இன்று உலக சுற்றுலா தினம்

 

உலகின் மிக முக்கியமான பொருளாதார துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறை. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், பொருளாதாரத்திற்காக சுற்றுலாவை முழுவதுமாக நம்பியுள்ளன. பொருளாதாரம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களை இணைப்பதன் மூலம் கலாசார பரிமாற்றத்தை வளர்ப்பதில் சுற்றுலா முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நமது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு இயற்கை காட்சிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தாஜ்மஹாலின் பிரமாண்டம் முதல் வாரணாசியின் ஆன்மீகம் வரை, சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு ஏராளமான அனுபவங்களை வழங்குகிறது. வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் கலாசார விழாக்கள் இந்தியாவின் சுற்றுலாத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மற்றும் கட்டிடக்கலையின் சான்றாக பல இந்தியாவில் உள்ளது. ஜெய்ப்பூரின் அமர் கோட்டை மற்றும் டெல்லியின் குதுப்மினார் போன்ற வரலாற்றுப் பொக்கிஷங்களுடன் இந்த அதிசயத்தைக் காண உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தேர்வில் எப்போதும் தமிழ்நாடு இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் சிறந்து விளங்குவது ஆகும். இங்கு பழங்கால இதிகாசங்கள் முதல் நவீன கால சிறப்புகள் மற்றும் உணவு வரை சுற்றுலா பயணிகளை கவர்கிறது. தமிழ்நாட்டில் 43,635க்கும் மேற்பட்ட கோயில்களில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றவையாக உள்ளது.

மாநிலத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான மயிலாட்டம், கரகம், காவடி, தெருக்கூத்து, தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை பாரம்பரிய பரத நாட்டியம் போன்ற நடனங்களுடன் துடிப்பான கலையின் வெளிப்பாடாக உள்ளது. 17 வனவிலங்குகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 3 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் 5 புலிகள் காப்பங்கள் உள்ளன. இவை அனைத்தும் வெளிநாடு, வெளிமாநில மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கிறது. தமிழ்நாட்டில் 6 யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் இருக்கிறது. அதன்படி, மாமல்லபுர நினைவு சின்னங்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் ஜராவதீஸ்வரர் கோயில், நீலகிரி மலை ரயில், மேற்கு தொடர்ச்சி மலை தொடர் (இயற்கை பிரிவு) ஆகியவை உள்ளன.

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பயணிகள் செல்ல வலுவான போக்குவரத்து வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சாலைகள், ரயில், விமான வழித்தடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சுற்றுலாத்துறை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக கடந்த ஆண்டு ‘‘தமிழ்நாடு சுற்றுலா கொள்கை-2023’’ வெளியிட்டார். இது பயணிகள் வருகை தர ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்தவும், சுற்றுலா பயணிகள் தங்கும் காலத்தை அதிகரிக்கவும், அன்னிய செலவாணியை ஈர்க்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளையும், கட்டமைப்புகளையும் அதிகப்படுத்தும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.

கடந்த 2022-ல் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 21.85 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 28.60 கோடியாக உயர்ந்தது. 2022-ல் 4.07 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் 11.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் கோடை விழாவும், கோயில்களில் தேர் திருவிழாவும், நாட்டிய விழா போன்றவையும் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆன்மீக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா போன்றவைக்கு பலர் வருகின்றனர். ஆன்மீக சுற்றுலாவிற்கு வருபவர்கள் மாசாணியம்மன் கோயில், மருதமலை கோயில், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில், காரமடை அரங்கநாதர் கோயில், ஈச்சனாரி விநாயகர் கோயில், ஈஷா யோகா மையம், ஆழியார் அறிவுத்திருக்கோயில் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.

பொள்ளாச்சி பகுதியை மையமாக வைத்து கோவைக்கு பல சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், ஆனைமலை, ஆழியார் அணை, குரங்கு அருவி, கோவை குற்றாலம், ஜி.டி. கார் மியூசியம், பிளாக் தண்டர், கோவை கொண்டாட்டம், போத்தனூரில் உள்ள காந்தி நினைவிடம், வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இது தவிர, கோவைக்கு சமீபகாலமாக இயற்கையான சூழல் மற்றும் அமைதியை தேடி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இவர்கள், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பண்ணை வீடுகள், தோப்பு வீடுகளில் தங்கி தங்களது நேரத்தை அதிகளவில் செலவிடுகின்றனர். அந்த தோப்புகளை விட்டு வெளியேகூட வராமல் நீண்ட நாட்கள் அங்கேயே இருந்து, அங்கு கிடைக்கும் இளநீர், இயற்கை உணவுகளை சாப்பிடுவதில் மிகவும் ஆர்வம்காட்டி வருகின்றனர். இது போன்ற சுற்றுலா பயணிகள் அமைதியை மட்டும் விரும்பி இது போன்ற வீடுகளில் தங்கி வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். சமீப காலமாக கோவைக்கு இயற்கை சார் ஓய்வு சுற்றுலாவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவர்கள் இயற்கை, அமைதி வேண்டி மட்டுமே வந்து செல்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். தமிழக அளவில் இயற்கை சார் ஓய்வு சுற்றுலாவில் பொள்ளாச்சி முன்னிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post இன்று உலக சுற்றுலா தினம் appeared first on Dinakaran.

Related Stories: