×

மும்பை, பெங்களூருவை விட சென்னையில் குறைவு; ஒன்றிய அரசின் நிபந்தனைகளால் சொத்து வரி உயர்வு: பரபரப்பு தகவல்கள்

சிறப்பு செய்தி
சென்னை, செப்.30: ஒன்றிய அரசின் நிபந்தனைகளால்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சொத்துவரி உயர்வு குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
ஒன்றிய அரசின் 15வது நிதிக் குழு ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, ஆண்டுதோறும் சொத்துவரி உயர்வு மேற்கொள்ளப்படாமல் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிய அரசின் மானியங்களைப் பெற முடியாது. சென்னை மாநகராட்சியில் 2022-23ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சொத்துவரி உயர்வானது சென்னை மாநகராட்சியின் முந்தைய மாநகராட்சிப் பகுதிகளில் 22 ஆண்டுகளுக்குப் பின்னரும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 14 ஆண்டுகளுக்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்டதாகும்.

சொத்துவரி சீராய்வு மேற்கொண்ட போதும், ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்காத வகையில், குடியிருப்புப் பகுதிகளுக்கான வரிவிதிப்பினை சதுர அடி பரப்பளவிற்கேற்ப 4 வகைகளாகப் பிரித்து, பெரும்பான்மை குடியிருப்புகளுக்கு அதாவது குறைந்த பரப்பளவு கொண்ட கட்டடங்களுக்கு 25% மட்டுமே சொத்துவரி உயர்வு அளிக்கப்பட்டது.

மேலும், சென்னை மாநகராட்சியினைப் பொருத்தவரை பொது மக்களின் சிரமத்தினைக் கருத்தில் கொண்டு திடக்கழிவு மேலாண்மைக்காக விதிக்கப்படும் உபயோகிப்பாளர் கட்டணம் ஏதும் இதுவரை விதிக்கப்படாத நிலையில் சொத்துவரி உயர்வின் போது உபயோகிப்பாளர் கட்டணம் உயரும் என்பதற்கு வாய்ப்பில்லை. ஒன்றிய அரசின் நிதிக் குழு ஆணையத்தின் ஆணையின்படி, ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தப்பட வேண்டும் என்றிருந்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சி சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை உரிய காலத்தில் அதாவது ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் மாதத்திற்குள் செலுத்துவோருக்கு, 5% ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், விதிகள் 2023ன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் கடந்த 5 ஆண்டுகளின் சராசரி என்பதை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய திருத்தத்தில் நீக்கப்பட்டு, மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 6 சதவீதம் மட்டுமே சொத்துவரி உயர்வு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களின் பெரு மாநகராட்சிகளுடன் அதாவது மும்பை, புனே, பெங்களுரூ, டெல்லி உள்ளிட்ட மாநகராட்சிகள் விதிக்கும் சொத்துவரியை ஒப்பிடுகையில், சென்னை மாநகராட்சியால் விதிக்கப்பட்டுவரும் சொத்துவரியானது குறைந்த அளவிலேயே உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மும்பை, பெங்களூருவை விட சென்னையில் குறைவு; ஒன்றிய அரசின் நிபந்தனைகளால் சொத்து வரி உயர்வு: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,Bengaluru ,Union ,Chennai, ,Union government ,Chennai Corporation Council ,Mumbai, Bengaluru ,
× RELATED அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை;...