முதல்வர் சித்தராமையா பதவி விலககோரி பாஜ-மஜத சார்பில் பெங்களூரு-மைசூரு பாதயாத்திரை: பதிலடி கொடுக்க காங்கிரஸ் சார்பிலும் போட்டி மாநாடு

பெங்களூரு: மைசூரு மாநகர வளர்ச்சி குழுமத்தில் நடந்துள்ள முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையாவை பதவி விலககோரி பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் பெங்களூரு-மைசூரு வரை பாத யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு போட்டியாக பாஜ ஆட்சியில் நடந்த முறைகேடு கண்டித்து காங்கிரசும் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது.
மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் ( மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறி வருகிறது.

ஆனால் தனது மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மூடாவின் சட்ட விதிமுறைகள் பின் பற்றி தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் நான் முதல்வராக இருந்த போது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. பாஜ ஆட்சி காலத்தில் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் முதல்வரின் விளக்கத்தை ஏற்காத எதிர்கட்சிகள், இந்த புகாரில் முதல்வர் பதவி விலக வேண்டும்.

முறை கேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சட்டப் பேரவையில் கடந்த புதன்கிழமை இதே பிரச்சினை எழுப்பி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. எதிர்கட்சிகள் கோரிக்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் சித்தராமையா திட்ட வட்டமாக நிராகரித்தார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர். அவையில் இருந்து வெளியே வராமல் இரவு-பகல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் பேரவையில் மீண்டும் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனிடையில் மழைக்கால கூட்டத்தொடரை ஒரு நாள் முன்னதாக தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதில் அதிருப்தியடைந்த பாஜ மற்றும் மஜத தலைவர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

* கூட்டணி கட்சிகள் பாதயாத்திரை:
இதனிடையில் மூடா முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையாவை பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து பெங்களூருவில் இருந்து மைசூரு வரை பாத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு 20 கி,மீட்டர் தூரம் என்ற வகையில் 6 அல்லது 7 நாட்கள் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. பாதயாத்திரை இம்மாதம் 31 அல்லது ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு கெங்கேரியில் இருந்து தொடங்கும் பாதயாத்திரை மைசூரு மாநகரில் உள்ள மூடா அலுவலகம் வரை செல்கிறது. வழியில் தாலுகா தலைநகரங்களில் சிறியளவில் பொதுக்கூட்டம் நடத்தி, ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை மக்களிடம் எடுத்துகூறவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. பாதயாத்திரையின் இறுதி நாளில் மைசூருவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சரும் மாநில மஜத தலைவருமான எச்.டி.குமாரசாமி உள்பட இரு கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

பாதயாத்திரை நடத்துவது தொடர்பாக நேற்று பாஜ மற்றும் மஜத தலைவர்கள் முதல் கட்ட ஆலோசனை நடத்திய நிலையில் நாளை இரண்டாவது கட்ட ஆலோசனை நடக்கிறது. மாநில பாஜ தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மஜத சட்டப்பேரவை கட்சி தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை பெங்களூருவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதில் ஓன்றிய அமைச்சர்கள் எச்.டி.குமாரசாமி, பிரகலாத் ஜோஷி உள்ளிப்பட இரு கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

* காங்கிரஸ் போட்டி மாநாடு:
இதனிடையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜ-மஜத கூட்டணி கட்சிகள் பெங்களூரு-மைசூரு வரை பாத யாத்திரை நடத்துவதற்கு போட்டியாக மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2023 வரை நடந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பெங்களூரு-மைசூரு வரை பாத யாத்திரை நடத்துவது அல்லது மைசூருவில் பிரமாண்ட மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மைசூருவில் மாநாடு நடத்துவது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் லட்சுமண் மற்றும் முன்னாள் அமைச்சர் தன்வீர்சேட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டொரு நாளில் மாநாடு தொடர்பாக ஆய்வு அறிக்கையை தயாரித்து முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வரும் கட்சியின் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் ஒப்படைக்கிறார்கள். அதன்பின் மாநாடு தேதி முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் சார்பில் தெரியவருகிறது.

The post முதல்வர் சித்தராமையா பதவி விலககோரி பாஜ-மஜத சார்பில் பெங்களூரு-மைசூரு பாதயாத்திரை: பதிலடி கொடுக்க காங்கிரஸ் சார்பிலும் போட்டி மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: