நன்றி குங்குமம் டாக்டர்
குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் அல்லது தற்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, வைட்டமின் B9 என்று அழைக்கப்படும் ஃபோலிக் அமிலம், மிகவும் அவசியமானதாகும். கருவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தேவையான ஒரு முக்கிய வைட்டமின் ஆகும் இது. போதுமான அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வது பிறப்பு குறைபாடுகளுக்கான நிகழ்வுகளைக் குறைப்பதற்கும் ஒட்டுமொத்த கர்ப்பகாலத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.
ஒரு பொதுவான கொள்கையாக, ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடுகளுக்கும் பிற நோய்களுக்கும் இடையேயான தொடர்பை மதிப்பிடுவது முக்கியமானதாகும். உணவில் ஃபோலிக் அமிலம் இல்லாததால், நரம்புக்குழாய் குறைபாடுகள் (Neural Tube Defects (NTDs) என குறிப்பிடப்படும் நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவை நரம்புக் குழாயில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் ஆகும். (இந்த நரம்புக்குழாய்தான் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டாக வளர்ச்சி பெறுகிறது). இந்த நரம்புக் குழாய் சரியாக மூடப்படாவிட்டால், அது மிகவும் கடுமையான பிறப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது.
கர்ப்பத்துக்கு முன்னரும் மற்றும் கர்ப்ப காலத்திலும் ஃபோலிக் அமிலத்தின் பங்கு
NTD களின் நிகழ்வைக் குறைக்க, குறிப்பாக கருத்தரிக்கும் நேரத்திலும் மற்றும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலும் உடலில் ஃபோலிக் அமிலம் போதுமான அளவு இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. கருவுற்ற முதல் 28 நாட்களில் நரம்புக் குழாய் உருவாகி மூடப்படுகிறது. எனவே, குழந்தை பிறக்கும் பருவத்தில் உள்ள பெண்கள் அவர்களுடைய தினசரி உணவில் போதுமான ஃபோலிக் அமிலத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
கர்ப்பமாக இல்லாத அல்லது குழந்தை பெறுவதற்கு திட்டமிடும் பெண்கள் தினமும் குறைந்தது 400 mcg ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நரம்புக் குழாய் குறைபாட்டுடன் கர்ப்பம் தரித்த வரலாறு இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுக வேண்டும், அது மீண்டும் வருவதைத் தடுக்க அதிக அளவு ஃபோலிக் அமிலம் தேவைப்படலாம்.
போதுமான ஃபோலிக் அமிலம் உட்கொள்வதை உறுதி செய்வது எப்படி
* உணவு ஆதாரங்கள்: ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளத் தொடங்குங்கள். பச்சை இலைக் காய்கறிகளான கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ஆரஞ்சு, திராட்சைப்பழங்கள் போன்ற பழவகைகள் இந்தப் பிரிவில் அடங்கும். ஃபோலேட் அடங்கிய பிற உணவு ஆதாரங்களில் பீன்ஸ், பட்டாணி மற்றும் செறிவூட்டப்பட்ட தானிய வகைகள் ஆகியவை அடங்கும். இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், உங்கள் உணவில் போதுமான ஃபோலிக் அமிலத்தைப் பெறுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம்.
* ஊட்டச்சத்துக்கள்: உங்கள் ஃபோலிக் அமிலத்தை உட்கொள்வதற்கான மற்றொரு வழி, மகப்பேறுக்கு முந்தைய காலத்தில் வைட்டமின்கள் மூலம் பெறலாம், இதன் மூலம் நீங்கள் சரியான அளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருத்தரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பும், கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கும் இந்த வைட்டமின்களை எடுத்துக்கொண்டால் அதன் மூலம் அதிக பலன்களைப் பெறலாம். மகப்பேறுக்கு முந்தைய காலத்தில் இந்த வைட்டமின்கள் வழக்கமாக தினமும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, மேலும் சாதாரண மல்டிவைட்டமின்களை விட அதிக செறிவுள்ள ஃபோலிக் அமிலத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படும் இந்த வைட்டமின்கள் கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் அதன் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
ஃபோலிக் அமிலத்தின் மற்ற நன்மைகள் பின்வருமாறு: நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுப்பதில் அதன் முக்கிய பங்கு மட்டுமன்றி, ஃபோலிக் அமிலம் மேலும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது:
* டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உற்பத்தி: செல் பிரிவு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ ஆகியவற்றின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் தேவைப்படுகிறது. கருவின் வளர்ச்சியின்போது நடைபெறும் உயிரணுப் பிரிவின் காலங்களில் இந்த செயல்பாடு குறிப்பாக முக்கியமானதாகும்.
* இரத்த சிவப்பணு உருவாக்கம்: ஃபோலிக் அமிலம் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதன் மூலம் தாயின் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களின் சரியான உற்பத்தி தாய் மற்றும் கருவிற்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது, இது அவர்களின் நல்வாழ்வுக்கு மிகவும் அவசியமாகும். ஃபோலிக் அமிலம் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கவும், கருவின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்.
எனவே, குழந்தை பெற்றுக்கொள்ள விழையும் பெற்றோர்கள் தங்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து இரண்டிலும் ஃபோலிக் அமிலத்தை உட்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இது பெற்றோர் ரீதியான நிலையிலிருந்து தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு நேர்மறையான நடவடிக்கை எடுக்க உதவும். ஃபோலிக் அமிலத்தை அதிகரிப்பது என்பது, பெண்ணின் ஆரோக்கியத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் கவனித்துக்கொள்வதற்கான எளிய மற்றும் மிகவும் திறமையான உத்திகளில் ஒன்றாகும்.
தொகுப்பு: ஜாய் சங்கீதா
The post கருவைக் காக்கும் ஃபோலிக் அமிலம்! appeared first on Dinakaran.