×

புதுக்கோட்டை-தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை,செப்.30: புதுக்கோட்டை-தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று வர்த்தக கழகத்தினர் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். புதுக்கோட்டையில் நடைபெற்ற வர்த்தகக் கழகத்தின் 50ம் ஆண்டு பொன் விழா மற்றும் 2024ம் ஆண்டுக்கான பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. விழாவுக்கு, கழக தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர். விக்கிரமராஜா, பொதுச்செயலர். கோவிந்தராஜுலு, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர். திலகவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட கூடுதல் செயலர். சம்பத்குமார் தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில், புதுக்கோட்டை, தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும். கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். திருவப்பூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆலங்குடி பகுதிகளில் விளையும் விவசாய விளை பொருட்களைப் பாதுகாப்பதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய கிட்டங்கி அமைக்க வேண்டும். கீரனூர் பகுதியில் மகிமை வசூல் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை- அன்னவாசல் வழித்தடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் வழிப்பறி செய்வதை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். புதுக்கோட்டை நகரிலுள்ள சமத்துவபுரம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் செல்வதற்கு போதுமான பேருந்து வசதி செய்ய வேண்டும். புதுக்கோட்டை நகரில் மச்சுவாடி, சீனிவாசா நகர், இந்திரா நகர், தைலாநகர், தஞ்சை சாலை பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையை மாற்றி, குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்குடி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருமயம் நகருக்குள் சென்று திரும்ப வேண்டும். இரவு நேரங்களில் புறவழிச்சாலையிலேயே பயணிகளை இறக்கிச் செல்லும் நடவடிக்கையை போக்குவரத்துத் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும். நகருக்குள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் செல்லும் இரு சக்கர வாகனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், நகருக்குள் வாகனங்களின் வேகக் குறைப்பை அமல்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளிலுள்ள வேகத்தடைகளில் வெள்ளை அடித்தும், இரவு நேரங்களில் தெரியும் வகையில் ரேடியம் ஒட்டிகளை ஒட்டியும் விபத்துகளைத் தடுக்க வேண்டும். புதுகை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், நாய்களைக் கட்டுப்படுத்திட மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் ஷேர் ஆட்டோ விடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மாவட்ட வர்த்தகக் கழகத்தின் தலைவராக சாகுல்ஹமீது, செயலராக கதிரேசன், பொருளாளராக ராஜா முகமது ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

The post புதுக்கோட்டை-தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Tanja ,Trade Association ,Tanj ,50th Gold Festival of the Chamber of Commerce ,General Committee Meeting ,2024 ,Pudukkota ,Tanjai ,
× RELATED புதுக்கோட்டையில் ஆணழகன் போட்டி