கொரோனா நிதியை கையாண்டதில் பாஜ ஆட்சியில் ரூ.1000 கோடி முறைகேடு: நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிக்கையில் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜ பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிவந்த நிலையில், எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சியில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக, நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிக்கை அடிப்படையில் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. பாஜ ஆட்சியில் கொரோனா நிதியை கையாண்டது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி மைக்கேல் டி குன்கா தலைமையில் ஒரு குழுவை காங்கிரஸ் அரசு அமைத்தது. அந்த குழு அதன் இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, ஆயிரம் கோடி ரூபாய் ஆவணங்கள் எதுவுமின்றி முறைகேடாக கையாளப்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், அதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது.

மைக்கேல் டி குன்காவின் இடைக்கால அறிக்கைப்படி, மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதில், ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு மீதும், முதல்வர் சித்தராமையா மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அரசுக்கு பாஜ அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், பாஜ ஆட்சியின் இந்த முறைகேடு காங்கிரஸ் தரப்பில் பாஜவிற்கு பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

The post கொரோனா நிதியை கையாண்டதில் பாஜ ஆட்சியில் ரூ.1000 கோடி முறைகேடு: நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: