×

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு நாமே வண்ணம் தீட்டலாம்!

நன்றி குங்குமம் தோழி

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட்களை வாங்குவோம். உப்பு ஜாடிகள், டீ கப்புகள், தட்டுகள், குடுவைகள் என நம்முடைய பல தேவைகளுக்கு ஏற்ப பீங்கான், எவர்சில்வர், மண்ணால் செய்த பொருட்கள் என ஒவ்வொரு உபயோகத்திற்கு ஏற்ப வாங்குவது வழக்கம். இந்தப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகாகவும், பளபளப்பாகவும், வண்ணமயமாகவும் இருக்கும். அதனாலேயே பலரும் இதனை விரும்பி வாங்குகிறார்கள். அப்படிப்பட்ட பொருட்களை நமக்குப் பிடித்த டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் தேடித்தேடி வாங்குவோம். மேலும் அந்தப் பொருட்கள் அனைத்தும் தனித்தன்மையாக இருக்க வேண்டும் என்றுதான் இப்போது பலரும் நினைக்கின்றனர்.

இதற்காகவே அடிக்கடி ஒவ்வொரு புது பொருட்களை வாங்குவது சிலரின் வழக்கம். அப்படி தனித்தன்மையாக பொருட்களை வாங்க விரும்புபவர்கள், தங்களுக்குப் பிடித்த பீங்கான் அல்லது மண் வடிவ பொருட்களில் அவர்களுக்கு விருப்பமான வண்ணத்தை தீட்டி அவர்களே வைத்தும் கொள்ளலாம் என்று புதுவிதமான ஐடியாவுடன் ‘பெயின்ட் மீ ஸ்டுடியோ’ என்ற கடை ஒன்றை நடத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த சுனிதா.

‘‘சென்னைதான் பூர்வீகம் என்றாலும் திருமணத்திற்குப் பிறகு நான் லண்டனில் செட்டிலாயிட்டேன். அங்கு சில வருடங்கள் இருந்தேன். அங்கு நிறைய மண்ணால் செய்யக்கூடிய பானைகள் ரொம்பவே பிரபலம். மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மண் பொருட்கள் செய்வதும், அதற்கான வர்ணங்கள் பூசுவதும் என்று தங்களின் நேரத்தை செலவழிப்பாங்க. எனக்கும் மண் சார்ந்த கலைப்பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். நானும் குடும்பத்தோடு சென்று மண்ணில் அவர்கள் செய்யக்கூடிய பொருட்களை பார்த்துக் கொண்டு இருப்பேன். எங்கு இந்த மாதிரி கண்காட்சிகளோ அல்லது விழாக்களோ நடந்தாலும் அங்கு சென்று அதில் கலந்து கொள்வேன்.

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பிறகு மண் சார்ந்த பொருட்களை தேடிப்பிடித்து அவர்களை சந்திப்பேன். தமிழ்நாட்டில் மண்ணில் செய்யக்கூடிய பொம்மைகளும், கலைப் பொருட்களும் அழகானதாக இருக்கும். எனக்கு அது ரொம்பவே பிடிக்கும். பலரிடம் பேசி அது எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அதை செய்யவும் கற்றுக்கொண்டேன்’’ என்றவர், அதன் பிறகு தான் சொந்தமாக மண் பொம்மைகள் செய்யும் கடை ஒன்றை துவங்கியுள்ளார்.

‘‘இந்தியாவில் களிமண்ணில்தான் அதிகமாக பொருட்கள் செய்கிறார்கள். அவை அனைத்தும் புதுவிதமாகவும் கலைத்தன்மையோடும் இருக்கும். அதிகமான மக்கள் இதனை வாங்கினாலும் அந்தப் பொருளில் அவர்களுக்கு ஏதேனும் ஒரு குறை இருக்கும். அதாவது, குறிப்பிட்ட வண்ணம் மற்றும் டிசைன் செய்யப்பட்டு இருந்தால் பார்க்க மேலும் அழகாக இருக்கும் என்பார்கள். காரணம், ஒவ்வொருவரின் எண்ணங்கள் வித்தியாசமானது. அவர்கள் மனதில் இருக்கும் வடிவில் புதிதாக செய்து தரலாமே தவிர ஏற்கனவே செய்யப்பட்ட பொருட்களில் வாடிக்கையாளர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய முடியாது. இந்த இடைவெளியை நிரப்ப, அவர்களுக்கான டிசைன்களை அவர்களே செய்து கொள்வது.

இந்த முறை பல நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. அதனை இங்கு செய்ய வேண்டும் என்று நினைத்து தேடிய போது தமிழ்நாட்டில் யாருமே செய்யவில்லை என்று தெரிந்தது. அதனால் நான் இதை செய்யலாம் என முடிவெடுத்து தொடங்கினேன். இதை நான் ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கவில்லை. ஒரு சிற்பத்தை வடிவமைத்து அதற்கு வண்ணங்கள் தீட்டும் போது
ஒருவரின் மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் அவர்களின் சிந்தனைகளை தூண்டவும் செய்யும்.

கலைப் பொருட்கள் செய்யும் போது நம்முடைய மனது இலகுவாகி கவலைகள் எல்லாம் மறந்துவிடும். மற்ற நாடுகளில் எல்லாம் குடும்பம் குடும்பமாக சென்று இந்த மண் சார்ந்த பொருட்களை தயாரிப்பதும் அதற்கு வண்ணங்கள் பூசுவதற்கு தங்களுடைய நேரத்தை செலவிடுவார்கள். குடும்பமாக ஒரு வேலையில் ஒரே சிந்தனையில் இருக்கும் போது அவர்கள் அது சார்ந்து பேசுவார்கள். அவர்களுடைய சிந்தனை முறைகள், ஆர்வம் இவைஎல்லாம் மற்றவர்களுக்கு தெரிய வரும். குழந்தைகளும் பெற்றோருடன் செல்லும் போது அவர்களின் சிந்தனைத் திறனும் அதிகரிக்கும்.

நான் முதலில் இந்தக் கடையை துவங்கும் முன் தமிழ்நாட்டில் உள்ள மண் சிற்பக் கலைஞர்களை சந்தித்தேன். அவர்களிடம் பேசி எனக்கு என்ன சிற்பங்கள் வேண்டும் என்று முடிவு செய்தேன். பீங்கான் மற்றும் மண்ணால் செய்யக்கூடியப் பொருட்களை செய்ய தொடங்கினோம். அவை அனைத்திற்கும் நாங்க எந்தவித வண்ணங்களும் தீட்டாமல் வெள்ளை நிற பொம்மைகளாக கொடுப்போம். விலங்குகள், பறவைகள் முதல் சாதாரண பானைகள் என அனைத்து டிசைன்களிலும் அவர்கள் எனக்கு வடிவமைத்து கொடுத்தார்கள்.

அவை எல்லாம் என் ஸ்டுடியோவில் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு எந்த உருவங்கள் பிடித்திருக்கிறதோ அதற்கு அவர்களுக்குப் பிடித்த வண்ணங்களை தீட்டலாம். அதை நாங்க காய வைத்து அதன் மேல் கிளேஸினை தடவி குறிப்பிட்ட டிகிரி வெப்பத்தில் வைப்போம். பிறகு மீண்டும் இரண்டு நாட்கள் காயவைத்து பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் மாறிய பின்னர் அதனை வடிவமைத்து வாடிக்கையாளர்களிடம் கொடுப்போம். வாடிக்கையாளர்கள் வண்ணம் தீட்டிய பிறகு அதனைஅழகாக மாற்றிக் கொடுக்க இரண்டு வாரங்களாகும்.

இங்கு என் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு ஆமை பொம்மையின் ஓட்டின் மேல் ஏதாவது பொருட்கள் வைக்கும்படி டிசைன் செய்திருக்கிறோம். நாய், முயல் வடிவத்தில் உண்டியல் உள்ளது. இப்படி ஒவ்வொரு பொருளும் அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும். வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் கைப்பட வண்ணங்கள் அடித்திருக்கிறோம் என்ற திருப்தியும் இருக்கும்.

நான் 2018ல்தான் இந்தக் கடையை ஆரம்பித்தேன். இன்று வரை பலவிதமான பொம்மைகளை வண்ணம் தீட்டி வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றிருக்கிறார்கள். ேமலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் மண்ணில் எப்படி பொருட்களை செய்யலாம் என்றும் வகுப்புகள் எடுத்து வருகிறேன். அதிலும் பலரும் ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள்’’ என்கிறார் சுனிதா சக்ரவர்த்தி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

 

The post நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு நாமே வண்ணம் தீட்டலாம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED அழகு தரும் விளக்கெண்ணெய்