×
Saravana Stores

ஈரான் தாக்குதலால் போர் பதற்றம்; லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி; அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம்

பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் வீரர்களை ஹஸ்புல்லா அமைப்பினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் அவ்வப்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பாலஸ்தீன பகுதியை இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்ததுதான். இதனால் வெகுண்டு எழுந்த பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. இந்நிலையில்தான் கடந்தாண்டு அக்டோபர் மாதம், ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. ‘ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை’ என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். இதனால் காசா மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது. 41 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த ஓராண்டில் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். பெண்களும், குழந்தைகளும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஹமாஸ் ஒழிக்கப்படவில்லை. இந்த போருக்கு முக்கிய காரணம், ஹமாஸ் அல்ல.. இஸ்ரேலின் காழ்ப்புணர்ச்சிதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை கூறினர்.

தற்போது காசாவை தொடர்ந்து லெபனானையும் தாக்க இஸ்ரேல் முன்வந்துள்ளது. இதற்கு காரணம், ஹமாஸ் படைகளுக்கு ஹிஸ்புல்லா எனும் அமைப்பு உதவியதுதான். ஹிஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு பெற்ற, லெபனானை சேர்ந்த ஒரு பாலஸ்தீன ஆதரவு இயக்கமாகும். இது ஹமாஸை விட அதிநவீன ஆயுதங்களை கொண்டிருக்கும் அமைப்பாகும். எனவே, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா தாக்குதல் தீவிரமடைந்தன. லெபனானில், ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் வெடிக்க வைத்தது. இதில் 2,000க்கும் அதிகமான ஹிஸ்புல்லா வீரர்கள் படுகாயமடைந்தனர். 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது மட்டுமல்லாது வான் வழியாகவும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் உட்பட பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து லெபனானுக்குள் தரைவழியாக ஊடுருவுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வந்த இரவே, இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலின் சில ராணுவ தளங்கள் தரைமட்டமாகின. இதற்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் லெபனானுக்குள் இஸ்ரேல் நுழைய முயன்றது. ஆனால், எல்லையிலேயே இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 70 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் லெபனானில் உயிரிழந்த இஸ்ரேலிய வீரர்களுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய தோல்வியாகும். இதனால் இஸ்ரேல் மீது விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளன. அதேநேரம், கடந்த ஓராண்டாக இஸ்ரேல் ஆடிய ஆட்டத்திற்கு ஹிஸ்புல்லாவும், ஈரான் தக்க பதிலடி கொடுத்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருக்கிறது. இது குறித்து ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் பைடன் பேசி இருப்பதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலை பற்றி விவாதிக்கவும், புதிய தடைகள் உட்பட இந்த தாக்குதலுக்கான பதிலை ஒருங்கிணைக்கவும் ஜி7 தலைவர்களுடன் இன்று காலை பேசினேன். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா உறுதியுடன் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

The post ஈரான் தாக்குதலால் போர் பதற்றம்; லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி; அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Iran ,Hizbullah ,Israel ,Lebanon ,America ,BEIRUT ,Hezbollah ,West ,Dinakaran ,
× RELATED ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்