×

கனவை நிஜமாக்க 15 வருடம் உணவகத்தில் வேலை பார்த்தேன்!

நன்றி குங்குமம் தோழி

பல தலைமுறையாக உணவகங்கள் நடத்துபவர்கள் அவர்களின் வாரிசுகளுக்கு அந்த உணவகங்களை குடும்பத் தொழிலாக விட்டுச்செல்வார்கள். சிலருக்கு உணவகம் நடத்த வேண்டுமென ஆசை இருக்கும். அவர்கள் முறைப்படி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ரெஸ்டாரன்ட் நடத்துவார்கள். இன்னும் சிலர் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென நினைத்து உணவகங்கள்தான் வருமானம் தரக்கூடியது என்று நடத்துவார்கள். ஆனால், இது எதுவுமே இல்லாமல், உணவகம் வைக்க வேண்டும் என்ற ஆசையில் பதினைந்து வருடமாக ஒரு உணவகத்தில் வேலை பார்த்திருக்கிறார் எழிலரசி. அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்துசென்னை வேளச்சேரியில் ‘ஈரோடு அண்ணாமலையார் மெஸ்’ என்கிற உணவகத்தை தொடங்கி இருக்கிறார்.

பல தலைமுறையாக உணவகங்கள் நடத்துபவர்கள் அவர்களின் வாரிசுகளுக்கு அந்த உணவகங்களை குடும்பத் தொழிலாக விட்டுச்செல்வார்கள். சிலருக்கு உணவகம் நடத்த வேண்டுமென ஆசை இருக்கும். அவர்கள் முறைப்படி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ரெஸ்டாரன்ட் நடத்துவார்கள். இன்னும் சிலர் ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென நினைத்து உணவகங்கள்தான் வருமானம் தரக்கூடியது என்று நடத்துவார்கள். ஆனால், இது எதுவுமே இல்லாமல், உணவகம் வைக்க வேண்டும் என்ற ஆசையில் பதினைந்து வருடமாக ஒரு உணவகத்தில் வேலை பார்த்திருக்கிறார் எழிலரசி. அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை வேளச்சேரியில் ‘ஈரோடு அண்ணாமலையார் மெஸ்’ என்கிற உணவகத்தை தொடங்கி இருக்கிறார். ‘‘சிறு வயதில் இருந்தே எனக்கு சமையல் மேல் அதிக ஆர்வம். வீட்டில் ஏதாவது விசேஷம் என்றாலுமே நான்தான் சமைப்பேன்.

அந்தளவிற்கு சமையல் செய்வதில் ஆர்வம் அதிகம். மேலும் நான் சமைத்த உணவினை மற்றவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட கொடுக்க வேண்டும் என்றும் எனக்கு விருப்பம். அவர்கள் அதை ருசித்து சாப்பிடும் போது எனக்கு ரொம்பவே சத்தோஷமா இருக்கும். அதனாலே, சிறுவயது முதல் இருந்தே எனக்கு ஒரு உணவகம் தொடங்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால், அந்த ஆசை பல ஆண்டுகள் கழித்துதான் நிறைவேறி இருக்கிறது’’ என தனது உணவகம் உருவான கதையை பகிர்ந்து கொள்கிறார் எழிலரசி.‘‘சொந்த ஊர் சீர்காழி. எனது கணவரின் ஊர் ஈரோடு. இருவரும் திருமணம் முடிந்தவுடன் சென்னைக்கு வந்தோம். தொழிலுக்காக நாங்கள் இருவருமே சென்னையின் பிரபல உணவகத்தில் வேலை பார்த்தோம். வேலைதான் என்றாலுமே நான் விரும்பி பார்த்தேன்.

ஆரம்பத்தில் சாதாரண வேலைகள் செய்து வந்து கொஞ்சம் கொஞ்சமாக அதே உணவகத்தில் மேனேஜர் ஆகும் அளவிற்கு வளர்ந்தேன். சமையலிலும் ஆர்வம் என்பதால் அங்கு அவ்வப்போது சமையலும் செய்வேன். உணவகம் நடத்த வேண்டும் என்கிற எனது சிறுவயது ஆசை இந்த உணவகத்தில் வேலை பார்க்கும்போது அடிக்கடி நியாபகத்திற்கு வரும். ஆனால், அதற்கான நேரம் வரும்வரை காத்திருந்தேன். ஒரு உணவகம் எப்படி நடத்த வேண்டும். வாடிக்கையாளர்களை எப்படி வரவேற்க வேண்டும். சமைப்பதில் இருந்து அந்த உணவு பரிமாறப்படும் வரை என உணவகம் நடத்துவதற்கு என்னவெல்லாம் அனுபவம் தேவையோ அதனை அங்கிருந்தே நன்றாக கற்றுக்கொண்டேன். பதினைந்து வருடங்கள் அந்த உணவகத்தில் வேலை பார்த்தேன்.

ஒரு கட்டத்தில் சொந்தமாக உணவகம் தொடங்கலாமென நினைத்து அந்த வேலையை விட்டுவிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கும்போதுதான் கொரோனா வந்தது.கொரோனா வந்த பிறகு வேலையும் நிரந்தரம் இல்லாமல் போக வீட்டில் இருந்தபடியே சில தெரிந்த நபர்களுக்கு சமைத்து கொடுத்து வந்தேன். கொரோனா காலங்களில் நல்ல சாப்பாட்டிற்காக அலைந்த பலருக்கு, நானே எனது வீட்டில் சமைத்து உணவு டெலிவரி செய்தேன். அனைவருக்கும் நான் சமைத்த சாப்பாடு பிடித்துப்போக ஹோட்டல் ஆரம்பிக்க சொன்னாங்க.என்னோட ஆசை மற்றும் எனது உணவு பிடித்த வாடிக்கையாளர்கள் விரும்பியதால் ‘ஈரோடு அண்ணாமலையார் மெஸ்’ என்ற பெயரில் உணவகத்தை ஆரம்பித்தேன்.

சமையலில் அனுபவமும் அக்கறையும் இருப்பதால், உணவு விஷயத்தில் எந்தக் குறையும் வைக்கக்கூடாது என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். உணவு தரமாக இருக்க வேண்டும். அதே சமயம் வீட்டில் சமைப்பது போல் இருக்கணும். அதனால் என் கடைக்கு சாப்பிட வருபவர்களை வீட்டில் விருந்தாளிகள் வந்தால், எப்படி உபசரிப்போமோ அதே போல்தான் உபசரிப்பேன். வேலைக்கென்று கடையில் நான் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. நானும் எங்க வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே உணவகத்தை பார்த்துக் கொண்டோம். முதலில் சாப்பிட வருபவர்களுக்கு பிடிச்ச உணவுகள் என்ன என்று தெரிந்து கொண்டு அந்த உணவுகளை சமைக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு ரொம்ப பரிட்சயமான கொங்கு முறையில் அசைவ உணவுகளை கொடுத்தோம்.

இப்ப, அதுவே எங்க கடையோட ஐக்கானாக மாறிடுச்சு. சமையலுக்கென்று எந்த மசாலாவும் தனியாக கடையில் வாங்குவது கிடையாது. முழுக்க முழுக்க நாங்களேதான் தயாரிக்கிறோம். ஒரு கிலோ இறைச்சிக்கு எவ்வளவு கிராம் மசாலா, எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பது முதல் உணவுப் பொருட்களின் தரம், சுவை அனைத்திலுமே முழுக்கவனம் கொடுக்குறோம். உணவுகளின் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது, அதற்கு காரணம் நான் தயாரிக்கிற மசாலாதான். இந்த மசாலாவை யார் பயன்படுத்தினாலும் ஒரே சுவைதான் வரும். அசைவ சாப்பாடுகளில் கடல் உணவு முதல் ஆடு, கோழி இறைச்சி வரை எல்லாமே இங்குண்டு. நம்ம கடையில் மீன் ரோஸ்ட் ரொம்ப ஸ்பெஷல்.

முழு மீனை தவாவில் ரோஸ்ட் செய்து தருகிறோம். ஃபிஷ் 65யும் உண்டு. இறால் மசாலா, தொக்கு கறி, ஃபிங்கர் ஃப்ரை இதெல்லாமே எங்களின் சிக்னேச்சர் கடல் உணவுகள். சிக்கன், மட்டன் பிரியாணி கூட கொங்கு ஸ்டைல்லதான் கொடுக்குறோம். தம் பரோட்டா என்று நம்ம கடையில் புதுசா அறிமுகம் செய்திருக்கிறோம். மண்பானையில் செய்யக்கூடிய தம் பரோட்டாக்காகவே தனி கூட்டம் வருகிறது. மண்பானையில் வாழை இலை வைத்து 3 லேயரில் பரோட்டாக்கள் அடுக்கப்பட்டு, இதற்காகவே தயாரிக்கப்படும் கிரேவி, சிக்கன் சுக்கா, முந்திரி எல்லாம் சேர்த்து அடுப்பில் மண்பானையோடு சில நிமிடம் வைத்து பிறகு பரிமாறுகிறோம். இந்த உணவகம் ஆரம்பித்தது வாடிக்கையாளர்களை மட்டுமில்லாமல் நிறைய உறவுகள் மற்றும் நண்பர்களை தந்திருக்கு’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் எழிலரசி.

தொகுப்பு: ச.விவேக்

ஆ.வின்சென்ட் பால்

 

The post கனவை நிஜமாக்க 15 வருடம் உணவகத்தில் வேலை பார்த்தேன்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கிறிஸ்துமஸ் கேக்! -வாசகர் பகுதி