மாமல்லபுரம்: கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் மைய பகுதியில் உள்ள நீளமான பாறை மீது 135 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது, 84 அடி உயரத்தில் 93 படிக்கட்டுகளுடன் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில், 1887ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வங்கக்கடலில், பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் படகுகள் இந்த வெளிச்சத்தை அறிந்து விலகிச் செல்லவும், கப்பல் மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த, கலங்கரை விளக்கம் ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும், செப்டம்பர் 21ம் தேதி (இன்று) நாடு முழுவதும் கலங்கரை விளக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகத்தை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என ஒன்றி கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post இன்று கலங்கரை விளக்க தினம் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க இலவசம் appeared first on Dinakaran.