ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறியது போல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் சம ஊதியம் வழங்க முடியாது: அரசுக்கு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் கடிதம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நிலவும் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஹேமா கமிட்டி அறிக்கையில் சில சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஊதியம் வழங்குவதில் கடும் பாகுபாடு நிலவுகிறது என்றும், அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கக் கூட்டம் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் கொச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறியிருப்பதுபோல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் வழங்க முடியாது என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ சினிமா துறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் சாத்தியமே இல்லாதது.

ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்தக் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. ஒவ்வொரு படத்திலும் மார்க்கெட் மதிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நடிகர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஊதியத்தை நிர்ணயிப்பது தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும். சில சினிமாக்களில் ஆண்களை விட அதிகம் ஊதியம் வாங்கும் பெண்களும் இருக்கிறார்கள். மேலும் கதையிலும், கதாபாத்திரத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது கேலிக்கூத்தானதாகும்.செவி வழி தகவல்கள் தான் ஹேமா கமிட்டி அறிக்கையில் பெரும்பாலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சினிமா செட்டுகளில் பெண் கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறியது போல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் சம ஊதியம் வழங்க முடியாது: அரசுக்கு மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: