துபாய், தாய்லாந்தில் இருந்து சரக்கு கப்பலில் கடத்தி வந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 1 கோடி போலி சிகரெட்கள் பறிமுதல்: கடத்தல் கும்பலை பிடிக்க தீவிரம்

சென்னை: சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து போலி சிகரெட்கள் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தனிப்படை அமைத்து, விமான நிலையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் சரக்கு கன்டெய்னர் பார்சல்களை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் வந்தது.

அதில் வந்த கன்டெய்னர்களை அதிகாரிகள் சந்தேகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அதில் சில கன்டெய்னர்களில் ரூ.10 கோடி மதிப்புடைய 67.5 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த சிகரெட் அனைத்தும் இந்தியாவில் உள்ள சிகரெட்டுகள் போல், போலியான தயாரிப்புகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்த கன்டெய்னர்களை டெலிவரி எடுக்க வருபவர்களை கையும் களவுமாக பிடிக்க சில நாட்கள் காத்திருந்தனர்.

ஆனால் கடத்தல் ஆசாமிகள், அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு சிகரெட்களை டெலிவரி எடுக்க வராமல் தலைமறைவாகி விட்டனர். எனவே, அதிகாரிகள் ரூ.10 கோடி மதிப்புடைய 67.5 லட்சம் போலி சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி, துபாயிலிருந்து மற்றொரு சரக்கு கப்பல், சென்னை துறைமுகத்திற்கு வந்தது. அதில் வந்த கன்டெய்னர்களை அதிகாரிகள் சோதித்த போது, கன்டெய்னர் பகுதியில் பண்டல் பண்டலாக ஏராளமான போலி சிகரெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.5 கோடி மதிப்புடைய 30 லட்சம் போலியான இந்திய சிகரெட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

* உடல்நிலை பாதிக்கப்படும்
வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும், இந்த போலியான இந்திய சிகரெட்களை புகைப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இதேபோல் தரம் குறைந்த சிகரெட்களை, இந்திய சிகரெட்டுகள் போல் தயார் செய்வதால் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மத்திய புலனாய்வு துறையினர் கூறுகின்றனர்.

இதனால் இந்த போலி சிகரெட்டுகள் தயாரித்து, இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டு வரும் கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்து, அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

The post துபாய், தாய்லாந்தில் இருந்து சரக்கு கப்பலில் கடத்தி வந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 1 கோடி போலி சிகரெட்கள் பறிமுதல்: கடத்தல் கும்பலை பிடிக்க தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: