×

புது அம்மா to Fit அம்மா

நன்றி குங்குமம் தோழி

குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் நலன்தான் வீட்டில் உள்ளவர்களின் உலகமாக மாறியிருக்கும். அதனால், எல்லோரும் அம்மாவின் நலனை அடியோடு மறந்துவிடுவர். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று என்ன சொல்கிறது தெரியுமா? குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் கழித்துதான் அம்மாக்கள் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்புகின்றனர் என்று. எனவே, மனதளவிலும், உடலளவிலும், மூளையளவிலும் பெரும் மாற்றத்தை சந்திக்கும் புது அம்மாக்களின் உடலினைத் தேற்ற எந்த வகையில் இயன்முறை மருத்துவம் உதவுகிறது, என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்வோம்.

குழந்தை பிறப்புக்குப் பிறகான காலம்…

குழந்தை பிறந்த பின் இருக்கும் முதல் ஆறு மாதத்தை Post Partum Period எனச் சொல்லலாம். இது உடல் வேகமாக தேறிவரும் சமயம். அதேபோல கருப்பை சுறுங்க ஆரம்பிக்கும். மேலும் கர்ப்பக் காலத்தில் உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் குறைய தொடங்கியிருக்கும். எனவே, மனரீதியாகவும் மாற்றங்கள் நிறைய இருக்கும். இந்த நேரத்தில் நாம் நம்மை எவ்வளவு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பார்த்துக் கொள்கிறோமோ, அது மொத்தமும் அண்மைக்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் உதவும்.

சுகப்பிரசவம் – அறுவை சிகிச்சை…

சுகப்பிரசவம் செய்திருந்தால் உடல் நலம் முற்றிலும் சரியாக மூன்று மாதங்கள் போதுமானது. அதுவே, அறுவை சிகிச்சை செய்தால் முழுதாக ஆறு மாதம் தேவைப்படும். ஏனெனில் அறுவை சிகிச்சையில் வயிற்று தசைகள் மற்றும் கருப்பையை அறுத்து தைத்திருப்பர். இதனால் பூரணமாக குணமடைய தாமதமாகும். இது மட்டுமே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்பதால், அறுவை சிகிச்சை செய்துள்ள அம்மாக்கள் பயப்படவோ, உடற்பயிற்சிகள் செய்ய தயங்கவோ அவசியமில்லை.

என்னென்ன பாதிப்புகள்..?

1. உடல் எடை அதிகரிப்பு

கர்ப்பக் காலத்தில் அதிக உடல் எடை கூடும். இது இல்லாமல் 90 சதவிகித பெண்கள் குழந்தை பிறந்த பின் உடலிற்கு போதுமான ஓய்வு அவசியம் என அதிக உணவு உண்பது, எந்தவித எளிய உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பது, அதிக நேரம் தூங்குவது என இருப்பார்கள். இதனால் மேலும் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

2. வயிற்றுத் தசை பிதுங்குதல்

கர்ப்பக் காலத்தில் கர்ப்பப்பை விரிவதால் வயிற்று தசைகளும் கூடவே விரிந்து கொடுக்கும். இதனால் வயிற்றின் முன் உள்ள சிக்ஸ்பேக் தசைகள் பலவீனமாகும். இந்த தசைகள் இரு பக்கத்திலிருந்தும் வந்து நடுவே இணையும். குழந்தை பிறந்த பின் இந்த இணைப்பு சிலருக்கு முழுவதும் விட்டுப் போய் இருக்கும். இதையே ‘டயாஸ்டேசிஸ் ரெக்டை’ (Diastasis Recti) என மருத்துவத்தில் சொல்கிறோம்.

3. கழுத்து வலி

கிட்டத்தட்ட குழந்தையின் எடை, நஞ்சுக் கொடியின் எடை என எல்லாம் சேர்த்து பத்து கிலோ வரை கருவுற்றிருக்கும் போது சுமப்பதால் கழுத்து தசைகள் பலவீனமாய் இருக்கும். இதனுடன் சேர்த்து குழந்தை பிறந்த பின் அதனை அடிக்கடி தூக்கி பால் கொடுப்பது, கொஞ்சுவது, ஆடை மாற்றி விடுவது என அதிக முறை நாம் கீழே குனிந்து இருப்பதால் கழுத்து வலி நிச்சயம் வரும்.

4. முதுகு வலி

கர்ப்பப்பை விரிய விரிய வயிறு முன்னே செல்லும். இதனால் வயிற்றை முன் தள்ளி நடப்போம். முதுகு தசைகள் இறுக்கமாகவும், வயிற்று தசைகள் பலவீனமாகவும் மாறும். ஆகையால் முதுகு வலி நிச்சயம் வரும்.

5. சிறுநீர் அடக்க முடியாமல் இருப்பது

சிறுநீர் பை, கர்ப்பப்பை எல்லாவற்றையும் தாங்கும் கூடை போன்று தசைகள் இருக்கும். இதனை பெல்விக் தசைகள் எனச் சொல்வர். இந்த தசைகள் கருப்பை விரிவடையும் போது பலவீனமாகும். இதனால் குழந்தை பிறந்த பின் சிறுநீர் வருவதை அடக்க முடியாது. தும்மும் போதும் இரும்பும் போதும் கூட சிறுநீர் கசியும். இதனை அதிகமாக சுகப்
பிரசவமான பெண்களுக்கு பார்க்கலாம்.

தீர்வுகள்…

மேலே சொன்ன பாதிப்புகளுக்கு தக்க தீர்வுகள் உடற்பயிற்சி செய்வது மட்டுமே.அதிலும் சுகப்பிரசவமான பெண்கள் மூன்று மாதம் கழித்து உடற்பயிற்சிகள் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் ஆறு மாதம் கழித்து செய்யலாம். இரு பிரிவினருக்கும் உடற்பயிற்சிகள் அவர்களின் உடல் வலிமையை பொருத்து மாறுபடும். மேலும், முதலில் எளிய
பயிற்சிகளில் ஆரம்பித்து பின் கடுமையான பயிற்சிகள் வரை கற்றுக்கொடுப்பர்.

அதனால் பயிற்சிகள் செய்தால் வலி வருமோ என அஞ்ச வேண்டாம். தசை வலிமை பயிற்சிகளும், தசை தளர்வு பயிற்சிகளும் கற்றுக்கொடுப்பர். இதனால் கழுத்து வலி, முதுகு வலி, உடல் வலி அனைத்தையும் முற்றிலும் வராமல் தடுக்கலாம். சிறுநீர் கசிவதை தடுக்கவும், வயிற்று தசைகள் உறுதியாக பழைய நிலைமைக்கு மாறவும் உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுப்பர். உடல் எடையை குறைக்கவும் பயிற்சிகள் சில மாதங்களுக்கு பின் வழங்கப்படும். இதனால் பழைய உடல் எடைக்கு மீண்டு வரலாம்.

விளைவுகள்

உடற்பயிற்சிகளை சரியான நேரத்தில் செய்யவில்லை எனில் கழுத்து வலி, முதுகு வலி, அதீத உடற்பருமன், அதீத சர்க்கரை அளவுகள், உடற் சோர்வு, வயிற்றுப்
பகுதியை சுற்றி அதிக கொழுப்பு சேர்வது என பாதிப்புகள் வரலாம்.மேலும், இது தொடர்ந்தால் நாள்பட்ட கழுத்து வலி, முதுகு வலி, இரண்டாம் முறை கருத்தரிப்பதில் சிக்கல், சர்க்கரை நோய் என எல்லாம் வரும் அபாயம் உள்ளது.

மொத்தத்தில் குழந்தை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த காலக்கட்டம்தான் அம்மாவின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு என்பதை உணர்ந்து, இயன்முறை மருத்துவ துணை கொண்டு ஆரோக்கியமாய் நாட்களை முன் நகர்த்துவோம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

 

The post புது அம்மா to Fit அம்மா appeared first on Dinakaran.

Tags :
× RELATED எந்த உணவுக்கு எது நிவாரணம்?