×

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையின் அனைத்து மண்டல பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்

சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் தலைமையில், இன்று 07.10.2024 தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் அனைத்து மண்டல பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகளில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணிகள் – 1379, முடிவுற்றப் பணிகள் – 802, முன்னேற்றத்தில் உள்ள பணிகள் – 577 அவைகளின் திட்டப் பணி வாரியாக ஆய்வு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், அறிவிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம், பாரம்பரிய நீர்வளத்துறை சின்னமாக விளங்கக்கூடிய அணைகள் திட்டங்களின் முன்னேற்ற விவரங்கள், நீர்வளத்துறையின் முன்னோடியான திட்டங்கள் குறித்த முன்னேற்றம், அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்,

மேலும், அமைச்சர் அவர்கள் அரசால் அறிவிக்கப்பட்ட திட்ட பணிகள் தொய்வின்றி இந்த நிதியாண்டுக்குள் விரைந்து முடிக்குமாறும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பணிகளை வருகின்ற 31.12.2024-க்குள் முடிக்குமாறும் மேலும் அனைத்து மண்டலங்களில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை வருகின்ற 15.10.2024-க்குள் முழுமையாக முடிக்குமாறும் “முதல்வரின் முகவரி” மனுக்களை உடனடியாக தீர்வு செய்யுமாறும், திட்டப் பணிகளில் “நீங்கள் நலமா” பயனாளிகளிடம் பேசிய விவரங்களை தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், சு.மலர்விழி, நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) சா.மன்மதன், நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளர் சு.ஸ்ரீதரன், மற்றும் அனைத்து மண்டல பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையின் அனைத்து மண்டல பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Chennai ,Water Resources ,Water Department ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் நீர்நிலைகளில் குப்பைகள்,...