மழை காரணமாக வியாபாரிகள், மக்கள் வரத்து குறைவு: வெறிச்சோடிய பல்லாவரம் வாரச்சந்தை

பல்லாவரம்: தொடர் மழை காரணமாக பல்லாவரம் வாரச்சந்தைக்கு பொதுமக்கள் குறைந்த அளவில் வந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. பல்லாவரத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். சுமார், 200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வாரச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இங்கு செல்லப்பிராணிகள், வண்ணப் பறவைகள், அழகிய பூஞ்செடிகள், பழங்கள், காய்கறிகள், செல்போன்கள், லேப்டாப் மற்றும் பர்னிச்சர், உணவு பொருட்கள், இரும்பு மற்றும் எலக்ட்ரானிக், கட்டுமான பொருட்கள் என குண்டூசி முதல் கணினி வரை உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

பல்லாவரம் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வரை காத்திருந்து, தங்களுக்கு வேண்டிய பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். இங்கு, உபயோகப் படுத்தப்பட்ட பழைய பொருட்கள் மட்டுமின்றி புதிய பொருட்களும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலும் சிறு வியாபாரிகளே இச்சந்தையில் நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருவதால், வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை முழுவதும் கனமழை பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், ஒருசில இடங்களில் மழையும் பெய்ததன் காரணமாக நேற்று மழை பெய்யக்கூடும் என்ற அச்சத்தில் அதிகளவில் வியாபாரிகள் பல்லாவரம் வாரச்சந்தையில் விற்பனையில் ஈடுபட வரவில்லை.

பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் பல்லாவரம் சந்தையில் செயல்பட்டு வரும் நிலையில், மழை காரணமாக 250 கடைகள் மட்டுமே இருந்தது. பெரும்பாலான வியாபாரிகள் செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற வெளியிடங்களில் இருந்து பல்லாவரம் வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால், மழை காரணமாக தயங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் கூட்டமும் வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவை காணப்பட்டது. இதனால், ஒவ்வொரு வாரமும் கூட்ட நெரிசலில் கலை கட்டும் பல்லாவரம் வாரச்சந்தை, இந்த வாரம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து குறைவு காரணமாக கலை இழந்து காணப்பட்டது.

The post மழை காரணமாக வியாபாரிகள், மக்கள் வரத்து குறைவு: வெறிச்சோடிய பல்லாவரம் வாரச்சந்தை appeared first on Dinakaran.

Related Stories: