×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர்.

நிறைமாதக் கர்ப்பிணியான எனக்கு இது முதல் பிரசவம். பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்… அவற்றை இப்போதே சாப்பிடத் தொடங்க வேண்டுமா… குழந்தை பிறந்த பிறகு சாப்பிட்டால் போதுமா?
– வேலுப்ரியா, நாமக்கல்.

கர்ப்பகாலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெறமுடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், உணவில் அதிக அளவு இஞ்சி சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். ஓட்ஸ் கஞ்சி, காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிடவேண்டியது அவசியம்.

ஒவ்வோர் இரண்டு, மூன்று மணிநேர இடைவெளிக்கும் நடுவே உணவு உட்கொள்ளலாம். இனிப்பு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது, பால் அருந்துவது நல்லது. சுறா வகை மீன்களைச் சாப்பிடுவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவும். தண்ணீர் தினசரி நான்கு லிட்டர் பருகலாம். புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் நிறைந்த உணவுகள் தாய்ப்பால் சுரப்புக்கு மிகவும் நல்லது. முட்டை, பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

`வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் வாய்வுத் தொந்தரவு ஏற்படும்’ என்கிறார்களே… அது உண்மையா?
– கு.வை.பழனிச்சாமி, திண்டுக்கல்.

இவை இரண்டும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் முக்கியமான உணவுகள். அதற்காக இதை ஒரு காரணமாகச் சொல்லி இவற்றைத் தவிர்க்கவேண்டியதில்லை. கீழ்க்காணும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது. வாய்வுத் தொல்லை இருப்பவர்கள், வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் இவற்றைச் சாப்பிடலாம். பெரும்பாலும், வறுத்த கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

சமைக்கும்போதே பூண்டு, பெருங்காயம் சேர்த்துக்கொண்டால், இந்தப் பிரச்னையை 80 சதவிகிதம் தடுத்துவிடலாம். சாப்பிட்டதும் சுடுநீரில் சீரகம் அல்லது சோம்பு சேர்த்துக் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது. இரவு நேரத்தில் செரிமானக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் வாழைக்காய், உருளைக்கிழங்கைச் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

`மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனையின்போதும், பற்களுக்கான எக்ஸ்-ரே பரிசோதனையின்போதும் ‘தைராய்டு கார்டை’ (Thyroid Guard) கேட்டுப் பெற்று அணிய வேண்டும்’ என்கிறாள் வெளிநாட்டில் வசிக்கிற என் தோழி. `தைராய்டு கார்டு அணிந்தால், கதிர்வீச்சு அபாயத்திலிருந்து காத்துக்கொள்ளலாம்’ என்கிறாள். `தைராய்டு கார்டு’ என்றால் என்ன, அதன் அவசியம் என்ன?
– சுகச்செல்வி, அரும்பாக்கம்

`தைராய்டு கார்டு’ (Thyroid Guard) என்பது, கழுத்தில் அணியப்படும் ஒருவகைக் கவசம். ஈயம் மூலம் உருவாக்கப்படும் இதை `லெட் காலர் புரொடெக்ஷன்’ (Lead Collar Protection), `தைராய்டு ஷீல்டு’ (Thyroid Shield) என்றும் குறிப்பிடலாம். கதிர்வீச்சுப் பரிசோதனைகளின்போது உடலுக்குள் ஊடுருவும் கதிர்வீச்சுகள், உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இதை அணிந்துகொள்ளப் பரிந்துரைக்கப்படும். ஆனால், இதை அணிவதால் ஏற்படும் நன்மைகள் மிகக் குறைவே. இன்றைய சூழலில் தேவையில்லாத பயம் காரணமாக மட்டுமே இதை அணிந்துகொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

மேமோகிராம் மற்றும் பற்களுக்கான எக்ஸ்-ரே எடுக்கும்போது வெளிப்படும் கதிர்வீச்சுகளுக்கும், புற்றுநோய் பாதிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொண்டால் ஹார்மோன் குறைபாடுகள், ஹார்மோன் மாற்றங்கள், புற்றுநோய் பாதிப்பு என எதுவும் ஏற்படாது. தைராய்டு கார்டை அணியும்போது, உடலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பகுதிக்கு, போதிய அளவு கதிர்வீச்சு கிடைக்காமல் போகும். இதனால் பரிசோதனையின் முடிவில், அதன் துல்லியத் தன்மையில் சிக்கல் உண்டாகலாம். எனவே, மீண்டுமொருமுறை பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும். ஆக, தைராய்டு கார்டு அணியாதவர்களைவிட, கார்டு அணிந்தவர்களுக்குக் கூடுதலாக இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகலாம். இதுபோன்ற சூழல் ஏற்படாமலிருக்க, `தைராய்டு கார்டு’ அணிவதைத் தவிர்ப்பதே நல்லது.

மதக் காரணங்களைக் கடந்து, ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்வது பரவலாகிவிட்டது. `அப்படிச் செய்வது நல்லது’ எனத் தோழிகள் கூறுகிறார்கள். குழந்தைக்கு எந்த வயதில் சுன்னத் செய்யலாம்? இது தொடர்பான மருத்துவ விளக்கங்கள் தேவை.
– சாரதா நிர்மல், கோவை.

ஆணுறுப்பில் `ஸ்மெக்மா’ (Smegma) என்ற வெள்ளை நிறத் திரவம் இயல்பாகவே சுரக்கும். தினமும் குளிக்கும்போது ஆணுறுப்பைச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், `ஸ்மெக்மா’ திரவம் ஆணுறுப்பில் படிந்து, தொற்று உருவாக வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்னை நீடித்தால், பிற்காலத்தில் ஆணுறுப்பு விறைக்கும்போது வலி உண்டாகலாம். விறைப்புத் தன்மை உண்டாவதிலும் சிக்கல் ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு ஆணுறுப்பின் முன்தோல் பகுதி இறுக்கமாக இருக்கும்.

இதனால், அந்தத் தோல் பகுதியைப் பின்புறம் நகர்த்துவதும் (Phimosis), ஆணுறுப்பைச் சுத்தம் செய்வதும் கடினமாக இருக்கும். சிலருக்கு ஆணுறுப்பில் பின்னோக்கி நகர்த்திய தோல்பகுதியை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவருவதும் சிக்கலாக இருக்கும் (Paraphimosis). சிலருக்கு சிறுநீர்க்குழாயின் துளை இயல்புக்கு மாறாகக் குறுகியிருக்கும். இதனால் அந்தக் குழாயில் அடைப்பு, வலி, எரிச்சல், வீக்கம், தொற்று ஏற்படலாம்.

மேற்கண்ட உடல்நலக் காரணங்களுக்காக, குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு `முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை’ செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதன்படி 2 – 5 வயதுக்குள், அதாவது ஆண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் காலத்துக்குள் இதைச் செய்யலாம். வளரிளம் பருவத்தில் அல்லது அதற்குப் பிந்தைய பருவத்தில் செய்யும்போது அவர்களுக்குக் கூச்சமும் வலியும் அதிகமாக இருக்கும்.

அறுவை சிகிச்சை செய்த பிறகு, ஆணுறுப்பைச் சுத்தப்படுத்துவது எளிதாக இருக்கும்; நோய்த் தொற்றுகள் ஏற்படுவதும் குறையும். `அறுவைசிகிச்சை செய்வதால், பிற்காலத்தில் ஆணுறுப்பில் ஏற்படும் சருமப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையலாம்; தாம்பத்ய உறவின்போது விறைப்புத் தன்மை ஏற்படுவதிலும், விந்து வெளியேறுவதிலும் சிக்கல் உருவாகலாம்’ என மருத்துவரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படாத மாறுபட்ட கூற்றுகளும் சொல்லப்படுகின்றன. எனவே, மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய முடிவெடுக்கக் கூடாது. அத்தியாவசிய மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் செய்யலாம்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr ,Muthaiah ,Dinakaran ,
× RELATED முழங்கை வலி காரணமும் – தீர்வும்!