மாமல்லபுரம்: மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை சுமார் 2500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழிலே வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி மீனவர்கள் நாள்தோறும் கடலுக்குள் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்து வருவது வழக்கம். இவர்களுக்கு சில நேரங்களில் குறைந்தளவு மீன்களே கிடைப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாமல்லபுரம் கடல் பகுதியில் மீன்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள், தென்னை ஓலைகள் மற்றும் மூங்கில் குச்சிகளை வைத்து வீடு கட்டி, அவற்றை கடலுக்குள் குறிப்பிட்ட தூரத்துக்கு எடுத்து சென்று இறக்கி, அவற்றின் மூலம் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், மாமல்லபுரம் சுற்றுவட்டார கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கிறது. கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், கனமழை உள்பட பல்வேறு பேரிடர் காலங்களில் கடலுக்குள் செல்ல முடியாமல் முடங்கி கிடப்போம். தற்போது கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, தென்னை ஓலைகள் மற்றும் மூங்கில் குச்சுகளை வைத்து வீடு கட்டி, அவற்றை கடலில் இறக்கி செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி வருகிறோம். இதனால் கடலில் மிதக்கும் மூங்கில் வீடுகளில் மீன்கள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதன் மூலமாக மீன்களில் இனப்பெருக்கம் அதிகரிக்கும்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
The post மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மாமல்லபுரம் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறை: மீனவர்கள் தீவிரம் appeared first on Dinakaran.