வாடகை கட்டிடத்தில் மாதவரம் நீதிமன்றம்: மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புழல்: மாதவரம் புதிய பேருந்து நிலையம் அருகில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் மாதவரம் நீதிமன்றத்தை, புழல் பாலாஜி நகரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றியமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாதவரம் நீதிமன்றம் கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம்தேதி புதிதாக உருவாக்கப்பட்டு மாதவரம் – செங்குன்றம் நெடுஞ்சாலை, மாதவரம் புதிய பேருந்து நிலையம் அருகில் வாடகை கட்டிடத்தில் 1800 சதுர அடியில் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு புழல், மாதவரம், பால்பண்ணை மற்றும் மாதவரம் போக்குவரத்து பிரிவு, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய காவல் நிலையங்களில் நடைபெறும் வழக்குகள் சம்பந்தமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற வளாகத்துக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு சம்பந்தமாக பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இவர்களுக்கு, அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இவர்கள், கொண்டு வரும் வாகனங்களும் நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலையில் நிறுத்தப்படுவதால், ஒருசில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, வாடகை கட்டிடத்தில் இயங்கும் மாதவரம் நீதிமன்றத்தை இடமாற்றி, மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல் பாலாஜி நகர் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வடசென்னை கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான இடம் போதுமனதாக உள்ளது. இந்த, இடத்தில் இடம் ஒதுக்கி அலுவலகம் கட்டி மாதவரம் நீதிமன்றத்தை இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்களும், வழக்கு சம்பந்தப்பட்ட பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, காங்கிரஸ் மாநில சட்டத்துறை துணை தலைவர் வழக்கறிஞர் புழல் பி.குபேந்திரன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.

அதில் மாதவரம் பகுதியில் 1800 சதுர அடியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாதவரம் நீதிமன்றம் பல வகைகளில் பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் போதுமான வசதி இல்லாததால், இந்த நீதிமன்றத்தை புழல் பாலாஜி நகரில் உள்ள வடசென்னை கோட்டாட்சியர் வளாகத்தில் நீதிமன்றம் கட்டடத்தை மாற்றி அமைத்திட வேண்டுமென கோரி இருந்தார். இதனை மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பெற்றுகொண்டு, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பி உள்ளார். எனவே, விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post வாடகை கட்டிடத்தில் மாதவரம் நீதிமன்றம்: மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: