தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மாவட்டத்தில் சிறுதானிய விழா ஒலகடம், அம்மாபேட்டையில் வளர்ச்சி திட்ட பணிகள்

ஈரோடு,செப்.7: தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சிறுதானிய விழாவை துவக்கி வைத்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, சிறுதானிய விழா,ஈரோடு, திண்டல், வேளாளர் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: தாளவாடி வட்டத்தில் உள்ள மல்லியம் துர்க்கம் என்ற மலை கிராமத்திற்கு ஆய்விற்கு சென்றபோது, அங்கிருந்த மலைவாழ் மக்கள் சிறுதானியத்தால் சமைக்கப்பட்ட உணவினை வழங்கினர். நகரப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிகள் இருந்தாலும், சிறுதானிய உணவை உண்ணும்போது, மிகவும் ஆரோக்கியமாக வாழலாம்.இதில், கம்பு உடலுக்கு தெம்பினைத் தரும்.சாமை உண்டால் ஆமை வயது.

திணை இதயத்திற்கு துணையாகும்.வரகு உண்டால் வாருங்காலம் பார்க்கலாம்.கேழ்வரகு,சர்க்கரை நோய் விலக்கும். உணவில் சிறுதானியம்,வாழ்வில் ஆரோக்கியத்தை தரும். சிறுதானியம்,நம் முன்னோர்களின் உணவு மந்திரம். சிறுதானியங்கள் சிறிய விலையில் பெரிய பலன்களைத் தருகின்றது. சிறுதானிய உணவு பல நோய்களுக்கும் தீர்வாக உள்ளது.சிறுதானியங்களே சத்துக்களின் ஊற்றாகும். எனவே,நாம் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, சிறுதானிய உணவிற்கு மாறவேண்டும். இந்த, சிறுதானிய திருவிழாவில் நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சிறுதானியங்களைப் பயன்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. அரசின் நோக்கம் என்பது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றையும் தாண்டி, ஒவ்வொரு குழந்தையின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவதே ஆகும்.

அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடுடைய – 6 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவை மாதந்தோறும் கணக்கெடுக்கப்படுகிறது. இக்குழந்தைகளை ஆரோக்கியமான குழந்தைகளாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்.கர்ப்பிணி தாய்மார்கள் சத்தான உணவுகளை உண்ணும்போது, பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானதாக பிறக்கும். எனவே, இங்கு வருகை தந்திருக்கும் ஊட்டச்சத்து துறை மாணவர்கள் சிறுதானியம் என்பதை வார்த்தையில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும்,உங்கள் இல்லத்திலும், உற்றார் உறவினர்களிடமும் சிறுதானியத்தின் பயனை எடுத்துரைக்க வேண்டும். உணவில் சிறுதானியத்தை சேர்த்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து அவர், சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த சிறுதானியத்தால் செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களையும் சுவைத்துப் பார்த்தார். முன்னதாக, திண்டல், அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், திண்டல், அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவகாமி, வேளாளர் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி, மாணவிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு மாவட்டத்தில் சிறுதானிய விழா ஒலகடம், அம்மாபேட்டையில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: