பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி- விற்பனை

ஈரோடு, செப். 18: தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. இது குறித்து, ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த கொலு பொம்மைகள் கண்காட்சி அக்டோபர் 25 வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் காகித கூழ் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட லட்சுமி, சரஸ்வதி, துர்கை, ஸ்ரீனிவாச கல்யாணம், கிருஷ்ணன், அனுமன் சேவை, சப்தகன்னிகள் உள்ளிட்ட மரச்சொப்பு செட் மற்றும் மரப்பாச்சி பொம்மைகள் உள்ளிட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் மிகச் சிறிய பொம்மைகள் முதல் 2 அடி உயரம் வரையிலான கொலு பொம்மைகள் உள்ளன. இந்த வருடம் புது வரவாக புத்து அம்மன், அஷ்டவராகி, அயோத்தி ராமர், சூர்ய ரதம், சதுர் புஜ கருடாழ்வார், குறி சொல்லும் அம்மன், கண்ணப்ப நாயனார் செட், தெப்பக்குளம் செட், திருச்சி உச்சிப்பிள்ளையார் செட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ரூ. 100 முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலான விலையிலான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் வாங்கும் கொலு பொம்மைகளுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி- விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: