பாலின பேதங்கள் ஒரு பார்வை

நன்றி குங்குமம் தோழி

ஆயிரக்கணக்கான ஜீவராசிகள் இவ்வுலகில் உண்டு. அதில் ஒன்றுதான் மனித இனம். ஆனால் ஓர் இனம் என்பது மட்டுமே உண்மை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சில பல வேற்றுமைகளும், சில பல ஒற்றுமைகளும் உண்டு. ஒரே அச்சில் வார்த்த இயந்திர உருப்படிகள் அல்ல நாம் என்பதை நினைவில் கொண்டு, ஒவ்வொருவரையும் நாம் வகுத்திருக்கும் இலக்கணம் என்ற அச்சுப்படி இருக்கிறார்களா என தர சோதனை செய்து கொண்டிராமல், அனைவரையும் சாதி, மதம், மொழி, நாடு, செல்வம், திறமை, விருப்புகள், முக்கியமாக பாலினம் என்ற பேதங்களை எல்லாம் கடந்து பார்க்கக் கற்றுக் கொண்டோமானால் நாம் வாழும் இவ்வுலகு இன்னும் எத்தனையோ அழகாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் இல்லையா? இக்கட்டுரையில் பிறந்ததிலிருந்தே நம்மை எல்லாம் பிளவுபடுத்திக்கொண்டிருக்கும் பாலின பேதங்கள் குறித்து பேசுவோம்..!பாலின இலக்கணங்களின் தொடக்கம்!ஒவ்வொருவரும் தனி மனிதரே.

ஒவ்வொருவர் குணம், உருவம், பார்வை எல்லாம் மாறுபட்டதே. அதே நேரம் மனித இனம் என்று பேசுகையில் நாம் அனைவரும் ஓர் இனமே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பல மிருகங்களை போல் நாமும் கூட்டமாக எங்கு வாழ்வதற்கான உணவும் நீரும் கிடைத்ததோ அந்த இடங்களைத் தேடி, தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப நகர்ந்து கொண்டிருந்தவர்கள்தான். இயற்கையின் நியதிப்படி பெண் தன் வயிற்றில் கருவை சுமந்து பிள்ளை பெற்றுக் கொள்பவளாக இருந்ததால், இந்தத் திருமணம், குடும்பம் என்ற கோட்பாடுகளுக்குள் நாம் அடைபடாது இருந்த வரை, பெண்ணே தனக்கான ஆணை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல், மிருகங்களை உணவுக்காக வேட்டையாடவும், அவைகளிடமிருந்து தன்னையும் தான் சார்ந்திருந்த கூட்டத்தை காப்பாற்றவும், காடு, மலை என சுற்றி வரவும், பாரங்கள் சுமக்கவும், மற்ற கூட்டங்களுடன் தேவை ஏற்படும்போது சண்டை போடவும் என பல காரணங்களால், வலிமையான மக்களின் அவசியம் இருந்தது. வலிமையான குழந்தை பிறக்க வேண்டுமானால் ஆண்-பெண் இருவரும் வலிமையாக இருக்க வேண்டும்.

அதை அடிப்படையாக வைத்தே பெண் தனக்கான ஆணை தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அன்று பெண் என்பவள் பலவீனமானவள் என்ற அடைப்புக் குறிக்குள் அடைபடவில்லை. அவளே கூட்டங்களுக்கு தலைமை வகித்தாள், அவர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் வழிநடத்தினாள். அறிவால் மட்டுமல்லாமல், உடலாலும் பலம் கொண்டுதான் வாழ்ந்திருந்தாள். காட்டு மிருகங்களை வேட்டையாடினாள், மற்ற கூட்டங்களுடன் போர் புரிந்தாள், தன் பிள்ளைகளில் ஒன்று காட்டு விலங்குகளிடம் சிக்கி விட்டாலோ, இல்லை போரில் மாண்டுவிட்டாலோ, தன் கூட்டத்தின் மற்ற மனிதர்களின் நலம் கருதி, பிள்ளையை அப்படியே விட்டுவிட்டு செல்லும் அளவுக்கு மனத்திடமும் கொண்டிருந்தாள். இப்படி மனதாலும், அறிவாலும், உடலாலும் திடமானவளாக இருந்த பெண் இன்று இயற்கையிலேயே பெண் என்பவள் பலவீனமானவள் என்று சித்தரிக்கப்படும் இடத்திற்கும், அதையும் அவளே ஏற்று நடந்துகொள்ளும் நிலைக்கும் எப்படி வந்து சேர்ந்தாள் என்று அறிய வேண்டுமானால், கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் சரித்திரத்தை ஆராய வேண்டிவரும்.

எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமெனில் ஒரே வார்த்தையில் விவரித்து விடலாம், மூளைச்சலவை என்று. உண்மை என்னவெனில், ஆண்களிலும் பலவீனர்கள் உண்டு. பெண்களிலும் பலவீனர்கள் உண்டு. அதே போல்தான் பலம் கொண்டவர்களும். தனி மனிதர்களின் குணாதிசயங்களை, உடல் திடத்தை, மன வலிமைகளை பாலின பேதங்களை உட்புகுத்தி, பெண் என்பவள் பலவீனமானவள் எனவும், ஆண் என்பவன் பலம் பொருந்தியவன் எனவும் ஒட்டுமொத்தமாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது. விளைவு, இந்த இலக்கணத்திற்குள்தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் தன்னைத்தானே உட்படுத்திக்கொள்ள முயன்று, தன் இயல்பு தொலைத்து, அரிதாரம் பூசி, வேடம் போடும் மனிதர்களை உலகம் முழுவதும் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த பேதங்களினால் இருவரில் ஒருவருக்கு நன்மை உண்டா என்றால், நிச்சயமாக இல்லை. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கே இந்த பேதங்கள் பிரச்னைகளைதான் உருவாக்கியிருக்கிறது.

தேச பேதங்கள், மத பேதங்கள், சாதி பேதங்கள், மொழி பேதங்கள், பாலின பேதங்கள் என மனிதன் சூழ்ச்சி செய்து அனைவரையும் பிரித்து வைத்ததின் மூலம், நாம் எதை சாதித்திருக்கிறோம் என்றால் ஒருவருக்கு கிடைப்பது இன்னொருவருக்கு கிடைக்காமல் போகச் செய்திருக்கிறோம். இதன் மூலம் மனிதருக்குள் ஏற்றத்தாழ்வுகளை சாதித்திருக்கிறோம். ஆண்டான்களையும், அடிமைகளையும் உருவாக்கினோம். அடிமைகளை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டியும், எங்கே வளர்ந்தபின் ஏற்றத்தாழ்வுகளை ஏற்க மாட்டாரோ என அஞ்சி, பிறப்பிலேயே பேதங்கள் திணிக்கப்படத் தொடங்குகிறது. ஆண்/பெண் பேதமும் அங்குதான் தொடங்குகிறது. ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் இயற்கைக்கு புறம்பானவை. ஒருவரின்றி இன்னொருவர் அடுத்தடுத்த தலைமுறையை உருவாக்க இயலாது. இருவரும் இணைந்து வாழ்வதற்கும், ஒருவரின் தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்து வாழும் தன்மையிலும் தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால் இங்கு இந்த அவசியமில்லா பேதங்களை புகுத்தியதின் பலனாக, ஒரு பாலார் ஆண்டானாகவும் இன்னொரு பாலார் அடிமையாகவும் வாழும் அவலம் ஏற்பட்டுவிட்டது. தனி மனிதரை தனி மனிதராக பார்க்க இயலாமல் போய் ஆண்களும் பெண்களும் தனித்தனி கூட்டமாக நின்று ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இல்லாமல், குற்றம் குறைகள் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆண்கள் கூட்டமே இப்படித்தான் என்று பெண்களும், பெண்கள் கூட்டமே இப்படித்தான் என்று ஆண்களும் பேசுவதை கேட்கையில், நம்மில் இந்த பேதங்கள் எத்தனை அறியாமையை உண்டு செய்திருக்கிறது என்ற அச்சம்தான் எழுகிறது. இத்தனை அறியாமையை வைத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாலும், இருவரும் சேர்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது எனும்போது, உறவுகள் எப்படி சுமுகமாக அமையும்? ஒருவரை ஒருவர் மதிக்காவிடில், அந்த உறவு எத்தனை திடமான கயிற்றினால் பின்னப்பட்டிருந்தாலும், எப்பொழுது அறுந்துவிழும் என்ற அச்சம் தவிர்த்து வாழ இயலுமா? இருவரும் சமநிலையில் நின்று, சமமாக பொறுப்பேற்று, சமமாக உரிமைகள் பெற்று வாழ சமூகமும் சரி, குடும்பமும் சரி முன்னேற வாய்ப்புகள் இருக்கிறதா? ஒருவர் மேலே நின்று நூல் கட்டி ஆட்டுவித்தால், இன்னொருவர் எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருக்க,

இன்னொருவர் பொம்மை அல்லவே, இருவரும் ஆறறிவு கொண்ட மனிதப்பிறவி தானே? ஆடுபவர் விருப்பத்துடன் ஆடுவதான கற்பனையிலும், என்றுமே நூல் தன் கையில்தான் இருக்கும் என்ற மமதையிலும், அறிவு மழுங்கித்தான் போகிறது மனிதருக்கு. ஆட்டுவிக்கப்படுபவரும் மனிதர் என்பதால், அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதால், ஆட்டுவிப்பவர் மேல் அன்பு தொலைந்து, வன்மம் குடிகொள்ளும் என்பதை கூட அறியாத ஆறறிவு உயிரினம் தான் நாம். இங்கு தன்னை ஆண்டானாக நினைத்திருப்பவரும் அடிமைதான். ஆண்டான் என தன்னைத்தானே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சிறை இருப்பவர். எங்கே நூலை சிறிது நழுவ விட்டாலும், பொம்மை ஆடாமல் போய்விடுமோ என்ற பயத்திற்கு அடிமை, தான் நூலை பிடித்திருக்கிறோம் என்ற போதைக்கு அடிமை, தாகம், பசி, சோர்வு அத்தனையும் புறம் தள்ளி, தானும் வாழாமல் மற்றவரையும் வாழவிடாமல் செய்யும் மனப்பிறழ்வு வேறு.
முதல் அத்தியாயம் தவிர்த்து இங்கு ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் என்று பொதுவாக பேசுவதை தவிர்க்க எண்ணியுள்ளேன்.

ஏனெனில், நாம் கடந்த காலத்தில் வாழ்வதைவிட நிகழ்கால நிலையைப் பற்றி பேசுவதே வருங்காலத்திற்கு நன்மை பயக்கும். இங்கு ஆதிக்கம் செலுத்தும் பெண்களும் உண்டு, அடிமைத்தனம் கொண்ட ஆண்களும் உண்டு. அதனால், நாமாவது நம் பேத மனப்பான்மையை இங்கே களைவோம். எங்கிருந்து இந்த பேதங்களும், அதன் நீட்சியாக அவரவர் பாலினத்திற்கு ஏற்ப இலக்கணங்களும் பிறந்திருக்க வேண்டுமெனில், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில், அவர்கள் விவசாயம் என்பதை கண்டுபிடித்து இடம் இடமாக நகராமல், ஓரிடத்தில் வாழத் தொடங்கிய பின். அன்றன்று காய்கனிகள் பறித்தோ, மற்ற மிருகங்களை வேட்டையாடியோ உண்டு கொண்டிருந்த மனிதர்களுக்கு நாளைக்கான உணவு என்பதனை சேமிக்க வேண்டிய அவசியமோ வசதியோ இல்லாமல் இருந்தது. அதனால் அந்தந்தக் கூட்டங்கள் ஒன்றாக வேட்டையாடி அவர்களுக்குள் பகிர்ந்து உண்டு கொண்டார்கள். ஆனால் விவசாயம் என்ற ஒன்றில் விளையும் தானியங்கள் நாளை, மறுநாள் என்று பல காலங்களுக்கு சேமிக்கத்தக்கதாக இருந்தன. தான் உழும் நிலம் தனக்கானது எனவும், அதில் விளையும் பயிரில் தனக்கே உரிமை எனவும் தோன்ற ஆரம்பித்த பிறகு, மானிடர்கள் பங்கிட்டு உண்ணும் தன்மை காணாமல் போயிருக்க வேண்டும்.

தன் உழைப்பில் விளையும் தானியங்கள் தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே போகவேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இங்கு தான் ஒரு பெண் ஒரு ஆணுடன்தான் உறவு கொள்ள வேண்டும் என்ற இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தோல்களும், இலைகளும் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்தவர்கள், சிறிது சிறிதாக பலதரப்பட்ட கைவினைப் பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு செய்வதற்கான ஆர்வம் பெண்களுக்கு ஏற்பட, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு கைத்தொழில்களை செய்வதும், ஆண்கள் அப்பொருட்களை இடம் விட்டு இடம் சென்று வியாபாரம் செய்து, பண்டமாற்று முறையில் தங்களுக்கு வேண்டியதை வாங்கி வரவும் இருந்திருக்கிறார்கள். இங்கிருந்துதான் பெண் வீட்டுப்பணி செய்வதும், ஆண் வெளி வேலைகளை கவனிப்பதுமான வேலை பகிர்தலாக ஆரம்பித்திருக்க வேண்டும். இவ்வகையில் பெண்களுக்கு பிள்ளைகளை கவனித்துக்கொள்ளவும் சுலபமாக இருந்திருக்கும்.
(தொடர்ந்து சிந்திப்போம்…)

தொகுப்பு:லதா

இருவரும் சமநிலையில் நின்று, சமமாக பொறுப்பேற்று, சமமாக உரிமைகள் பெற்று வாழ சமூகமும் சரி, குடும்பமும் சரி முன்னேற வாய்ப்புகள் இருக்கிறதா? ஒருவர் மேலே நின்று நூல் கட்டி ஆட்டுவித்தால், இன்னொருவர் எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருக்க, இன்னொருவர் பொம்மை அல்லவே, இருவரும் ஆறறிவு கொண்ட மனிதப்பிறவி தானே?

The post பாலின பேதங்கள் ஒரு பார்வை appeared first on Dinakaran.

Related Stories: