இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் தலைவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்ட ஒன்றிய அரசு, நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது.

அதன்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வரும் 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது. இதுஒருபுறம் இருக்க நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என்று குஜராத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை நேற்று தாக்கல் செய்துள்ளது.

அதில், “நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது. முறைகேடுகள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதனை முழுமையாக ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது. நீட் தேர்வுகள் வௌிப்படைத் தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றி உள்ளோம். தேர்வுகளை திறம்பட நடத்த பரிந்துரைகளை அளிக்க உயர் மட்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

The post இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: