பெரும்பூ நாரை என்பது நாரை குடும்பத்தைச் சேர்ந்த பறவையாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் ஒன்றரை மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கருநிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழ்பவை. இவை தமிழகத்திலுள்ள கோடியக்கரை வன உயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகானவை ஆகும். இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரே செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.
பூநாரைகள் எளிதில் நீந்தக்கூடியன. சற்று ஆழமான நீரில் இரை தேடும்போது இதன் வால் மட்டும் நீருக்கு வெளியேயும், உடல் முழுவதும் நீருக்குள்ளும் இருக்கும். இந்த முக்குளித்த நிலையிலேயே புழுக்களை அரித்து உண்ணும். செங்கால் நாரைகள் வாத்து பறப்பது போன்ற அமைப்பிலோ அலையலையான நீண்ட சாய்வுக் கோடுகளாகவோ வேகமாகச் சிறகுகளை அடித்துப் பறந்து செல்லும். ஒடுங்கிய கழுத்தை நீட்டிப் பறக்கும்போது சிவந்த கால்களையும் சேர்த்துப் பின்னால் நீட்டிக்கொள்ளும். இதன் அலகு ஒரு வடிகட்டி போல செயல்படும். சிறு நண்டு, கூனிறால்கள், பூச்சிகள், புழுக்கள், நிலப்புழுக்கள், நீர்த்தாவரங்களின் விதைகள், அழுகிப் படிந்த பொருட்கள் இவற்றின் உணவுப் பொருட்களாகும்.
The post பெரும் பூநாரை (Greater Flamingo) appeared first on Dinakaran.