காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் தண்ணீர் இன்றி காய்ந்து வரும் வேர்க்கடலை செடிகள்

*திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் தண்ணீர் இன்றி வேர்க்கடலை செடிகள் காய்ந்து வந்த நிலையில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை அறுவடை செய்யும் தருவாயில், மழையின்றி பல்வேறு பகுதிகளில் காய்ந்து போனது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் லாரி, டிராக்டர் உட்பட டேங்கரில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி வேர்க்கடலை அறுவடை செய்து வந்தனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் கடந்த கோடை பட்டத்தில் திண்டிவனம் 14, கதிரி 18, 12, தரணி விஆர்- 10, நாட்டு ரகம் என்று கூறப்படும் திண்டிவனம் (பிஎம்ஐ)- 2 உள்ளிட்ட ரகங்களை பயிரிட்டுள்ளனர். தற்போது இந்த ரகங்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகிறது.

மேலும், மானாவாரி பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள இந்த ரகங்கள் முழு முழுக்க வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த பயிருக்கு போதிய மழையில்லாத காரணத்தால் பயிர்கள் சுருண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக மானாவாரி பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் மழை பொழியுமா? பொய்யாதா? என்ற ஏக்கத்துடன் இருந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மானாவாரி பயிருக்கு உயிரூட்டப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பெய்த மழையால் விவசாயிகள் இன்று வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் இறங்கி விடுவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் தண்ணீர் இன்றி காய்ந்து வரும் வேர்க்கடலை செடிகள் appeared first on Dinakaran.

Related Stories: