நூறாவது ஆண்டு தொடக்கம் தமிழ்நாட்டில் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி: சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் 57 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நேற்று பேரணி நடத்தினர். சென்னையில் நடந்த பேரணியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தொடங்கி 99 ஆண்டு நிறைவடைந்து, 100வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 57 இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் வருகிற 20ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறுகிறது. சென்னையில் எழும்பூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

பேரணிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் ராம்கிருஷ்ண பிரசாத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகர், சுரேஷ் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். லேங்க்ஸ் கார்டன் சாலை சந்திப்பில் தொடங்கிய இந்த பேரணியில் வெள்ளை, காவி நிற உடை அணிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி புதுப்பேட்டை வழியாக, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சமூக சேவகர் நல்லபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 

The post நூறாவது ஆண்டு தொடக்கம் தமிழ்நாட்டில் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி: சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: