×

தமிழ்நாடு கடல்சார் வாரியம் சார்பில் கடல் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்த ராமேஸ்வரம் கன்னியாகுமரிக்கு ஆன்மிக சுற்றுலா படகு சவாரி

* ரூ.13 கோடியில் மிதவை ஜெட்டி பாலம் அமைக்கும் பணி விரைவில் துவக்கம்

உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளும், ஆன்மிக பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் விளங்குகிறது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ராமேஸ்வரம் தீவில் கடல் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 2022, ஜூலை மாதம் ராமேஸ்வரம் தீவில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக, அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தனர்.

இதனிடையே கடந்த ஆண்டு அக். 14ம் தேதி நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒன்றிய அரசால் துவங்கப்பட்டது.தமிழக அரசு சார்பில் இந்தியா – இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கும் நோக்கில், ராமேஸ்வரம் – தலைமன்னார், ராமேஸ்வரம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராமேஸ்வரத்தில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்க மற்றும் குடிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்த ஆய்வுகள் கடந்த சில மாதங்களாக நடக்கிறது. இதற்கு படகு பாலம் கட்டும் இடங்களை தேர்வு செய்து ஐஐடி குழுவினர், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே மணல் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே ஆன்மிக சுற்றுலா படகு சவாரியை துவக்க கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது.

கடலில் வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு பயணம் குறித்து தமிழ்நாடு கடல்சார் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாலங்கள் அமைக்கும் இடங்களை தேர்வு செய்து ஐஐடி குழுவினரிடம் மணல் ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் ஜெட்டி பாலம் அமைக்க சாத்திய கூறுகளை ஐஐடி குழுவினர் விரைவில் மணல் ஆய்வு செய்ய உள்ளனர். இதுபோல் அக்னிதீர்த்தக் கடற்கரை – தனுஷ்கோடி வரையிலும், தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் – தேவிபட்டினம் நவபாஷான வரையிலான சுற்றுலா படகு சவாரி இயக்குவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதால் அதிகாரிகளின் நேரடி ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து அக்னிதீர்த்தக் கடல்பகுதியில் தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐஐடி நிபுணர்கள் குழு கடலுக்கு அடியிலும், கரையிலும் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். ஐஐடி குழுவினர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் அதிகாரிகள் ராமேஸ்வரம் துறைமுக அலுவலகம், துறைமுக அதிகாரிகள் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து அதில் படகு சேவைக்கு அலுவலக பணிகள், கட்டிடங்கள் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக ஒன்றிய அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் மூலம் சிறுதூர சுற்றுலா படகு சவாரியை துவக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் அக்னிதீர்த்தக் கடற்கரை – தனுஷ்கோடி வரையிலும், வில்லூண்டி தீர்த்தம் – தேவிபட்டினம் நவபாஷாணம் வரையிலும் படகு சவாரியை துவக்க உள்ளது.

இதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே மிதவை பாலம் அமைக்க சுமார் ரூ.6 கோடியும், தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தக் கடலில் மிதவை பாலம் அமைக்க சுமார் ரூ.7 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இரு இடங்களிலும் மிதவை ஜெட்டி பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கவுள்ளதாக தமிழ்நாடு கடல்சார் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் தீவில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் அடுத்தடுத்த திட்டங்கள் சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

The post தமிழ்நாடு கடல்சார் வாரியம் சார்பில் கடல் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்த ராமேஸ்வரம் கன்னியாகுமரிக்கு ஆன்மிக சுற்றுலா படகு சவாரி appeared first on Dinakaran.

Tags : Rameswaram Kanyakumari ,Tamil Nadu Maritime Board ,
× RELATED கடலூரில் 40 மில்லியன் டன் சரக்குகளை...