×

மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்

திருவொற்றியூர்: மாதவரம் மண்டல சிறப்பு கூட்டம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமையில் நடந்தது. உதவி ஆணையர் திருமாறன், செயற்பொறியாளர்கள் சின்னதுரை, கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், காவல், குடிநீர் வாரியம், தீயணைப்பு, மின்வாரியம், பொதுப்பணி, நெடுஞ்சாலை போன்ற அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

அப்போது, கார்த்திகேயன், திருநாவுக்கரசு, சந்திரன், கனிமொழி, ஆஷ்னா மெறிசியாபெனின் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்க கூடாது, மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும், சாலையில் மின்கம்பங்கள் மீது படர்ந்து கிடக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளின் மீது செய்த பணிகளை ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தெளிவாக விளக்கினர். இறுதியில் பேசிய மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கடந்த பெரு மழையில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்போடு சிறப்பாக பணியை மேற்கொண்டோம். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு இம்முறை வரக்கூடிய பெரு மழையை எதிர்கொள்ள வேண்டும்.

தங்குமிடம், பைபர்படகு, மின்மோட்டார், பொக்லைன் இயந்திரம் போன்ற அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 24 மணி நேரமும் அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் கவனமாக செயல்பட வேண்டும்.
குறிப்பாக மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் உடனடியாக அதற்கு பதில் அளிக்க வேண்டும். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், ஆட்டோ மற்றும் வேன் போன்ற வாகனங்கள் அவசரமாக செல்லும்போது போக்குவரத்து பிரச்னை இல்லாத வகையில் சாலை ஓரம் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். மழைக்காலத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என ஆலோசனை வழங்கினார். இதை தொடர்ந்து பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் 115 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Madhavaram ,special ,Nandagopal ,Assistant Commissioner ,Thirumaran ,Chinnadurai ,Karthikeyan ,Revenue ,Water Board ,Fire ,Power Board ,Public Works ,Dinakaran ,
× RELATED மணலி நெடுஞ்சாலையில் உயரழுத்த...