121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

ஹத்ராஸ்: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இந்த விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் இதில் நிர்வாக குறைபாடுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். உபி மாநிலம் ஹத்ராசில் போலே பாபா என்ற சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கடந்த 2ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 80,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆனால்,2.5 லட்சம் பேர் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று ஹத்ராஸ் வந்தார். டெல்லியில் இருந்து கார் மூலம் வந்த ராகுல் காந்தி அலிகார் அருகே உள்ள பிலக்னா கிராமத்துக்கு காலை 7.15 மணிக்கு வந்தார். அந்த மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்தார். அப்போது தங்களுக்கு நேர்ந்த துயரங்களை அவர்கள் எடுத்து கூறினர். அதன் பின்னர் காலை 9 மணிக்கு ஹத்ராஸ்,வைபவ் நகர் காலனியில் உள்ள கிரீன் பார்க் பகுதிக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் பேசிய ராகுல் காந்தி,‘‘ கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடினேன். நிர்வாக தரப்பில் பல குறைபாடுகள் இருந்தன. நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் எதையும் போலீசார் செய்யவில்லை என மக்கள் தெரிவித்தனர். ஏராளமானோர் பலியாகி உள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களுடைய நிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விபத்தில் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இதனால் நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும்.பலியானோர் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடம் கழித்தோ வழங்கினால் அதில் எந்த பலனும் இல்லை. எனவே, நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும். இதை நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை. நிர்வாக தரப்பில் பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதில் ஏற்பட்டுள்ள தவறுகளை கண்டுபிடித்து அவற்றை நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி,ஹத்ராசில் உள்ள முக்கிய சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வைபவ் நகரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* போலே பாபா எங்கே? அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை
ஹத்ராஸ் விபத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளிக்கு எதிராக போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், அரியானாவுக்கும் போலீஸ் படை சென்றுள்ளது. சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தலைமை ஏற்பாட்டாளர் தேவபிரகாஷ் மதுக்கர் என்பவர் பெயர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை.

இந்த வழக்கை பதிவு செய்துள்ள சிக்கந்தரராவ் போலீஸ் நிலைய அதிகாரிகள் 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். விசாரணை நடத்த சாமியாரையும் தேடி வருகிறோம். மேற்கு உபி மற்றும் கிழக்கு உபியில் உள்ள மாவட்டங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், அரியானாவுக்கும் போலீஸ் படைகள் சென்றுள்ளன’’ என்றார்.

உபி அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் அதிகாரியும் ஆக்ரா மண்டல போலீஸ் அதிகாரியுமான அனுபம் குல்ஷ்ரேஸ்தா, ‘‘ஹத்ராஸ் கலெக்டர், எஸ்பி ஆகியோர் அரசுக்கு ரகசிய அறிக்கைகள் அனுப்பி உள்ளனர். 90 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதில்,பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விபத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது’’ என்றார்.

The post 121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: