராஜ் சாலையை சேர்ந்த கண்ணன் (33) என்பவர் பிரவீனுடைய தந்தையிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரவீனுக்கும், கண்ணனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை என்ஜிஓ காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் பிரவீன் 2 பீர்பாட்டில் வாங்கிவிட்டு பக்கத்து கடையில் தின் பண்டம் வாங்கினார். அப்போது அங்கு வந்த கண்ணன் எனக்கும் பீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் மீண்டும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் கண்ணன் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து பிரவீன், அவரது நண்பர் அரவிந்த் (21) ஆகிய 2 பேரும் காமராஜ்சாலை அருகே ஓட்டல் பின்புறம் நின்றுகொண்டிருந்தனர். அப்போது கண்ணன் அவரது சகோதரர் மணிக்கட்டிபொட்டல் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற ஐயப்பன் (36), அவரது நண்பர் வல்லன் குமாரவிளையை சேர்ந்த கோகுல் (24) ஆகியோர் இரும்பு கம்பிகளுடன் வந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீனை அந்த கும்பல் தாக்கியது. தடுக்க முயன்ற அரவிந்தையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி சென்றது. காயமடைந்த பிரவீன், அரவிந்த் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பிரவீன் அளித்த புகாரின் பேரில், கண்ணன், ஐயப்பன், கோகுல் ஆகியோர் மீது சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த சுமார் 45 நிமிடங்களில் பிரவீன் தனது நண்பர் வட்டவிளைையை சேர்ந்த விஷ்ணுவுக்கு போன் செய்து தன்னை கண்ணன் தரப்பினர் வெட்டி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து விஷ்ணு மேலும் 9 பேரை அழைத்து கொண்டு சரக்கல்விளை பூங்காவுக்கு கண்ணனை தேடி வந்தார். அங்கு கண்ணன் இல்லை. ஆனால் கண்ணனின் சகோதரர் ரமேஷ் என்ற ஐயப்பன், வல்லன்குமாரன்விளையை சேர்ந்த ஜெய்கணேஷ் ஆகியோர் அங்கு இருந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். அங்கு வந்தவர்கள் கண்ணன் எங்கு என கேட்டுள்ளனர். கண்ணன் இல்லை என கூறவே, அவர்கள் கண்ணனின் சகோதரர் ரமேசை சரமாரியாக வெட்டியுள்ளனர். ரமேசின் கழுத்து, கை, தலை பகுதியில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்த அவரது நண்பர் ஜெய்கணேஷ் தடுக்க முயன்றார்.

அவருக்கு வெட்டுவிழுந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள். அவர்களது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரமேஷ் என்ற ஐயப்பன், ஜெய்கணேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டிய வழக்கில் விஷ்ணு உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், 16 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நாகர்கோவில் அருகே பயங்கர மோதல்; 2 தொழிலாளிகள் கவலைக்கிடம் : 2 பேர் கைது: 8 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: