×

சொல்லால் அடித்த சுந்தரி

நன்றி குங்குமம் தோழி

அலுவலகத்திலிருந்து வந்த தயாளன் கேட்டைத் திறந்ததுமே வராண்டாவில் அமர்ந்திருந்த பிருந்தாவைப் பார்த்து துணுக்குற்றான்.வருவதாக ஃபோன் செய்து கூட சொல்லவில்லையே. சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாள்; பைக்கை நிறுத்திவிட்டு அவளை நோக்கி வந்தபோதே அவள் கட்டியிருந்த சேலை மெல்லிய அதிர்ச்சியை கொடுத்தது.கஞ்சிப் போட்ட காட்டன் புடவையைதான் பெரும்பாலும் அணிந்து கம்பீரமாக காட்சித்தரும் பிருந்தா வீட்டில் கட்டிய சேலையோடு வந்திருக்கிறாள்.“என்னம்மா… ஃபோன் கூட பண்ணாம வந்திருக்கே ?” என்று கேட்டவாறே அவளை நெருங்கியபோது தூக்கிவாரிப் போட்டது.அழுது சிவந்த முகத்தை நிமிர்த்தினாள் பிருந்தா.“நான் ஃபோன் செய்தேன். உன் ஃபோன் சுவிட்ச் ஆஃப்ல இருந்தது…” சொல்லும்போதே அவளுடைய கண்கள் கலங்கி வழிந்தது.“என்னம்மா… என்னாச்சு?” கொஞ்சம் பயத்துடனேயே கேட்டான் தயாளன்.“முதல்ல கதவைத் திற. உள்ள போய் சொல்றேன்” என முந்தானையால் கண்களைத் துடைத்தபடியே எழுந்து கொண்டாள் பிருந்தா.பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே வந்தான் தயாளன். பின்னாலேயே வந்த பிருந்தா அங்கிருந்த சோபாவில் பொத்தென அமர்ந்து முகத்தை கைகளால் பொத்திக் கொண்டு “ஓ…” வென அழத்தொடங்கினாள்.

ஒருநிமிடம் அவளுடைய அழுகை தந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன தயாளன் அவள் சொல்லாமலேயே விஷயத்தைப் புரிந்து கொண்டான்.பிருந்தாவிற்கும் அவளுடைய கணவனுக்கும் ஏதோ சண்டை. அதனால்தான் சேலையைகூட மாற்றாமல் அப்படியே புறப்பட்டு வந்திருக்கிறாள்.அவளருகே அமர்ந்து “பிருந்தா என்னாச்சு? உனக்கும் உன் புருஷனுக்கும் ஏதாவது சண்டையா?” என்றான்.சட்டென்று நிமிர்ந்த பிருந்தா “போதுண்ணா… போதும். அவர் கூட நான் வாழ்ந்தது போதும். இனிமே நான் அவர்கூட வாழ மாட்டேன். இங்கயே இருந்துடறேன்” என்றாள்.“அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்ததுன்னு முதல்ல சொல்லும்மா.”அண்ணனுடைய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவளாய் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்ட பிருந்தா பெரிதாக மூச்சு வாங்கி விசும்பிவிட்டு சொன்னாள்.“அண்ணா… அவர் நம்ம குடும்பத்தை ரொம்ப கேவலமாப் பேசறார். ”“கேவலம்ன்னா?…”“அதையெல்லாம் என்னால சொல்லவே முடியலை. வார்த்தைக்கு வார்த்தை பிச்சைக்காரக் குடும்பம். என்னத்தை செய்து கிழிச்சீங்க? அப்படி இப்படின்னு என்னவெல்லாமோ சொல்றார்”“சரி… விடு. ஏதாவது சொல்லிட்டுப் போறாரு.”“நானும் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காமத்தான் இருந்தேன்.

உன்னை, நம்ம அம்மா, அப்பாவை எல்லாம் கண்டபடி பேசுவார். போனாப் போகுது போனாப் போகுதுன்னு பார்த்தா…இப்ப என்னையே அசிங்கமா பேசறார். கெட்ட வார்த்தையால திட்றார். அதைத்தான் என்னால தாங்க முடியலை.” சொல்லிவிட்டு மறுபடியும் குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினாள்.சில நிமிடங்கள் அமைதியாக இருந்த தயாளன் “சரிம்மா… விடு. உன் புருஷன்தானே சொன்னான். இதையெல்லாம் பெரிசுப்பண்ணிக்கிட்டு இப்படி ஓடி வருவியா?” என்று சமாதானப்படுத்த முயன்றான்.“அண்ணா… நீ வந்து அவரை என்னான்னு கேளு? ஏன் இப்படியெல்லாம் பேசறே ஒழுங்காயிருக்க மாட்டியான்னு கண்டிச்சு வை.”“என்னம்மா சொல்றே? மாப்பிள்ளையை போய் நான் எப்படி?”“மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை. அந்த மரியாதையெல்லாம் அவருக்குத் தேவையில்லை. நீ வந்து என்ன ஏதுன்னு கேட்டாத்தான் அவருக்கு கொஞ்சமாவது பயம் வரும்.இங்க நான் கோவிச்சுக்கிட்டு வந்திருக்கறது அவருக்குத்தெரியும். இங்கிருந்து நான் தனியா போனா அண்ணன் காரன்கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருப்பா… ஆனா, அவன் வந்து ஒரு வார்த்தைக் கூட கேட்கலை. நமக்கு பயந்துக்கிட்டிருக்கான்னு இன்னும் உன்னைப் பத்தி கேவலமா நெனைச்சு வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் பேசுவார்.

நீ வந்து என்னன்னு கேளு…”தயாளனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.“புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்கற சண்டைக்குள்ள மூணாம் மனஷன் நுழைக் கூடாதும்மா!”“யாரு? நீ எனக்கு மூணாம் மனுஷனா?உன் தங்கச்சியை அவரு இப்படியெல்லாம் பேசியிருக்காரு உனக்கு ரோஷமே வரலையா?”“இதப்பார்… நீ என்ன வேணா சொல்லு. என்னால அங்க வந்து எதையும் கேட்க முடியாது. முதல்ல கண்ணைத் துடை. உன் அண்ணி ஆபீஸ்லேர்ந்து வர்ற நேரம். இதையெல்லாம் அவகிட்ட சொல்லாதே. அப்பறம் நம்ம குடும்பத்தைப் பத்தி கேவலமா நினைப்பா. உன் புருஷன் சொன்னதையெல்லாம் சொன்னின்னா ஊர் பூரா பரப்பிடுவா. அவகிட்ட எதையும் காட்டிக்காதே” என்று வேறு அவன் எச்சரித்தான்.அவன் எச்சரித்த அதே நேரம் சுந்தரி படியேறினாள்.சோபாவில் அமர்ந்திருந்த பிருந்தாவைப் பார்த்த சுந்தரி “வா பிருந்தா எப்ப வந்தே?” என்றாள்.பிருந்தா ஒன்றும் சொல்லாமல் மௌனமாகயிருக்கவே சற்றே கூர்ந்து பார்த்த போதுதான் அவளுடைய பழைய புடவையும், அழுத முகமும் உறுத்தியது.துணுக்குற்றவள் தன் கைப்பையை வைத்துவிட்டு அவளருகே வந்தாள். அமர்ந்தாள்.“பிருந்தா என்னாச்சு?” என அவளுடைய கையை மென்மையாகப் பற்றினாள். அந்த தொடுதலில் அண்ணனால் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள் அணையை உடைந்து கொண்டு பெருக தற்காலிகமாக நிறுத்தியிருந்த அழுகையைத் தொடர்ந்தாள் பிருந்தா. அவளாக சொல்லட்டும் என அமைதி காத்தாள் சுந்தரி.

அவள் எதுவும் சொல்லிவிடக்கூடாது என சூழ்நிலையை மாற்ற விரும்பிய தயாளன் “ஒண்ணுமில்லை. அவளுக்கும் அவ புருஷனுக்கும் சின்னதா சண்டையாம். அதான் சின்ன புள்ளை மாதிரி கோவிச்சுக்கிட்டு வந்திருக்கா. அதுக்குத்தான் பக்கத்திலேயே கட்டிக்கொடுக்கக் கூடாதுங்கறது. சீர்காழிக்கும் மாயவரத்துக்கும் அரை மணி நேரத்துல வந்துட்டுப் போயிடலாமே. அதான் ஆ ஊன்னா வந்துடறா…” சூழ்நிலையை மாற்ற கலகலப்பாக்குவதாக நினைத்து தனக்குத்தானே சிரித்து சமாளித்தான் தயாளன்.“சரி… சரி நீ போய் காபி போட்டு எடுத்தா” என அவளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான். எங்கே தங்கை எல்லாவற்றையும் சொல்லிவிடுவாளோ என்ற பதட்டம் அவனிடமிருந்தது. சுந்தரியும் பொறுமையாக விஷயத்தைக் கேட்டுக் கொள்ளலாம் என்பதைப் போல் எழுந்து உள்ளே சென்றாள்.உடை மாற்றிக் கொண்டு கைகால்களை கழுவிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள்.பிருந்தாவிடமும், தயாளனிடமும் கொடுத்துவிட்டு தனக்கான காபியை உறிஞ்சினாள். கோப்பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு வந்து மறுபடியும் நாத்தனாரிடம் அமர்ந்தாள்.“சொல்லு என்ன விஷயம்? நீ வந்திருக்கற கோலத்தைப் பார்த்தா உங்க அண்ணன் சொல்ற மாதிரி சின்ன சண்டையா எனக்குத் தெரியலை. என்னாச்சு?”சுந்தரியின் ஆதரவான கேச வருடலில் அவளால் எதையும் மறைக்க முடியவில்லை.

அண்ணனிடம் சொன்ன அத்தனையையும் சொன்னாள்.“இவ்வளவு கேவலமா அவர் என்னை பேசறாரு. வந்து என்னன்னு கேளுண்ணான்னு சொன்னா அண்ணன் முடியாதுங்குது. ஒரு தடவை வந்து என்ன ஏதுன்னு கேட்டாத்தானே அவரு நாக்கை அடக்குவாரு. கேட்கலைன்னா இவளை என்னவேணா சொல்லலாம். கேட்க நாதியில்லைன்னு அலட்சியம்தானே வரும். நெஞ்சில கொஞ்சம் கூட பயம் இல்லாம என்னை அவர் காலம் பூரா பேசிக்கிட்டேத்தான் இருப்பாரு…” சொல்லிவிட்டு விசும்பி விசும்பி அழுதாள். சில நிமிடங்கள் அங்கே பெரும் அமைதி உண்டானது.“அண்ணி நீங்களாவது எடுத்து சொல்லுங்க. அண்ணனை வந்து கேட்க சொல்லுங்க…”சுந்தரி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே “தெரியும் அண்ணி.. நீங்களும் அண்ணன் பக்கம்தான். கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா அவ்வளவுதான். நல்லதோ கெட்டதோ புருஷன் பேச்சைக் கேட்டுக்கிட்டு அங்கயே கிடக்கணும்னு உங்க பங்குக்கு நீங்களும் அட்வைஸ் பண்ணப் போறீங்க…அண்ணன் மட்டும் வந்து என்ன ஏதுன்னு என் புருசனை கேட்கலை கண்டிக்கலை…அப்பறம் நான் இந்த வீட்டுப் படியேற மாட்டேன். ஆமா…”
விருட்டென எழுந்தாள் பிருந்தா. அதே வேகத்தில் எழுந்த சுந்தரி சட்டென்று அவளுடைய கையைப் பிடித்தாள்.“பிருந்தா… உங்க அண்ணன் கேட்கலைன்னா என்ன நான் கேட்கறேன். வா…”“அண்ணி…!” அதிர்ச்சியும் ஆச்சரியமாகவும் பிருந்தா அண்ணியை பார்க்க சுந்தரி திடமாக சொன்னாள்.

“என்ன பார்க்கிறே? உன் புருஷனை நான் நாலு கேள்வி நறுக்குன்னு கேட்கறேன். பொண்டாட்டின்னா என்ன அவ்வளவு இளக்காரமாயிட்டா? இது ஒண்ணும் அந்தக் காலம் இல்லை அடங்கிப் போக. போய் முகத்தைக் கழுவிக்கிட்டு என்னோட வேற சேலையைக் கட்டிக்கிட்டு கிளம்பு. ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம் உன் புருசனை…”சுந்தரி கொடுத்த தைரியம் பிருந்தாவுக்குள் ஒரு கம்பீரத்தைத் தந்தது.அவள் சொன்னபடியே உள்ளே சென்று முகம் கழுவி அண்ணியின் புது சேலை ஒன்றை எடுத்துக் கட்டிக் கொண்டு தலைவாரி நெற்றியில் பளிச்சென பொட்டு வைத்துக் கொண்டு வந்தாள்.சுந்தரியுடன் கிளம்பி போகும்போது ‘உனக்கில்லாத தைரியம் அண்ணிக்கு இருக்குப் பாரு. நீ கேட்காவிட்டால் என்ன? எனக்கு அண்ணி இருக்கா’ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஏறுபோல் நடை போட்டு சுந்தரியுடன் சென்றாள்.இருவரும் சண்டைக்கோழிகளாக…பேருந்து நிலையத்திற்கு வந்து சீர்காழி செல்லும் பேருந்தைப் பிடித்து அமர்ந்தனர்.ஜில்லென வீசிய காற்றே எல்லா பிரச்னைகளையும் தீர்த்ததைப் போன்ற உணர்வைக் கொடுத்தது பிருந்தாவிற்கு.

வீட்டில் தனியாக இருந்த தயாளனுக்கு சரியாக எட்டு மணிக்கு பிருந்தாவிடமிருந்து அழைப்பு வந்தது.“ஹலோ…”“அண்ணா… நீ சரியான பயந்தாங்கொள்ளி. தொடை நடுங்கி. என் புருஷனை தட்டிக் கேட்க உனக்குத் தைரியம் இல்லை. ஆனா, அண்ணி என்ன செய்தாங்க தெரியுமா? என் புருஷனை சட்டையை பிடிக்காதக் குறையா, பளார் பளாருன்னு அறையாதக் குறையா நல்லா கேட்டாங்க. உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டிருக்கே? இப்படியெல்லாம் அசிங்கமா பேசுனா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவோம் ஜாக்கிரதைன்னு மிரட்டினாங்க பாரு… என் புருசன் கதிகலங்கிட்டாரு…” சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள். அழுது கொண்டே வீட்டிற்கு வந்த பிருந்தாவா இது என நினைக்க வைத்தது.“அது மட்டுமில்லை. என் புருசனை தட்டிக் கேட்க பயந்த உன்னையும் அவங்க விட்டுக் கொடுக்கலை. என்ன தெரியுமா சொன்னாங்க? நீ பிருந்தாவை இப்படி அசிங்க அசிங்கமா பேசறது அவ அண்ணனுக்குத் தெரியாது. அவருக்கு மட்டும் தெரிஞ்சா அவ்வளவுதான் அருவாளை தூக்கிக்கிட்டு வந்திடுவார். உன்னை வெட்டி பொலி போட்டுடுவார். அவருக்கு தங்கச்சின்னா உயிரு. அவளை ஒரு வார்த்தை யாரும் சொன்னா தாங்க மாட்டார். அப்படின்னு ஒரு போடு போட்டாங்க பாரு அந்த மனுஷன் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பெல்லாம் கேட்டாருன்னா பாரேன். இனி என்னை இங்க யாரும் அசைக்க முடியாது. சும்மா ஜான்சிராணிக் கணக்கா அண்ணி தூள் கிளப்பிட்டாங்க. உன்னையும் பெரிய வீரனாக்கிட்டாங்க…” வெடித்து சிரித்தாள் பிருந்தா.

பத்துமணி வாக்கில் சுந்தரி பிருந்தா சொன்னதைப் போல்தான் ஜான்சிராணிக்குரிய கம்பீரத்துடன் உள்ளே நுழைந்தாள்.சோபாவில் அமைதியாக உட்கார்ந்து அலைபேசியில் எதையோ ஆராய்ந்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். அவன் அவளை நிமிர்ந்துப் பார்த்துவிட்டு மறுபடியும் அலைபேசியில் ஆழ்ந்தான். “என்ன… உங்க தங்கச்சி வீட்ல என்ன நடந்ததுன்னு கேட்க மாட்டீங்களா?” என்றாள்.அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே “எப்படி கேட்பீங்க? இல்ல எப்படி கேட்பீங்கன்னு கேட்கறேன். ஏன்னா… அந்த மனுஷன் உங்க தங்கச்சியை எப்படியெல்லாம் பேசறானோ அதையேத்தானே நீங்களும் என்னைப் பேசறீங்க? எதுக்கெடுத்தாலும் என் குடும்பத்தை இழுத்து பிச்சைக்கார பயலுங்க, கையாலாகாதவனுங்கன்னு… இன்னும் என்னென்னமோ…! என்னையும் படிச்சு வேலைப் பார்க்கறவள்னு மரியாதைக் கூட இல்லாம அசிங்க அசிங்கமா திட்டுறீங்க? அதனாலதானே அவ வந்து அவ புருஷனை என்னன்னு கேட்க வான்னு கூப்பிட்டப்ப உங்களால போக முடியலை. கேட்க முடியலை. உங்களை சட்டையைப் பிடிச்சு நாலறைவிட்டு கேட்க எனக்குத்தான் நாதி இல்லை. அப்பா போயாச்சு. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அழுது தீர்க்கறேன். ஆனா, பிருந்தா என்னை மாதிரி அனாதை இல்லையே. அண்ணன் உங்களுக்கு அந்த மனுஷனை தட்டிக் கேட்க யோக்கிதை இல்லைன்னாலும் நான் விட்டுட முடியுமா? அதான் தட்டிக் கேட்டுட்டு வர்றேன்.”சொல்லால் சுந்தரி அடிக்க அடிக்க தயாளன் அவமானத்தால் தலைகுனிந்தான்.

தொகுப்பு: ஆர்.சுமதி

The post சொல்லால் அடித்த சுந்தரி appeared first on Dinakaran.

Tags : Sundari ,Dayalan ,Brinda ,
× RELATED தூத்துக்குடியில் நேற்று காணாமல்போன...