×

புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை,அக்.2: புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாகச சீரிளமைத்திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500ம், மருத்துவப்படி ரூ.500ம் என 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என அத்திருத்தொண்டு தொடர்கிறது.

தமிழாய்ந்த தமிழ்மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1334 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2024-2025ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்புஉதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறுதிட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம்பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

1.1.2024ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். (தாலுகா அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு. தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட்கார்டு), மரபுரிமையர் (கணவன், மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.in கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர்க் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500ம் மருத்துவப்படி ரூ.500ம் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, புதுக்கோட்டை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024க்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.இந்த தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai District ,Pudukottai ,Collector ,Aruna ,Tamil Nadu Government ,Tamil Development Department ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு...