×
Saravana Stores

போன், இ-மெயில் என்றிருந்த நிலையில் தற்போது சமூக ஊடகம் மூலம் 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு

புதுடெல்லி: போன், இ-மெயில் போன்றவை மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் தற்போது சமூக ஊடகம் மூலம் கடந்த 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால் பயணிகள், விமான நிறுவனங்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த ஆறு நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் மற்றும் அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உள்நாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.

பல்வேறு இந்திய விமான நிறுவனங்களை சேர்ந்த சுமார் 30 விமானங்களுக்கு சனிக்கிழமை மட்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலி வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையும், கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளன. சமூக விரோதிகளின் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக ஏர் இந்தியா விமானங்களை குறிவைத்து மிரட்டல் விடப்படுகின்றன.

பின்னர் கடந்த சில நாட்களாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மிரட்டல்கள் வருகின்றன. போலி வெடிகுண்டு மிரட்டலால் அனைத்து நகரங்களில் இருந்தும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், விஸ்தாரா மற்றும் இண்டிகோ போன்ற நிறுவனங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. விமானத் துறையை சீர்குலைக்கும் வகையில், சமூக விரோத சக்திகளால் நன்கு திட்டமிடப்பட்டு மிரட்டல்கள் விடப்படுவதாக கூறுகின்றனர். விமான நிறுவனங்களையும், பல்லாயிரக்கணக்கான பயணிகளையும் இன்னலுக்கு ஆளாக்கும் இதுபோன்ற தேச விரோத செயல்களை செய்வோர் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது போன்ற போலி மிரட்டல்களை சமாளிக்க புதிய விதிகளை கொண்டு வர உள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். தாமதமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் சூசகமாக கூறினார். எவ்வாறாயினும், இன்னும் கடுமையான தண்டனை வழங்குவதற்கு தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றனர். வெடிகுண்டு மிரட்டலால் டிக்கெட் வாங்கி விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல் விவரிக்க முடியாதது. பெரும்பாலும், புறப்பட்ட பிறகு ெவடிகுண்டு மிரட்டல் செய்தி வருவதால், மீண்டும் விமான நிலையம் திரும்புவதா? அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதா? என்ற குழப்பங்களும் நடக்கிறது.

அச்சுறுத்தல் அதிகரித்ததால், சில நாடுகள் தங்கள் ராணுவ விமானங்களை அனுப்பி வைக்கின்றன. இந்திய விமானங்களை பாதுகாப்பாக தங்கள் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள போதிலும், ஏர் இந்தியா விமானத்தை அழைத்துச் செல்ல கனடா அரசு இரண்டு போர் விமானங்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. சீக்கிரம் டிக்கெட் முன்பதிவு செய்து, விரைவாக பயணத்தை முடிக்க விரும்பும் பயணிகளுக்கு, சமூக விரோதிகளின் இதுபோன்ற போலி மிரட்டல் நினைத்துப் பார்க்க முடியாத அடியாகும்.

எனவே, இதுபோன்ற தீய சக்திகளை எப்படியும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும். பயணத்தடைக்கு மட்டுமின்றி, இப்படிப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் முன்பெல்லாம் கட்டுப்பாட்டு அறை, இ-மெயிலில் மிரட்டல்களை விடுத்து வந்தனர். தற்போது அவர்கள் சில சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் பாதுகாப்பு ஏஜென்சிகள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (ஐஎஸ்எஃப்) மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போன், இ-மெயில் என்றிருந்த நிலையில் தற்போது சமூக ஊடகம் மூலம் 6 நாளில் 70 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : EU government ,New Delhi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்...