1.30 லட்சம் ஸ்டார்ட் அப் சிறு, குறு நிறுவனங்கள் டைடல் பார்க் தொடக்கம்: தென் தமிழகத்தின் தொழில் முனையமாக மாறும் மதுரை; பல கோடி ரூபாயில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி தீவிரம்

ஆன்மிக தலைநகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என, பல்வேறு பெருமைகளை கொண்ட மதுரையை தென் தமிழகத்தின் தொழில் முனையமாக மாற்றும் நோக்கில், உள்கட்டமைப்பு வசதிகளில் முதன்மையான மேம்பாலங்கள், சாலை வசதியை மேம்படுத்த தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், 2023, மார்ச் 31ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 3 கோடியே 39 லட்சத்து 72 ஆயிரத்து 67 வாகனங்கள் மாநிலம் முழுவதும் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில், மதுரை மாவட்டத்தில் டூவீலர், கார், ஆட்டோ, ரோடு ரோலர், டிராக்டர், மோட்டார் கேப், ஆம்னி பேருந்து என, போக்குவரத்து துறை அல்லாத மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த வாகனங்களின் எண்ணிக்கையை சேர்த்து, 14 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக, அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டில் 174 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், இந்தாண்டில் கடந்த மார்ச் மாதம் வரை 275 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன. இவற்றுடன் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் நடப்பாண்டில் மட்டும் சுமார் 1,25,872 மேற்பட்ட நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் வடபழஞ்சி, மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே புதிதாக டைடல் பார்க் அமைக்க, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ஆன்மிகம் மற்றும் உணவு சுற்றுலாவுக்கும் புகழ்பெற்று விளங்குவதால் மாதத்திற்கு சுமார் 20 லட்சம் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்வுக்கேற்ப, மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை, தமிழக அரசு கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் முதன்மையான சாலை வசதிக்கென, தனி திட்டங்களை உருவாக்கி, சிறப்பு நிதி வாயிலாக புதிய பைபாஸ்கள், மேம்பாலங்கள் கட்டும் பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, திட்டங்கள் பிரிவு அதிகாரிகள் செய்து வருகின்றனர். அதன்படி, கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடியில் மேம்பாலமும், மேலமடை சந்திப்பில் ரூ.150.23 கோடி மதிப்பில் மேம்பாலமும் கடந்தாண்டு அக்டோபரில் துவங்கி நடந்து வருகின்றன.

அதனுடன், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் ரூ.41.89 கோடியில் பசுமலை மூலக்கரை துவங்கி திருப்பரங்குன்றம் வரை 1.20 கிமீ தூரம் 7 மீட்டர் அகலத்திற்கும், மதுரை – திண்டுக்கல் சாலையில் வைகை வடகரை சாலையில், தனியார் பல்பொருள் அங்காடி அருகில் துவங்கி கன்னியாகுமரி – வாரணாசி சாலையில் சமயநல்லூர் வரை 8 கிமீ தூரத்திற்கும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. கோரிப்பாளையம் மேம்பால திட்டத்தில் தற்போதுள்ள வைகை ஏவி மேம்பாலம் அருகே புதிதாக இணைப்பு பாலமும் கட்டப்பட உள்ளது.

அதில், தமுக்கத்தில் துவங்கி கோரிப்பாளையத்தை அடைந்து, இணைப்பு பாலம் வழியாக நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் விதமாகவும், மற்றொரு புறம் செல்லூர் நோக்கி கூடுதலாக ஒரு இணைப்பு பாலமும் கட்டப்பட உள்ளது. இப்பணிகள், 15 சதவீதம் முடிந்துள்ளன. மேலமடை மேம்பால திட்டத்தில் அண்ணா பஸ் நிலையம், ஆவின் மற்றும் மேலமடை சந்திப்புகளில் நான்கு வழிச்சாலைகளுடன் கூடிய ரவுண்டானா அமைத்து, மேலமடை சந்திப்பு துவங்கி கோமதிபுரம் சந்திப்பு வரை பாலம் கட்டப்படுகிறது. இப்பணிகள், 30 சதவீதம் வரை முடிந்துள்ளன.

அதேபோல், வடகரை பைபாஸ் பணிகளுக்காக வைகை ஆற்றின் கரையோரத்தில் சுற்றுச்சுவர் கட்டுதவற்கான, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. அரசரடியில் ரூ.5 கோடியில் ரவுண்டானாவை மேம்படுத்தும் பணிகளும் துவங்கி நடந்து வருகின்றன. இவற்றுடன், வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரையிலான 30 கிமீ தூரத்திற்கு ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்படும் வெளிவட்ட சாலையுடன் சேர்த்து, சிட்டம்பட்டியிலிருந்து சிலைமான், எலியார்பத்தி வழியாக திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டி வரை சுமார், 40 கிமீ தூரத்திற்கு தென்காசி சாலையை இணைக்க, பைபாஸ் சாலை அமைப்பதற்காக ரூ. 4 லட்சத்தில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் துவங்கி நடந்து வருகின்றன.

இதனுடன், வைகை வடகரையில் குருவிக்காரன் சாலை பாலம் அருகில் விடுபட்டு கிடக்கும் சாலையை, மதுரை – ராமேஸ்வரம் சாலையுடன் இணைக்க, நில ஆர்ஜித பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வெளிவட்ட சாலையுடன், நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலை பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்தால், மாவட்டத்தின் நான்கு திசைகளிலிருந்தும் மாநகருக்குள் வந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.

அதாவது, வடக்கு, தெற்கு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லவும், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு செல்லவும், வைகை வடகரை மற்றும் தென்கரை பைபாஸ்களை பயன்படுத்தினால் போதும் என்ற நிலை உருவாகும். அதேபோல், வெளிவட்ட சாலையுடன் ஆலம்பட்டி வரை பைபாஸ் சாலை அமைந்தால், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல வைகை வடகரை சாலைக்கும் வர வேண்டியதில்லை. இதனால் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், காளவாசல், அரசரடி, மேலமடை என, மாநகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குள் வெளியூர் மற்றும் வெளிமாநில வாகனங்கள் வந்து செல்வது குறையும்.

இதனால், புதிய தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பதுடன், அவற்றுக்கான தளவாட பொருட்களை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்வது எளிதில் முடிவடையும். மேலும், வெளியூர் மறறும் வெளிமாநில தொழிலாளர்கள், படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் பெருகி, தென் தமிழகத்தின் தொழில் முனையமாக மதுரை மாறும். தொழில் மட்டுமின்றி ஆன்மிகம் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, மாவட்டத்திலேயே தயாரிக்கப்படும் சுங்குடிச்சேலைகள் துவங்கி மூங்கில் பொருட்கள் வரை விவசாயிகள் மற்றும் கைவினை கலைஞர்களின் பொருட்களுக்கான, சந்தைப்படுத்துதலும் எளிமையாகும். மதுரையை தென்தமிழகத்தின் தொழில் முனையமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post 1.30 லட்சம் ஸ்டார்ட் அப் சிறு, குறு நிறுவனங்கள் டைடல் பார்க் தொடக்கம்: தென் தமிழகத்தின் தொழில் முனையமாக மாறும் மதுரை; பல கோடி ரூபாயில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: