முக்கிய வழித்தட ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகள் குறைப்பு: ஏசி பெட்டி பயண கட்டாயத்திற்கு நடுத்தர மக்களை தள்ளும் ரயில்வே

நாட்டின் முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து விளங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களையும் இணைக்கும் வகையில், பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஏழை, நடுத்தர மக்களுக்கான போக்குவரத்தாக விளங்கிய ரயில்வே, தற்போது வசதியானவர்களுக்கானதாக மாற்றம் பெற்று வருகிறது. அதிவேக பயணம் என்ற அடிப்படை நோக்கோடு அறிமுகப்படுத்தப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில், ஏழை, நடுத்தர மக்களால் பயணிக்க இயலாது. காரணம், அந்த ரயில்களின் கட்டணம் ரூ.500க்கு குறைவு கிடையாது. மிக அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரையில் கட்டணம் செலுத்தி பயணிக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் போக்குவரத்து விளங்குகிறது. ஆனால், இந்த வந்தே பாரத் ரயில் சேவையை ஒன்றிய பாஜ அரசு, தங்களது மிகப்பெரிய சாதனை திட்டமாக மக்களிடம் எடுத்துரைத்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்தராத போக்குவரத்தாக இருக்கிறது என பயணிகள் தெரிவித்தும், அதன் கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

மற்றொரு புறத்தில், நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், படிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுக்கு முன் பெரும்பாலான ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12 அல்லது 13 இருக்கும். ஆனால், தற்போது அத்தகைய பெட்டிகள் 8 முதல் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை குறைத்ததன் மூலம் நடுத்தர மக்களின் பயணத்திற்கு ரயில்வே நிர்வாகம் வேட்டு வைத்திருக்கிறது. அதாவது, எந்தெந்த ரயில்களில் எல்லாம் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதோ, அந்த ரயில்களில் இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒவ்வொரு ரயிலிலும் 3 அல்லது 4 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள்தான் இருக்கும்.

அதிகபட்சமாக 6 பெட்டிகள் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 8 முதல் 10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையும் 4 வரை அதிகரித்துள்ளனர். இப்படி ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ளும் போது, நடுத்தர மக்களை அதிக பணம் செலுத்தி அப்பெட்டிகளில் பயணிக்க கட்டாயப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் நிரம்பி அதிக காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுவிடுவதால், வேறு வழியே இல்லாமல் மூன்றடுக்கு ஏசி பெட்டியில் நடுத்தர மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதுபற்றி ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு, கேரளாவில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், ஜெய்ப்பூர், சட்டீஸ்கர், லக்னோ, மும்பை, புனே, டெல்லி, தன்பாத், ராய்பூர், சில்சார், ராஞ்சி, திப்ரூக்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை குறைத்துவிட்டு, ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்து விட்டது.

இதனால், அந்த ரயில்களில் சாதாரண நடுத்தர வர்க்க மக்களால் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் டிக்கெட் கட்டணம் கொடுத்து மூன்றடுக்கு ஏசி பெட்டியில் தான் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த அதிக கட்டண வசூலை சத்தமில்லாமல் ரயில்வே நிர்வாகம் நடத்தி வருகிறது. அதேபோல், முன்பதிவில்லா பெட்டிகளை 2, 3 என குறைத்து விட்டனர். அதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வேக்கு புகார்கள் தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுவும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி எண்ணிக்கையை குறைத்து, முன்பதிவில்லா பெட்டி எண்ணிக்கையை ஒன்று அதிகரிக்கின்றனர். அப்படி செய்யாமல் மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்றை குறைத்து, முன்பதிவில்லா பெட்டியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்,’’ என்றனர்.

The post முக்கிய வழித்தட ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகள் குறைப்பு: ஏசி பெட்டி பயண கட்டாயத்திற்கு நடுத்தர மக்களை தள்ளும் ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: