256 அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

 

புதுச்சேரி, செப். 30: புதுச்சேரியில் 256 அசிஸ்டெண்ட் பதவிக்கு கடந்த ஆக.23ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதுவரை விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இப்பதவிக்கு விண்ணப்பிக்க இன்று (30ம் தேதி) கடைசி நாளாகும். புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் 256 அசிஸ்டெண்ட் (குரூப்-பி) பதவிக்கான நேரடி ஆள்சேர்ப்புக்கான போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது.

இதில் பொது பிரிவு-104, எம்பிசி-46, எஸ்சி-41, ஓபிசி-28, டபிள்யூஎஸ்-25, இபிசி-5, பிசிஎம்-5, பிடி-1, எஸ்டி-1 என 256 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு கடந்த ஆக.23ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 24.4.2024 அன்று 30 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரிகள் https://recruitment.py.gov.in என்ற ஆள்சேர்ப்பு இணையதளத்தில் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க மூன்று ஆண்டுகள் தளர்வு அளிக்க வேண்டும், ஆங்கிலம் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கிலும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பிராந்திய மொழியில் தேர்வு எழுவதற்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு வழங்கப்படவில்லை. அதே சமயம், அரசு பணியில் உள்ள ஓபிசி, எம்பிசி, ஈபிசி, பிசிஎம், பிடிஎம் பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் அரசு பணியில் உள்ளவர்களுக்கும் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை பட்டதாரிகள், அரசு பணியில் உள்ளவர்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கும், ஏற்கனவே விண்ணப்பித்தோர் பிராந்திய மொழியில் தேர்வு எழுவதற்கு தங்களது விருப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலஅவகாசம் இன்று (30ம் தேதி) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள் என்றும், இதனால் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் ஆன்லைன் பயிற்சி மையங்களில் சேர்ந்து தீவிரமாக படித்து வருகின்றனர். இதனால் தனியார் பயிற்சி மையங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும், வசதியில்லாத விண்ணப்பதாரர்கள் தனியாக நூல்கள் வாங்கியும், நூலகத்திற்கு சென்றும் தேர்வுக்கு ஆர்வமுடன் படித்து வருகின்றனர். விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 0413-2233338 என்ற தொலைபேசி தொடர்பு கொள்ளலாம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தெரிவித்துள்ளது.

The post 256 அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: