30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படுகிறது நடராஜர் கோயில் தேர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய வடம்

 

சிதம்பரம், டிச. 16: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சன விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த தரிசன விழாக்களின் போது, நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி வீதியுலா வருவர். இந்த தேரோட்டத்தில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சாமிகளும் தனித்தனி தேரில் எழுந்தருள்வர்.

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் சிதம்பரத்தை சேர்ந்த பக்தர் மோகன் என்பவர் 40 டன் தேங்காய் நாரில் தயாரான 19 இன்ச் சுற்றளவுள்ள வடத்தை நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர் ஆகிய 3 தேர்களுக்கு தலா 460 அடி, விநாயகர், சண்டிகேஸ்வரர் தேருக்கு தலா 180 அடி என மொத்தம் 1740 அடி வடத்தை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த தேர் இழுக்கும் வடத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக மேள வாத்தியங்கள் முழங்க நான்கு வீதியிலும் புதிய தேர் இழக்கும் வடக்கயிறு வண்டியில் வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கீழ சன்னதி வழியாக கோயிலுக்குள் சென்று நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தேர்களுக்கு புதிய வடக்கயிறு அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்படுகிறது நடராஜர் கோயில் தேர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய வடம் appeared first on Dinakaran.

Related Stories: