‘மலைகளின் இளவரசி’க்கு புது ரூட்: கொடைக்கானலில் நெரிசல் பயணத்திற்கு ‘குட்பை’; மக்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் நடவடிக்கை ; அமைச்சர்கள் நேரில் ஆய்வு திட்ட அறிக்கை விரைவில் தயார்

‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம். இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை காலங்களில் வாகன நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. இதனை குறைப்பதற்கு சுற்றுலா பயணிகள் எளிதில் கொடைக்கானலுக்கு வந்து செல்ல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் நிரந்தரமாக வாகன நெரிசலை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் பெருமாள் மலை முதல் அப்சர்வேட்டரி ரோஜா பூங்கா வரை வாகன நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து வந்தது. இதனை குறைப்பதற்காக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில் கொடைக்கானலில் மாற்று சாலை திட்டம் தான் இதற்கு நிரந்தர தீர்வு என்று கண்டறியப்பட்டது. இதற்காக, கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கொடைக்கானல் – வில்பட்டி – அஞ்சுவீடு வழியாக மாற்று சாலை திட்டத்திற்கான முதல்கட்ட ஆய்வு பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. தொடர்ந்து மாற்று சாலை அமைப்பதற்கான ஆய்வு பணிகளை நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்து வந்தனர். கொடைக்கானலுக்கு மாற்று சாலை திட்டம் அமைப்பது குறித்து தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் அர.சக்ரபாணி மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானலில் கோடை சீசன் காலத்தில் ஏராளமான வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வத்தலக்குண்டு மலைச்சாலையில் அதிகளவிலான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலை 7 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. ஒரு சில இடங்களில் 5 மீட்டர் அளவிற்கு அகலம் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கக்கூடிய காய்கறிகளை கொண்டு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமல்லாது, அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதற்கு மாற்றுச்சாலை தேவை என கொடைக்கானல் வந்த முதலமைச்சரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நேரடியாக ஆய்வு செய்துள்ளோம். இந்த மாற்றுச்சாலை கொடைக்கானலில் வில்பட்டி – கோவில்பட்டி – டிவிஎஸ் பகுதி – அஞ்சுவீடு – பேத்துப்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் வழியாக செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த மாற்றுச்சாலை அமைந்த உடன் கொடைக்கானலுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து நெரிசல் குறையும். போக்குவரத்தும் எளிதாகும்.

இதன் திட்ட அறிக்கை ரூ.30 லட்சத்தில் விரைவில் தயார் செய்யப்படவுள்ளது. வத்தலக்குண்டு, பழநி மலைச்சாலைகளில் சுமார் 11 இடங்களில் ரூ.14 கோடி செலவில் புதிய தொழில்நுட்பம் கொண்ட உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவை நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைச்சாலைகளில் சோதனை முறையில் அமைத்து பரிசோதிக்கப்பட்டதில் வெற்றிகரமாக இருந்ததையடுத்து, கொடைக்கானல் உள்ள 2 மலைச்சாலைகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் மலைச்சாலைகளில் மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து நவீன தொழில்நுட்பம் கொண்ட சாயில் நைலிங் சிஸ்டம் அமைக்கப்படும்.

ஊட்டியில் இது வெற்றிகரமாக அமைக்கப்பட்டு மண் சரிவை தடுத்துள்ளது. கொடைக்கானல் போன்ற மலைச்சாலைகள், டெல்டா மாவட்டங்களில் சாலைகள் 3 ஆண்டுகளுக்குள் சேதமடைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியில் உள்ள மண்சூழலே காரணம். இப்பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் – அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலை விரைவில் நடைமுறைக்கு வரும். கொடைக்கானல் – பழநி, வத்தலக்குண்டு மலைச்சாலைகள் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். இதற்கான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட உள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் அல்லது மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்திருந்தால் அப்பகுதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறையின் ஆய்வகம் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகமாக மாற்றப்பட உள்ளது. இங்கு பணிபுரியும் பொறியாளர்கள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நெடுஞ்சாலைத்துறை அரசு செயலாளர் செல்வராஜ், கலெக்டர் பூங்கொடி உள்ளிட்டோர் இருந்தனர்.

* ரூ.150 கோடி திட்டம்
நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜன் கூறியதாவது: கொடைக்கானல் ஏரிச் சாலையில் இருந்து வில்பட்டி, கோவில்பட்டி, அஞ்சு வீடு, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், ஆகிய மலைக்கிராமங்களை இணைத்து இந்த மாற்று சாலை அமைய உள்ளது. மொத்தம் 25 கிமீ தொலைவிற்கு இந்த மாற்று சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று சர்வே நேர்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அலைன்மென்ட் கமிட்டி ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த பணிகள் துவங்கும். இந்த மாற்றுச்சாலை அமைய உள்ள பகுதிகளில் தனியார் நிலங்களுக்கு பணம் கொடுப்பது, அதேபோல சாலை அமைய உள்ள இடத்தில் உள்ள புவியியல் சிக்கல்கள் ஆய்வு செய்யப்படும். இதில் எது குறைவான அளவில் இருக்கிறதோ அந்த பகுதியில் மாற்றுச்சாலை அமைக்கப்படும். எஸ்இ, டிஇ உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களின் குழு மீண்டும் இந்த மாற்று சாலை அமைய உள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். தோராயமாக ரூ.150 கோடிக்கு மேல் இந்த சாலை அமைக்க தொகை தேவைப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* டிஜிட்டல் பாயிண்ட் சிஸ்டம் முறையில் ஆய்வு
மாற்றுச்சாலை தொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அதன் தலைவர் டேவிட் கூறியதாவது: கொடைக்கானலில் மாற்று சாலை திட்டத்திற்காக 7 பேர் கொண்ட குழு ஆய்வு பணிகளை துவங்கியுள்ளது. இதற்காக வில்பட்டி, புலியூர், அஞ்சு வீடு, அஞ்சுரான் மந்தை மற்றும் சில பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. 3 மாற்று சாலை திட்டத்திற்கான சர்வே செய்யப்பட்டது. இந்த 3 மாற்று சாலைகள் பற்றிய சாதக பாதகங்களின் பட்டியல்களும் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு ஆய்வறிக்கை நெடுஞ்சாலை துறையின் அலைன்மென்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அந்த கமிட்டியில் எஸ்இ லெவலில் உள்ள பல அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப முறைகளான டிஜிட்டல் பாயிண்ட் சிஸ்டம் மூலமும், டோட்டல் சிஸ்டம் என்ற முறையிலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘மலைகளின் இளவரசி’க்கு புது ரூட்: கொடைக்கானலில் நெரிசல் பயணத்திற்கு ‘குட்பை’; மக்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் நடவடிக்கை ; அமைச்சர்கள் நேரில் ஆய்வு திட்ட அறிக்கை விரைவில் தயார் appeared first on Dinakaran.

Related Stories: