வாகன விபத்தில் உயிர்பலி ஏற்பட்டு இறந்தால் தவிப்பது மனைவி, குழந்தைகள் தான்

*போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்தில் உயிர்பலி ஏற்பட்டு இறந்தால் தவிப்பது தங்களின் மனைவி மற்றும் குழந்தைகள் தான் என விபத்தை தடுக்க வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அரியலூர் எஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி சீராளன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி, குமார் உள்ளிட்ட போலீசார் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பள்ளி வளாகம் முன்பு சாலையில் அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் குடித்துவிட்டு குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

இதுவரை ஜெயங்கொண்டத்தில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 150 -க்கும் மேற்பட்டோருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இதுவரை ரூ.15 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்துள்ளோம். ஒரு வாகனத்தை பிடித்தால் அதற்கு 10 முதல் 15 பேர் சிபாரிசுக்காக தான் போன் செய்து தொந்தரவு செய்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் இனி வழக்கு பதிந்து அபராதம் விதித்து அபராத தொகை வசூலிக்கப்படும், எந்த சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

குடிபோதையில் நீங்கள் வாகனம் ஓட்டி சாலை விபத்தில் உயிர்பலி ஏற்பட்டு இறந்தால் தவிப்பது தங்களின் மனைவி மற்றும் குழந்தைகள் தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்ட வேண்டும், இதில் பெரும்பாலானவர்கள் வெறுமனே ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள், ஹெல்மெட் போட்டவுடன் கொக்கியை மாட்ட வேண்டும்.

மேலும் காரில் பயணம் செய்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடாது, சரக்கு வாகனங்களில் பயணிகள் பயணிக்கக் கூடாது, படிக்கட்டுகளில் மாணவர்கள் குழந்தைகள் பயணம் செய்யக்கூடாது, இரண்டு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க கூடாது, சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தார்.

மேலும் மாவட்டம் முழுவதும் ஒரு மாதத்தில் 10 முதல் 15 நபர்கள் உயிரிழப்பு நடந்ததை தற்போது ஐந்தாக குறைத்துள்ளோம் விபத்து நடைபெறாமல் தவிர்க்க இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்,மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்தார்.

எனவே அனைவரும் அனைத்து சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் இதனை தாங்களுக்கு நான் தெரிவித்ததை ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த 50 நபர்களிடம் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை சுமார் 50க்கும் மேற்பட்டோரை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார்.

The post வாகன விபத்தில் உயிர்பலி ஏற்பட்டு இறந்தால் தவிப்பது மனைவி, குழந்தைகள் தான் appeared first on Dinakaran.

Related Stories: