×

சென்னையில் உள்ள உணவகங்களின் சுகாதாரமற்ற உணவுக்கூடம் மூலம் நோய் விநியோகம்: எலி, கரப்பான் பூச்சியால் நோய் பரவும் ஆபத்து; முறையாக பதப்படுத்தப்படாமல் விற்கப்படும் இறைச்சி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

* சிறப்பு செய்தி
சென்னையில் வீடுகளில் சமைத்து சாப்பிடுவது குறைந்து, ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரிகமாக மாறிவருகிறது. ஒருசிலர் நேரம், காலம் பார்க்காமல் உணவுகளை வெளுத்து வாங்குகின்றனர். உணவு பிரியர்களை வாடிக்கையாளர்களாக வளைத்து போடுவதற்காக பெரிய ஓட்டல்களில் விதவிதமான உணவு வகைகளுடன் மெனு கார்டு வைத்துள்ளனர். அதைப் பார்த்து ஓட்டல்களுக்கு படையெடுக்கும் உணவு பிரியர்களும் உள்ளனர். ஓட்டல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறிய உணவகங்கள், சாலையோர உணவகங்களிலும் பலவித சைவ அல்லது அசைவ உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அந்த உணவு சமைக்கும் இடம் சுகாதரமாக இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

தமிழகத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட அசைவ மற்றும் இறைச்சி கடைகளில் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சைவ உணவகங்களில் பழைய காய்கறிகளை பயன்படுத்தி சாம்பார் தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது. ஆனால் பழைய சென்னை மாவட்டத்தில் 107 வார்டுகள் மட்டுமே இருந்தது. மற்ற வார்டுகள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்து உள்ளது. எனவே இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனைத் தவிர சிறிய உணவகங்கள் இயங்கி வருகிறது. இதில் பல உணவகங்களின் உணவுக் கூடம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

சில உணவகங்களில் முறையாக அனைத்தும் செய்தாலும், பாத்திரம் சுத்தமாக இருப்பதில்லை. இதனால் அந்த உணவு எளிதில் கெட்டுப்போகிறது. அத்துடன் வாங்கப்படும் இறைச்சி மற்றும் காய்கறிகள் சுகாதாரமற்ற குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலமாக வைத்து அதில் இருந்து உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவற்றை சாப்பிடுவதால் தான் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் சில உணவகங்களில் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிகள் வரவழைக்கப்படுகிறது. அந்த இறைச்சியை, உணவுக் கூடத்தில் இருக்கும் துருப்பிடித்த உடைந்த குளிர்சாதன பெட்டியில் வைக்கின்றனர். இதனால் இறைச்சியின் மீது பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளது.

மேலும் அந்த குளிர்சாதன பெட்டி பாத்திரங்கள் சுத்தப்படுத்தும் இடத்தில் பெரும்பாலும் வைக்கப்பட்டிருக்கும். இதனால் அந்த பகுதி, கரப்பான் பூச்சி, எலிகள் உலாவும் இடமாக மாறி உள்ளது. அந்த குளிர்சாதன பெட்டியில் இருக்கும் இறைச்சியுடன் அங்கு உணவு தயாரிக்க வைத்து இருக்கும் பருப்பு, அரிசி என அனைத்து பொருட்களையும் நாசம் செய்துவிடுகிறது. குறிப்பாக உணவுக் கூடங்களில் வெளியில் வைத்து இருக்கும் காய்கறிகளை எலி வாய் வைத்து பாதியை கடித்து வைத்து செல்கிறது. அதனை அப்புறப்படுத்தாமல் தண்ணீரால் கழுவி உணவு தயாரிக்க பயன்படுத்தும் அவல நிலையும் நிகழ்ந்து வருகிறது. எலி சாப்பிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டால் வாந்தி முதல் எலி காய்ச்சல் வரை பல பிரச்சனைகள் ஏற்படும்.

சாலையோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி உணவகங்களில் இருந்து பளபளக்கும் சுவர்கள், பல வண்ணங்கள் இருக்கும் பெரிய உணவு விடுதி வரை இவ்வாறு தான் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி சில உணவகங்களின் உணவுக் கூடத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணியாமல் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றி வருகின்றனர். முடிந்தவரை அனைத்து உணவகங்களையும் பரிசோதனை மேற்கொண்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் முறையாக இறைச்சியை பதப்படுத்தவில்லை என்றால் அந்த இறைச்சி நஞ்சாக மாறும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கால்நடை மருத்துவர் மோகனவாசன் கூறியதாவது: பொதுவாக இறைச்சியை குறைந்த நேரத்தில் பயன்படுத்த நான்கு டிகிரி செல்சியஸ் நிலையிலும் நீண்ட நேரத்துக்கு பிறகு பயன்படுத்தும் இறைச்சியை 18 டிகிரி செல்சியஸ் நிலையிலும் வைக்க வேண்டும் அவ்வாறு வைத்தால் மட்டுமே அது நன்றாக இருக்கும். அதுவும் சுத்தமாக பதப்படுத்த வேண்டும், இல்லை என்றால் அந்த இறைச்சியில் நுண்ணுயிர்கள், பூஞ்சைகள் உருவாகும். அதுமட்டுமின்றி அமிலத்தன்மையாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் அதிக அளவில் அதிக காலத்திற்கு பதப்படுத்தி வைத்திருந்தால் இறைச்சியில் இருக்கும் தண்ணீர் சத்து முற்றிலும் அழிந்து விடும். நீண்ட நாட்கள் பதப்படுத்தும் உணவு நஞ்சாக மாறுகிறது. அது உடலுக்கு பெரிதும் கேடு. எனவே வீட்டில் தயாரிக்கப்படும் உணவை உண்பதே உடலுக்கு நல்லது என்றார்.

புகழ்பெற்ற உணவகங்களில் தரமற்ற உணவை மக்களுக்கு வழங்கி வருவது கவலையளிக்கிறது என அசைவ பிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அசைவ பிரியர் ஒருவர் கூறியதாவது: தற்போதைய காலகட்டத்தில் புகழ்பெற்ற உணவகங்களில் தரமற்ற உணவை மக்களுக்கு அளிக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சமீபத்தில் எஸ்.எஸ்.ஐதராபாத் பிரியாணி, அதற்கு முன்பு பிரியாணி பிரதர்ஸ் என தொடர்ந்து புகழ்பெற்ற உணவகங்களில் தரமற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த உணவகங்களின் உணவுக்கூடம் மோசமாக இருப்பது தான்.

இதனை ஒப்பிடுகையில் சாலையோரத்தில் இருக்கும் உணவு மிகவும் பாதுகாப்பானது என்று கூறலாம் அந்த அளவிற்கு மோசமாக உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்யும்போது தான் பெரிய உணவகங்களில் சமையலறை எவ்வாறு உள்ளது என்பது தெரிய வருகிறது. மிகவும் மோசமான நிலைமையில் அந்த உணவகங்களில் சமையலறை உள்ளது. இது மிகவும் வேதனைக்குரியதாகும். எனவே உணவகங்கள் உணவு பாதுகாப்பு துறை வழங்கிய அறிவுரையை மட்டுமே பின்பற்றி செயல்பட வேண்டும். மேலும் சுத்தமான சுகாதாரமான உணவு மட்டுமே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

* உணவு கெட்டுப் போனால் எப்படி கண்டுபிடிப்பது?
இறைச்சியை சுத்தமான குளிர்சாதன பெட்டியில் சரியான முறையில் பதப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அது நீண்ட நேரத்திற்கு சாப்பிட தகுதியாக இருக்காது. கெட்டுப்போன இறைச்சி முதலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு நிறம் மாறும், பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால் அது சாப்பிட தகுதி இல்லாதது. மேலும் இறைச்சியில் அதிக வழுவழுப்புத் தன்மை இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல.

* யூடியூப் ரிவியூ மூலம் ஆபத்தை சந்திக்கும் உணவுப் பிரியர்கள்
கடந்த 2020ம் ஆண்டு முதல் ஆன்லைன் வளர்ச்சி என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போடக்கூடிய உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து அந்த இடங்களில் சென்று சாப்பிட அனைவரும் விரும்புகின்றனர். இதில் போலி யூடியூபர்கள் மூலமாக கடையை விளம்பரம் செய்வதற்காக நல்ல முறையில் ரிவியூ அளித்து வீடியோக்களை பதிவிடுகின்றனர். இதனை பார்த்து அங்கு சென்று சாப்பிடக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை சுகாதாரத்துறை முறைப்படுத்த வேண்டும்.

* உணவு தொடர்பான புகார்கள் அளிக்கும் எண்
கெட்டுப்போன இறைச்சி இருந்தால் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கலாம். குறிப்பாக தமிழ்நாடு அளவில் உணவு தொடர்பான புகார்கள் எதுவானாலும், 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

* கெட்டுப்போன உணவுகளால் ஏற்படும் பாதிப்பு
கெட்டுப்போன உணவில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இவற்றை சாப்பிடுவது விஷத்திற்கு சமம். இவற்றை தவறுதலாக உண்ணும்போது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு போன்றவை ஏற்படும். கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தும். சுவாசப் பிரச்னைகள், தலைவலி போன்றவற்றையும் உண்டாக்கும்‌. கெட்டுப்போன அசைவு உணவு சாப்பிட்டுவிட்டால் முதலில் வாந்தி எடுத்துவிட வேண்டும். உடனே போய் படுத்து தூங்க கூடாது. எனிமா கொடுத்து வயிற்றை கிளீன் செய்ய வேண்டும். நீர் சத்து குறைய விடாமல் தடுக்க எலக்ட்ரோலைட் குடிக்க வேண்டும். ஆனால் இதை மருத்துவரின் பரிந்துரையில்தான் செய்ய வேண்டும்.

The post சென்னையில் உள்ள உணவகங்களின் சுகாதாரமற்ற உணவுக்கூடம் மூலம் நோய் விநியோகம்: எலி, கரப்பான் பூச்சியால் நோய் பரவும் ஆபத்து; முறையாக பதப்படுத்தப்படாமல் விற்கப்படும் இறைச்சி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!