×

ஷூ தயாரிப்பில் மேஜர் ரோல் பெண்கள்தான்!

நன்றி குங்குமம் தோழி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகிற பொருட்களை வாங்கிப் பழக்கப்பட்ட நமக்கு, வெளிநாட்டவர் அணிகிற ஃபார்மல், செமி ஃபார்மல், கேஷூவல்ஸ், பார்ட்டிவேர், வாட்டர் புரூஃப் என அனைத்து மாடல் ஷூமற்றும் காலணிகள் தமிழ்நாட்டில் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை.சம்மர் என்றால் லைட் கலர், வின்டெர் எனில் டார்க் கலர், மழை காலத்தில் வாட்டர் புரூஃப், காஷூவல் வேர், பார்ட்டி வேர் என மாற்றி மாற்றி ஷூக்களை வெளிநாட்டவர் அணிவார்கள்.

பிறந்ததில் இருந்தே ஷூக்களை அணிந்து பழக்கப்பட்டவர்கள் இவர்கள்.ஜீன்ஸ் போட்டால் அதற்கு ஒரு ஷூ. ஃபார்மல் உடையெனில் அதற்கு ஏற்ப பார்மல் ஷூ. ஃபேஷன் உடையெனில் அதற்கேற்ப ஃபேஷன் ஷூ என்று வெளிநாட்டவர் அணியும் ஷூக்களில் தமிழகத்தில் இருந்தும் தயாராகி மேலைநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்கிற தகவலின் அடிப்படையில், காலணி
தயாரிப்பில் ஈடுபட்டுள்ள க்ளார்க்ஸ் ஷூ நிறுவன தயாரிப்பின் கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையை அணுகியபோது…

தென் அமெரிக்க நாடுகளில் வளர்க்கப்பட்ட உயரமான பெரிய உயர் ரக மாடுகளில் 45 அடி நீள தோல்கள் தொங்கிய நிலையிலும், சுருண்டும் கிடத்தப்பட்டிருக்க… ஒவ்வொரு பணி இடத்திற்கும் கட்டிங் செக் ஷன், அப்பர் செக் ஷன், பாட்டம் செக் ஷன், அசெம்ளிங் செக் ஷன் என ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு டேபிள்களை கன்வேயர் பெல்ட் கடந்து, அங்கு பணியாற்றுகிற பெண்களின் கரங்களுக்குள் புகுந்து, அவர்களின் விரல்களில் நர்த்தனமாடி ஷூவுக்கான மேல்பகுதி டாப் போர்ஷன் முதலில் தயாராகின்றது. பிறகு வேறொரு இடத்தில் ஷூவிற்கான அடிப்பாகம் தயாராகி இரண்டும் இணைக்கப்படுகிறது.

அதன் பிறகு குவாலிட்டி செக் செய்யப்பட்டு, எந்த நாட்டுக்கு செல்கிறதோ அந்த நாட்டின் விலைப்பட்டியலுடன் பேக் செய்யப்படுகிறது. இந்தத் தயாரிப்பு பணிகளில் பெரும் உழைப்பைச் செலுத்துகிற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்களை நம்மால் காண முடிந்தது.க்ளார்க்ஸ் ஷூ தயாரிப்பு பணியின் தமிழக பிரிவின் இயக்குநராகவும், கன்ட்ரி மேனேஜராகவும் செயல்படும் சுரேஷ்குமாரிடம் பேசியதில்…‘‘இந்தியா என்றாலே புவர் குவாலிட்டி. டெலிவரி நேரத்திற்கு இருக்காது. டிரான்ஸ்பரன்ஸி இல்லை போன்ற எண்ணங்கள் வெளிநாட்டவர்களிடம் உண்டு.

இன்று அந்த எண்ணங்களைத் தகர்த்து, 5 சதவிகிதத்திற்கு குறைவாக லெதர் ஷூக்களை வாங்கிக் கொண்டிருந்த மேலை நாடுகளை 30 சதவிகிதம் வாங்குகிற அளவுக்கு தரத்தை உயர்த்திக் காட்டி இருக்கிறோம்’’ என விரல் உயர்த்தியவாறு பேச ஆரம்பித்தார் சுரேஷ்குமார்.‘‘எங்களுடையது இன்டர்நேஷனல் பிராண்ட். யு.கே., யு.எஸ்., ஜப்பான், யுரோப், சீனா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜெர்மன், நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற மேலை நாடுகளுக்குத் தேவைப்படுகிற அனைத்து மாடல் லெதர் ஷூக்களையும் இங்கிருந்து தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம்.

இதற்கென கும்மிடிப்பூண்டியில் தொடங்கி, ஆம்பூர், ராணிப்பேட்டை வரை செயல்படுகிற சில தொழிற்சாலைகளுடன் இணைந்து தேவைப்படுகிற மாடலை உற்பத்தி
செய்கிறோம்.ஷூ தயாரிப்புக்குத் தேவையான பாகங்களை கட் செய்வதில் தொடங்கி, பேஸ்டிங், ஸ்டிச்சிங், ஷேப்பிங், ஹீட்டிங், வாஷிங், க்ளீனிங், ஹீட்டிங், ஹீட் ஏர் ஃப்ளோவிங், ஃபினிஷிங், குவாலிட்டி செக்கிங், பேக்கிங் எனப் பலகட்ட வேலைகள் இதில் மறைந்திருக்கிறது. இது எலக்ட்ரானிக் சாதனங்களை அசெம்பிள் செய்கிற மாதிரியான வேலை கிடையாது. முழுக்க முழுக்க மனித உழைப்பில் தயாராகும் கைவினைப் பொருள்(handcraft).

ஒரு ஜோடி ஷூக்களைத் தயாரிக்க 120 கரங்களின் உழைப்பும். 1200 விரல்களின் நர்த்தனமும் இதில் தேவைப்படுகின்றது.ராணிப்பேட்டையில் செயல்படும் தொழிற்சாலையில் பெண்கள், குழந்தைகளுக்கான ஷூக்கள் தயாராகி ஏற்றுமதியாகிறது. குழந்தை பிறந்து தவழும் பருவத்தில் தொடங்கி விடைபெறும் காலம் வரை பயன்படுகிற பல்வேறுவிதமான ஷூக்களை இங்கு தயாரிக்கிறோம். குழந்தைகளுக்கு கலர்ஃபுல் மற்றும் பேக் டூ ஸ்கூல் முறையில் இரண்டுவிதமாக ஷூக்களைத் தயாரிக்கிறோம்.

பெண்கள், குழந்தைகள் அணிகிற காலணிகளுக்கு மென்மையான மாட்டின் தோல்கள், ஆடு, செம்மறி ஆட்டில் இருந்தும் பெறப்படுகிறது. ஷூ தயாரிப்பில் மேஜர் ரோல் பெண்கள்தான். 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களே அனைத்துப் பிரிவுகளிலும் பணி செய்கின்றனர். பெண்களே அவர்கள் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுபவர்களாகவும், குடும்பத்தை நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் ஒரு தலைமுறையே மாறியிருக்கிறது. அவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிகளுக்குச் செல்பவர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.

சுருக்கமாக They are breadwinners. எங்களுடைய ஆம்பூர் யூனிட் இன்னும் கூடுதல் பிரமிப்பு. அங்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள். முன்பெல்லாம் பெண்களை ஹெல்பராக பொருட்களை எடுக்க, தொடைக்க, ஒட்டுவதற்கு எனப் பயன்படுத்தி வந்த நிலையில், இன்று திறமைகள் நிறைந்த ஹை ஸ்கில்ட் ஆப்ரேஷன் பணிகளில் தங்கள் உழைப்பைக் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். மிகக் குறைந்த அளவு படிப்பு இருக்கிற பெண்களும், முறையான பயிற்சிக்குப் பிறகே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

உழைப்பின் மூலமாக திறமைகளை வளர்த்து, சூப்பர்வைசர்களாகவும், மேலாளராகவும் உயர் பதவிகளையும் சில பெண்கள் அலங்கரிக்கிறார்கள். அடிப்படை ரா மெட்டீரியலான மாட்டுத் தோல்களின் மீது, தேவைப்படுகிற ஷூக்களின் கிராஃப்டை நூற்றுக்கும் மேலான பெண்கள் செய்து கொடுக்கிறார்கள். எங்களுடையது குளோபல் நிறுவனம். எனவே இன்டர்நேஷனல் பிராண்ட் பெயரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் இருப்பதால், எங்கள் தயாரிப்பை தொழிற்சாலைகளுக்குள் கொண்டு செல்வதற்கு முன்பே, குழந்தைத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் இருக்கிறார்களா? அரசு நிர்ணயித்த அடிப்படை ஊதியம் சரியான முறையில் பெண்களுக்கு வழங்கப்படுகிறதா?

பெண்களின் பணியிடச் சூழல், பாதுகாப்பு, பாதுகாப்பு சாதனங்கள், பாதுகாப்பிற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், சுத்தமான கழிப்பறை வசதி, சிறு குழந்தைகளுக்கு காப்பக வசதிகள் போன்றவற்றை ஆடிட்டிங் செய்து, சரியாக இருந்தால் மட்டுமே அந்த தொழிற்சாலையோடு இணைந்து நாங்கள் தயாரிப்பு பணி செய்கிறோம்.இந்தப் பணிகளில் இருக்கும் பெண்கள், துவக்கத்தில் இது குறித்த எந்த புரிதலும் இல்லாமல்தான் வருவார்கள். இவர்கள் அதிகம் படித்தவர்களும் இல்லை. விளிம்புநிலைதான். இவர்களின் கை அமைப்புகளும் ஒன்று போல் இருக்காது. ஷூ வடிவமைப்புக்குத் தேவையான டெக்னிக்கல் முறைக்குள் இவர்களைக் கொண்டுவந்து, முறையான பயிற்சிகளை வழங்கிய பிறகே, ஷூக்களை வடிவமைக்கிறோம். இந்த மனித உழைப்புக்கும் நேச்சுரல் பயன்பாட்டுக்கும் மரியாதை இருக்கா? இந்த வேல்யூவை நுகர்வோர் புரிந்துகொள்கிறார்களா என்பதே எங்களின் கேள்வி’’ என்றவாறு விடைபெற்றார்.

அஸ்வினி,பிளானிங்

‘‘தோல் காலணிகள் தயாரிப்பு வேலைகளைப் பொறுத்தவரை எட்டு மணி நேரமும் பெண்கள் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய நிலைதான் இருக்கிறது. இது மனதிற்கு கஷ்டமான விஷயம் என்றாலும், நேரம் தவறாமல் வேலைக்கு வருவதில் தொடங்கி, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பை செலுத்துவது வரை தங்கள் கடமையையும், பொறுப்பையும் பெண்கள் உறுதி செய்கிறார்கள். தங்களின் உழைப்பை மிகமிக அர்ப்பணிப்புடன் பெண்கள் தருகிறார்கள். பெண்கள் அவர்களின் சொந்தக் காலில் நிற்கிறார்கள் என்பதைத் தாண்டி, கணவர் சரியில்லாத நிலையில், பல குடும்பங்களில் பெண்களே வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைப் பாதுகாக்கிறார்கள். பெரும்பாலான பெண்களின் குடும்பத்தை அவர்கள்தான் தலைமையேற்று நடத்துகிறார்கள். இந்தப் பெண்களின் வருமானத்தில்தான் மொத்த குடும்பமும் இயங்குகிறது.’’

சுப்பையா,

டெவலப்மென்ட்‘‘ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அமெரிக்காவிற்கு என்ன தேவை, யுகேவிற்கு என்ன தேவை, ஜப்பான், சீனாவிற்கு என்ன தேவை என அவர்களின் தேவையை எங்களிடத்தில் கொடுப்பார்கள். ஷூ மாடலுக்கான டிராயிங் யு.கே. மற்றும் யு.எஸ் நாட்டில் இருந்து வருகிறது. அந்த டிராயிங்கை தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புராடக்டாக மாற்றுவோம். ஸ்கெட்சில் இருக்கும் ஒரு மாடலை புராடக்டாக மாற்ற எங்களுக்கு 10 மாதம் எடுக்கும். எல்லா புராடக்டையும் ஒரே இடத்தில் நாங்கள் தயாரிப்பதில்லை. எந்த தயாரிப்பை யார் சரியாகச் செய்வார்கள். எவ்வளவு அவர்களால் உற்பத்தி செய்து தரமுடியும் என்பதை தீர்மானித்து பல்வேறு தொழிற்சாலைகளோடு இணைந்து வேலை செய்கிறோம். டிசைனர் பேப்பரில் போடும் ஒரு ஸ்கெட்சை நாங்கள் ஷூவாக மாற்றிக் கொண்டு வந்து, அதனை இஞ்சினியரிங் செய்து, கம்ஃபெர்ட் கொடுத்து, ஃபிட் பண்ணி, எல்லா டெஸ்டும் செய்து, அப்ரூவ் செய்து, விலை நிர்ணயித்து, இங்கிருக்கும் தொழிற்சாலைகள் வழியே எவ்வளவு தயாரிக்கலாம் என்பதை முடிவு செய்து, ஆன்டைமில் புராடக்டை டெலிவரி செய்கிறோம். குளிர் காலம், இலையுதிர் காலம் என இரண்டாய் பிரித்து, அடுத்த ஆண்டுக்கு தேவைப்படுகிற ஷூ மற்றும் காலணிகளை இப்போதே தயாரிக்க ஆரம்பித்து விட்டோம். இந்த ஆண்டின் தேவைகள் கடந்த ஆண்டே தயாராகி ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

ஆ.வின்சென்ட் பால்

The post ஷூ தயாரிப்பில் மேஜர் ரோல் பெண்கள்தான்! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,
× RELATED ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்