புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பலவீனமாகவே இருக்கும்: வெதர்மேன் கணிப்பு

சென்னை: நவம்பர் மாதம் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என்றும், அடுத்ததாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமாகவே இருக்கும் என்பதால் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அடுத்தடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை உள்பட உள் மாவட்டங்களிலும் நேற்று வெப்பச்சலனத்தால் மழை பெய்தது.

இந்த மழை இன்று காலை வரை நீடிக்கும். இடியுடன் கூடிய மழையே பெய்யும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மழை இருக்கும். அச்சப்படுத்தும் வகையில் இருக்காது
வங்கக் கடலில் அடுத்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். ஆனால் இது தமிழகத்திற்கானது அல்ல. இந்த காற்றழுத்தத்தை எண்ணி கவலைப்பட தேவையில்லை. அந்த காற்றழுத்த தாழ்வு பலவீனமாக இருக்கும். அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அந்தமான் கடலுக்குள் நுழையும் போது நமது சென்னை அட்சரேகைக்கு மேலே இருக்கும்.

இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இது அந்தமான் அருகே அடுத்த வாரம் இந்தியா, சீனா இடையே உள்ள பகுதியில் உருவாகிறது. ஒரு வேளை இந்த காற்றழுத்தம் வலுவிழந்தால், கிழக்கு நோக்கி வீசும் காற்றால் தமிழகத்தின் பக்கத்திற்கு தள்ளப்படும். அப்போது அதன் தீவிரத்தை வைத்து தான் தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்குமா என்பதை கணிக்க முடியும். ஆனால் அந்த காற்றழுத்தம் தமிழகத்திற்கு வராமலேயே இந்திய- சீன இடையே உள்ள பகுதியிலேயே வலுவடைந்து அங்கேயே கரையை கடக்கவும் வாய்ப்பிருக்கிறது.

* நவம்பரில் அதிக மழை
நவம்பர் மாதத்தில் எம்ஜேஓ (மேடன்-ஜூலியன் அலைவு) எனும் நிகழ்வால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யும். இந்திய பெருங்கடலில் தனது இருப்பை காட்டப் போகிறது. எனவே, எம்ஜேஓ நிகழ்வால் நவம்பரில் அதிக கனமழையை கொடுக்கும். ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்பும் கனமழை குறித்து கணிக்கலாம்.

The post புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பலவீனமாகவே இருக்கும்: வெதர்மேன் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: