காற்றாலையைத் தொடர்ந்து 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையங்கள்: மின் உற்பத்தி மையமாகும் தென் மாவட்டங்கள்

* ரூ.10,375 கோடியில் புதிய திட்டங்கள், 3,000பேருக்கு வேலைவாய்ப்பு

நாடு வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. உயர் வர்க்கத்தினர், நடுத்தர வாசிகள் என அனைவரும் வீடுகளில் ஏசி பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் டிவி, பிரிட்ஜ், வாசிங்மெஷின் ஆகியவை அத்தியாவசிய பொருளாகி விட்டது. ஒரு காலத்தில் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து, அம்மியில் சட்னி அரைத்தது மாறி அவையெல்லாம் இன்று கிராமங்களில் கூட காட்சிப் பொருளாகி விட்டன. இன்று கிரைண்டரும், மிக்சியும் அணிவகுத்துள்ளன. அப்படி இருக்கும் போது மின்சாரத்தின் தேவை அதிகரிக்காமல் இருக்குமா…? இதனால் வீடுகளில் மின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து விட்டது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக 10 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த ஒரு நாள் மின் தேவை 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்து விட்டது. மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் போது அதன் உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒரு காலத்தில் நீர் மின்சாரம், அனல் மின்சாரம் மூலமே தமிழகத்தின் மின் தேவை சமாளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் காற்றாலை மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி என மரபு சாரா எரிசக்தி உற்பத்தியும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

காற்றாலைகளை பொறுத்தவரை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மே மாதம் இறுதியில் காற்று சீசன் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்கள் அதிக காற்று வீசும் காலங்களாகும். இந்த மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இது மட்டுமல்லாது சூரிய மின் சக்தி மூலமும் மின்சாரம் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ல் பொறுப்பேற்றது முதல், தொழில் துறை, விவசாயம், வணிகம், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், மின்சார வாகன மின்னூட்ட நிலையங்கள் அமைப்பதற்காக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் 2030க்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டுவதற்காக தொழில் துறையினருக்கு சீரான மின்சாரம் கிடைப்பதற்கு பசுமை மின்சார திட்டங்களை ஊக்குவித்து வருகிறார்.

இதற்காக சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத காற்றாலை மின்சாரம், சூரிய மின்சார திட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.10,375 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காற்றாலை, சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.

2015ல் தொடங்கப்பட்ட லீப் எனர்ஜி நிறுவனம் திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றாலைகளை நிறுவியுள்ளது. 2029க்கள் 6 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை உயர்த்த திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவ உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் காற்றாலைகள் மூலம் 400 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.

தற்போது மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் படி அங்கு 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி திட்டத்தை தொடங்க உள்ளது. இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அய்யனார் ஊற்று பகுதியில் 1000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தையும், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி பகுதியில் 750 கிலோவாட் துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 1000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தையும் தொடங்க உள்ளது. இதன் மூலம் எதிர் காலத்தில் காற்றாலையைத் தொடர்ந்து சூரிய மின் சக்தி உற்பத்தியிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் சாதனை படைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

* மரபு சாரா எரிசக்தி ஏன்?
இந்தியாவில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை 22 கோடியை தாண்டி விட்டது. இதில் தமிழ்நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடி. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, நச்சுக் காற்று ஆகியவை காரணமாக புவி வெப்பமடைந்து வருகிறது. பைக், ஆட்டோக்கள், பஸ்கள், லாரிகள், கனரக வாகனங்கள் வெளியிடும் புகையில் காரீயம், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன், சல்பர்டை ஆக்சைடு ஆகியவை வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவை தவிர அனல் மின் நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரியால் அவற்றில் இருந்து வெளியேறும் தூசு, நச்சு வளிமண்டலத்தில் படிந்து விடுகிறது.

இதனால் பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பசுமையான மின்சாரம் உற்பத்தி அதாவது காற்றாலைகள், சூரிய மின்சக்தி ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் இல்லை. மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே தூத்துக்குடியில் வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அந்த வரிசையில் தற்போது காற்றாலை, சூரிய மின் சக்தி திட்டங்களுக்கும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

* நாட்டிலேயே முதல் மாநிலம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை, காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது. இங்கு காற்று வீசும் காலங்களில் அதிகபட்சமாக 10,491 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மின் உற்பத்தி மாநிலத்தின் மின் உற்பத்தியில் 9 சதவீதம் ஆகும்.

* மின் உற்பத்தி பயன்பாடு
தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நீர் மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் மூலம் நடந்து வருகிறது. தற்போது காற்று காலம் இல்லாததால் காற்றாலை மின் உற்பத்தி இல்லை. அக்.10ம் தேதி நிலவரப்படி மின் உற்பத்தி குறித்த விவரம் வருமாறு:

மின்உற்பத்தி மெகவாட்
நீர் மின்சாரம் 578
அனல் மின்சாரம் 3055
எரிவாயு மின் உற்பத்தி 106
தனி மின் உற்பத்தி திட்டங்–கள் 534
பிற மாநிலம் 179
மின் கொள்முதல் 333
மரபு சாரா எரிசக்தி 2,355
மத்திய தொகுப்பு 5,406
எல்டிஓஏ 2,499

கடந்த 3 ஆண்டுகளில்…
ஆண்டு காற்–றாலை மின் உற்பத்தி(மில்லியன் யூனிட்டுகளில்)
2021 -22 11,947
2022-23 13,384
2023-24 12,697

The post காற்றாலையைத் தொடர்ந்து 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையங்கள்: மின் உற்பத்தி மையமாகும் தென் மாவட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: